Published : 17 Apr 2015 02:11 PM
Last Updated : 17 Apr 2015 02:11 PM
ஏப்ரல் 23- உலக புத்தக நாள்
கவிதை பாடும் புலவர்களுக்கு அந்தக் கால மன்னர்கள் பொற்கிழி வழங்குவது வழக்கம். இந்தக் காலத்திலும் ஒரு பாண்டியன் சென்னையில் இருக்கிறார். புத்தகங்களைத் தேடி ஓடும் வாசகர்களுக்கு இவரும் பரிசில்களை வழங்குகிறார். இவருடைய பொக்கிஷ அறை முழுக்க நிறைந்திருப்பவை புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள். அந்தப் புத்தகங்களைப் பரிசில் என்று சொல்வது சாலப் பொருந்தும், காரணம் எல்லாமே அரிதானவை.
சென்னை அசோக் நகர் - கே.கே. நகர் இணையும் காமராஜர் சாலையில் 32 ஆண்டுகளுக்கு மேலாக ஆதி பராசக்தி பழைய புத்தகக் கடையை நடத்திவரும் நூல் பாண்டியனை, புத்தக வியாபாரி என்று சுருக்கிவிட முடியாது. மின்நூல்களும் இணையமும் கோலோச்சும் இந்தக் காலத்தில் மறுபதிப்பு இல்லாத நூல்களை, அதிலும் முதல் பதிப்பு நூல்களைச் சேகரித்து விற்பவர் அபூர்வமானவர்தானே.
புத்தகங்கள் மீது சின்ன வயசு முதலே இவர் கொண்ட காதலின் அடையாளமாக, வாடிக்கையாளர்கள் வெறும் பாண்டியனை, ‘நூல் பாண்டியனாக' மாற்றி கௌரவித்து இருக்கிறார்கள்.
புத்தகம் காய்க்கும் மரம்
“நான் எத்தனையோ வேலைக்குப் போனாலும், கடைசியா புத்தக விற்பனைக்கே வாழ்க்கை இழுத்துட்டு வந்திடுச்சு" என்று சொல்லும் இவர் பழம் பெரும் பதிப்பாளர் முல்லை. பி.எல். முத்தையாவின் உறவினர்.
1980-களில் பி.டி. ராஜன் சாலை பிளாட்பாரத்திலும் அருகிலிருந்த மரத்திலும் புத்தகங்களை அடுக்கி, பிரம்மாண்டத் திறந்தவெளி கடையாக இவர் வைத்திருந்த முறை, அந்தப் பகுதியைக் கடக்கும் ஒவ்வொருவரையும் ஒரு நிமிடம் நிறுத்தி பார்த்துவிட்டுப் போக வைத்துக்கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் பிளாட்பாரத்திலேயே தனது ஷோரூமை நடத்தி வந்த இவர், தற்போது அதற்கு எதிரே உள்ள வணிக வளாகத்தில் கடையை நடத்திவருகிறார். ஒவ்வொரு நாளும் புத்தகங்களைத் தேடி இவருக்கு வரும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளே, இவரிடம் உள்ள புத்தகங்களின் மதிப்புக்குக் கட்டியம் கூறுகின்றன.
மொய்க்கும் வாசகர்கள்
கடந்த 30 ஆண்டுகளாகக் காமிக்ஸ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சினிமா கதை எழுத்தாளர்கள், துணை இயக்குநர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள் என பல்வேறு வகை புத்தகப் பிரியர்கள் இவருடைய கடையைத் தேடிவருகிறார்கள். காமிக்ஸ் புத்தகங்களுக்காக இவரிடம் பதிவு செய்திருப்பவர்கள் 240 பேர். பழைய ரஷ்யாவின் மிர் பதிப்பகத்தின் தமிழ் புத்தகங்களைத் தேடி இவரிடம் பதிவு செய்துள்ளவர்கள் 90 பேர். கிடைக்கும் புத்தகங்களைப் பதிவு செய்த வரிசைப்படிதான் விற்பனை செய்கிறார்.
பல பதிப்பகங்களில் அவர்கள் பதிப்பித்த புத்தகங்களின் முதல் பதிப்பு இருக்காது. அதையெல்லாம் தேடி இவரிடம்தான் வருகிறார்கள். இவரிடம் உள்ள முதல் பதிப்பு புத்தகங்கள் மட்டும் 1 லட்சம்.
200 வருடங்களுக்கு முன் அச்சான நூல்கள், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 115 அரிய நாடகப் பிரதிகள், 1826-ல் இலங்கையில் பதிப்பான தமிழ் பஞ்சாங்கத்தின் முதல் பதிப்பு என இவரிடம் இருந்து கைமாறிய அரிய புத்தகங்களின் பட்டியலுக்கு முடிவில்லை.
நடக்க இடமில்லை
"என் கடையைத் தேடி வந்தவர்களுக்கு, அவர்கள் விரும்பிய புத்தகமோ, அதற்கு இணையான புத்தகமோ நிச்சயம் கிடைக்கும்" என்று அடித்துச் சொல்கிறார். அதற்கு இவரிடம் உள்ள 50 லட்சத்துக்கும் குறையாத புத்தகங்கள் உத்தரவாதம் தருகின்றன. கடை தவிர்த்து ஒரு கிடங்கில் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்.
வீட்டில் ஜன்னல், டிவி ஸ்டாண்ட், கட்டிலின் கீழே, பரண், பால்கனி எனப் பார்க்கும் இடமெல்லாம் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதற்கு இடையேதான் இவரும் இவருடைய மனைவி விஜயலட்சுமி, கல்லூரியில் படிக்கும் மகன்கள் கார்த்திக், கதிரவன் ஆகியோர் வாழ்ந்துவருகிறார்கள்.
"வீட்டில் நடக்க மட்டும்தான் இடம் இருக்கு. குடோனில் அதுக்கும் இடம் கிடையாது" என்று சிரித்துக்கொண்டே சொல்லும் இவர், குடும்ப ஆதரவு இல்லேன்னா எதுவுமே செய்திருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறார்.
அபார ஞாபகம்
இவ்வளவு புத்தகங்களை வைத்திருக்கிறாரே, குறிப்பிட்ட புத்தகத்தை யாராவது கேட்டால் எப்படி எடுத்துக் கொடுக்க முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். இவருடைய ஞாபகசக்தி அசாத்தியமானது. அதை இவருடைய மூலதனம் என்றே சொல்லலாம்.
"50 சதவீதப் புத்தகங்களை எங்கே வைத்திருக்கிறேன் என்று ஞாபகம் இருக்கும். அது மட்டுமில்லாம துறை வாரியா புத்தகங்களைக் கட்டி கட்டித்தான் வைப்பேன். அதனால, சீக்கிரமா தேடிடலாம். அப்புறம் எவ்வளவு மதிப்புமிக்க தாள்ல அச்சான புத்தகத்தையும் ஆறு மாசத்துக்கு நகர்த்தாம வச்சிருந்தா, அது கலர் மாறி வீணாத்தான் போகும். புத்தகங்களுக்கு இடையே இயற்கையான காற்றுப் போக்குவரத்து இருக்க வேண்டும். மூணு மாசத்துக்கு ஒரு தடவையாவது எடுத்துத் தட்டி வைக்கணும்" என்று புத்தகங்களைப் பராமரிக்கும் யோசனையையும் தருகிறார்.
ஒற்றை ஆள்
கதைப் புத்தகங்கள், துறை சார்ந்த புத்தகங்கள்தான் இவருடைய பலம் என்றாலும், சமீபகாலமாகப் பள்ளி, கல்லூரிப் போட்டித் தேர்வு புத்தகங்களை அதிக அளவு விற்பதால் மட்டுமே கடையைத் தொடர்ந்து நடத்த முடிகிறது. அதிலும்கூடப் பெரிய லாபம் பார்ப்பதில்லை.
"பெரும்பாலும் புதுப் புத்தகம் வாங்க முடியாதவங்கதான், பழைய புத்தகங்களைத் தேடி வர்றாங்க. அவங்ககிட்ட எப்படி அதிக விலைக்கு விற்க முடியும்?" என்று கேட்கும் இவர், எதைப் படித்தால் நல்லது எனப் புத்தகம் வாங்க வருபவர்களுக்கு இலவச ஆலோசனைகளை வாரி வழங்குகிறார். தன்னிடம் இல்லாத புத்தகங்களை இரண்டு, மூன்று நாட்களில் வாங்கித் தந்துவிடுகிறார். இத்தனைக்கும் இவரிடம் வேலைக்குக்கூட ஆள் கிடையாது.
இடப் பிரச்சினை
அவருக்கு உள்ள முக்கியமான பிரச்சினை ஒன்றே ஒன்றுதான். புத்தகங்களைச் சேகரித்து வைக்கக் கட்டுப்படியாகும் விலையில் இடம் கிடைக்காமல் இருப்பதுதான் அது. அதன் காரணமாகவே, 25 சதவீதப் புத்தகங்களைக் குறைத்துவிட்டார்.
இவரைப் போன்றவர்களுக்கு அரசே சலுகைக் கட்டணத்தில் இடவசதி செய்து தருவது பழைய புத்தக விற்பனையாளர்களுக்கு மட்டுமில்லாமல், பழைய புத்தகங்களையே நம்பியிருப்பவர்களும் உதவியாக இருக்கும்.
"சேர்த்து வைக்கிறதுக்கான இடம் மட்டும்தான் பிரச்சினை. மற்றபடி ஒரு மனிதன் பிறக்கும் கருவறைக்கு முன், கல்லறைக்குப் பின்வரை எந்தெந்த விஷயங்கள் பற்றி புத்தகங்கள் தேவைப்படுமோ அத்தனை புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றன. அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுப்போகும் சொத்துன்னு ஒண்ணு இருந்தா, அறிவைத் தரும் புத்தகங்கள்தான் சார்," என்று ஆத்மார்த்தமாகப் பேசும் இவருக்கு, சென்னையில் இன்று நடைபெறும் சென்னை புத்தகச் சங்கமத்தில் ‘புத்தகர்' விருது வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: 94444 29649
படம்: எஸ். ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT