Published : 10 Apr 2015 02:45 PM
Last Updated : 10 Apr 2015 02:45 PM
இளம் பாடகர் பிரதீப் குமார் “ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா” என உச்சஸ்தாயி குரலில் பாடி தமிழ் சினிமா இசை ரசிகர்களைக் கிறங்கடித்தார். இப்போது “அருணகிரி பெருமாளே” எனத் திருப்புகழைப் பாடி உலக மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுவருகிறார்.
500 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்து திருப்புகழை அருளிய அருணகிரிநாதரின் இசைப் பயணத்தைப் பூர்வா புரொடக் ஷன்ஸ் எனும் தன் இசை நிறுவனத்தின் மூலம் ஒரு இசை ஆவணப் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் பிரதீப் குமார். அதற்கான தயாரிப்பு செலவுகளை எப்படிச் சமாளிப்பது எனத் திகைத்தபோது கிரவுட் ஃபண்டிங் பெறலாம் என ஐடியா தந்தார் பிரதீப்பின் அமெரிக்க நண்பர் மற்றும் இப்படத்தின் இயக்குநரான எலியாஸ் போகியுலன்.
“மிகக் குறுகிய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பத்து லட்சத்துக்கும் அதிகமாக நிதி உதவி கிடைத்தபோதுதான் திருப்புகழின் சக்தி புரிந்தது. இது எங்களுக்குக் கிடைத்த வரவேற்பல்ல. அருணகிரிநாதருக்குக் கிடைத்தது” என்கிறார் பிரதீப். இந்த இசை ஆவணப் படத்தை உருவாக்க சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அவர் நடந்தே சென்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அருணகிரிநாதர் சென்ற எட்டு முக்கிய ஸ்தலங்களுக்கும் நேரடியாகச் சென்று ஒவ்வொரு இடத்திலும் அங்கு உருவாகிய திருப்புகழ் பாடலைத் தன் மனோலயத்தில் இசை அமைத்து, பாடி பதிவு செய்திருக்கிறார்.
ஒன்றா, இரண்டா!
திருச்சியைச் சேர்ந்த பிரதீப் குமார் பலர் மனதில் இடம்பிடித்தது மெட்ராஸ் படத்தில் பாடிய பாடலின் வழியாகத்தான். ஆனால் அட்டக்கத்தியில் “ஆசை ஒரு புல்வெளி” பாடல் தொடங்கி முண்டாசுப்பட்டி-ல் “காதல் கனவே தள்ளிப் போகாதே”, சமீபத்தில் எனக்குள் ஒருவனி-ல் “பூ அவிழும் பொழுதில்” என இளம் இசை ரசிகர்களைக் கவர்ந்த பாடல்கள் பல பாடியிருக்கிறார். ஜிகர்தண்டா படத்துக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ஆடியோ இன்ஜினீயரிங் படித்த இவர் தொடர்ந்து இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனோடு இணைந்து பின்னணி இசையிலும் ஈடுபட்டு வருகிறார்.
கர்னாடக வாய்ப்பாட்டு இசைக் கலைஞர், கித்தார் மற்றும் ஸ்லைட் கித்தார் கலைஞர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், தமிழ் இசை ஆய்வாளர் இப்படிப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர் இவர். தன்னுடன் கச்சேரிகளில், பேண்ட் இசைக் குழுக்களில் பாடிவந்த கல்யாணி நாயரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 2014-ல் குக்கூ படத்தில் “ஆகாசத்த… நான் பாக்குறேன்…” பாடலைப் பாடி நம்மைத் தாலாட்டியவர்கள் இவர்கள் இருவரும்தான்.
இது தவிர ப்ளூஸ், ஜாஸ் போன்ற மேற்கத்திய இசைகளையும் கற்றுத் தேர்ந்தவர். தொடர்ந்து ’ஹார்மோனைஸ் பிராஜெக்ட்’, ’ஷான் ரால்டன் அண்டு பிரண்ட்ஸ்‘ போன்ற தனி இசைக் கலைஞர்களின் பேண்ட்களில் உற்சாகமாகப் பங்கேற்று வருகிறார். உலக நாடுகள் பலவற்றில் பியூஷன் இசைக் கச்சேரிகள் நடத்திவருகிறார்.
தமிழ் இசை தாகம்
பாரம்பரிய கர்னாடக இசையில் கித்தார் மற்றும் டிரம்ஸ் போன்ற மேற்கத்திய இசைக் கருவிகளைப் புகுத்தினால் புதுமை படைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் தான் ஆரம்ப நாட்களில் இருந்ததாக வெளிப்படையாகப் பேசுகிறார் பிரதீப். “2013-ன் தொடக்கத்தில் என்னுடைய தேடல் மாறியது. என் சிறுபிராயம் முதல் எத்தனையோ அற்புதமான தமிழ்ப் பாடல்களை எனக்குக் கற்றுத்தந்த குரு ஜே.வெங்கடராமனைத் தேடிச் சென்றேன். அதன் பிறகு பிறப்பால் தமிழன் என்ற அடையாளம் மட்டுமில்லாமல் உண்மையிலேயே தமிழ் இசை தாகம் என்னைப் பற்றிக்கொண்டது” எனப் பரவசமாகப் கூறுகிறார்.
உலக இசையில் திருப்புகழ்
டி.எம்.எஸ்ஸின் திடகாத்திரமான குரலில் கேட்ட “முத்தைத்தரு பத்தித் திருநகை. அத்திக்கிறை சத்திச் சரவண” பாடலை ஒரு இளைஞர் அநாயாசமாகப் பாடுவதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்பாடலின் இசை நுணுக்கங்கள் மட்டுமின்றி, அதன் பின் உள்ள வரலாற்றையும் மிகச் சரளமாக எடுத்துரைக்கிறார். இசை ஜாம்பவான்கள் பலர் திருப்புகழைத் திரையிசையிலும் தனி இசையிலும் பதிவுசெய்திருக்கும்போது நீங்கள் எதற்காகத் திருப்புகழைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டபோது, “ திருப்புகழின் ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு சந்தத்தில் (தாளம்) அமைத்திருக்கிறார் அருணகிரிநாதர்.
ஆனால், அவர் எந்தப் பாடலுக்கும் ராகத்தை நிர்ணயிக்கவில்லை. ஏனென்றால், அவர் திருப்புகழைச் சொந்தம் கொண்டாடவில்லை. உலகுக்குத் தாரை வார்த்திருக்கிறார். அங்குதான் ஒரு படைப்பாளியின் சுதந்திர வெளி திறக்கிறது. பாரம்பரியமான முறையில் பாடப்பட்டுவரும் திருப்புகழை உலக இசையின் தாக்கங்கள் கொண்ட ஒரு தற்கால இசைக் கலைஞன் எப்படி அணுகலாம் என யோசித்தேன். திருப்புகழை என் இசையில் பாடத் தொடங்கினேன்” என்கிறார்.
திருவண்ணாமலையில் திருப்புகழை ஆராயத் தொடங்கிய பிரதீப் தொடர்ந்து புராணக் கதைகள், செவிவழிச் செய்திகள், ஆய்வாளர்களின் குறிப்புகள் இப்படிப் பல்வேறு கோணங்களை உள்வாங்கத் தொடங்கினார். “இருப்பினும் இவை அனைத்தையும் கடந்து அருணகிரிநாதர் எனும் தமிழ் இசை மேதையின் வாழ்வை அவர் பாடல்கள் வழியே நேரடியாக அறியலானேன்” என்கிறார்.
காதுகளுக்கு இனிமை அளிக்கும் இசை ஆல்பமாக மட்டும் இல்லாமல் இசை இயக்கத்தின் வரலாறை ஆவணப்படுத்தியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT