Published : 24 Apr 2015 03:16 PM
Last Updated : 24 Apr 2015 03:16 PM
சாதாரண, சிறிய வாடகை வீடு. அங்கு நுழைந்தவுடன் நம்மை வரவேற்பவை அழகாக பைண்டிங் செய்து அடுக்கப்பட்டிருக்கும் காமிக்ஸ் புத்தகங்கள். இவற்றைச் சேகரித்திருப்பவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கலீல். காமிக்ஸ் மீதுள்ள காதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்திருக்கிறார்.
வீட்டில் இடம் இல்லாததால்…
மதிய நேரத்தில் தனது காமிக்ஸ் ஆர்வம் பற்றி நம்மிடம் பேசத் தொடங்குகிறார் கலீல். “நான் 8-வது வரைதான் படித்துள்ளேன். எனது தொழில் ஆட்டோ ஓட்டுவதாக இருந்தாலும், சின்ன வயதில் இருந்தே காமிக்ஸ் மீது எனக்கு ஒரு விருப்பம், ஈடுபாடு.
சரியாக 1985-ல் எனது சகோதரன் மூலம் காமிக்ஸ் படிக்கத் தொடங்கினேன்” என்கிறார். அந்தக் காலகட்டத்தில் லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என ஏராளமான காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாயின. கிடைக்கும் சிறு தொகையிலும் ஏராளமான காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கத் தொடங்கினார் கலீல். அடுத்தடுத்து ஏராளமான புத்தகங்கள் சேரத் தொடங்கின. ஆனால், வீட்டில் இட வசதி இல்லாததால் 1988-ல் தன்னிடம் இருந்த புத்தகங்களை எடைக்குப் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்போது நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்ததால் புத்தகங்களை விற்பது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒருகட்டத்தில் கலீலின் விருப்பம் காமிக்ஸ் என்பது அவருக்கே புரியவந்தது. “91-ல் புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் இருந்து அபூர்வ காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன. அவற்றை அப்படியே விருப்பத்துடன் தேடி,தேடி வாங்கிச் சேகரிக்கத் தொடங்கினேன். காமிக்ஸ் தேடி எனது பயணம் சென்னை, சேலம், வேலூர், ஈரோடு எனப் பல ஊர்களுக்கும் சென்றது” என்கிறார்.
காமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு வலைப்பூ
ஆரம்ப நாட்களில் கறுப்பு - வெள்ளையில் மட்டுமே வெளிவந்த காமிக்ஸ் பின்னர் வண்ணங்களிலும் வரத் தொடங்கின. பிற மொழிகளில் ஏராளமாக வந்தன. இந்த வண்ணங்களால் ஈர்க்கப்பட்ட கலீல் தமிழைத் தாண்டிப் பிற மொழி காமிக்ஸ்களைத் தேடத் தொடங்கினார். “இப்படியாக மூலத்தைத் தேடத் தொடங்கினேன். பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ரத்தப் படலம் கதை ரொம்பவும் பிடிக்கும். இக்கதை பிரான்ஸில் 19 பாகங்களாக வெளிவந்துள்ளது” எனும் கூடுதல் தகவலும் அளிக்கிறார்.
ஆரம்ப நாட்களில் கறுப்பு - வெள்ளையில் மட்டுமே வெளிவந்த காமிக்ஸ் பின்னர் வண்ணங்களிலும் வரத் தொடங்கின. பிற மொழிகளில் ஏராளமாக வந்தன. இந்த வண்ணங்களால் ஈர்க்கப்பட்ட கலீல் தமிழைத் தாண்டிப் பிற மொழி காமிக்ஸ்களைத் தேடத் தொடங்கினார். “இப்படியாக மூலத்தைத் தேடத் தொடங்கினேன். பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ரத்தப் படலம் கதை ரொம்பவும் பிடிக்கும். இக்கதை பிரான்ஸில் 19 பாகங்களாக வெளிவந்துள்ளது” எனும் கூடுதல் தகவலும் அளிக்கிறார்.
அடுத்து காமிக்ஸ் பிரியர்களைக் கண்டறியவும் தனது எண்ணத்தைப் பகிரவும் ‘முதலை பட்டாளம்’ என்ற வலைப்பூவைத் தொடங்கினார் கலீல்.
“எனக்குக் கௌபாய் கதைகள் மிகவும் பிடிக்கும். டெக்ஸ் வில்லர், லக்கிலுக், ப்ரூனோ பிரேசில் எனப் பலரை மிகப் பிடிக்கும். எனக்குப் பிடித்த கதாநாயகர்கள் காமிக்ஸில்தான் அதிகம்” என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்.
சுண்டல் சுருட்ட அல்ல
முதலில் சில காமிக்ஸ் புத்தகங்களை வாடகைக்குத் தந்த கலீல், பலருக்கு காமிக்ஸ் புத்தக அருமை தெரியவில்லை எனக் கோபம் கொள்கிறார். 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தகங்கள் தொடங்கி பழங்கால காமிக்ஸ் நிறைய இவரிடம் உள்ளன. இவ்வாறாக 2,000-க்கும் அதிகமான காமிக்ஸ் புத்தகங்கள் வைத்துள்ளார் கலீல். “அக்காலத்தில் ரூ. 1க்கு விற்ற காமிக்ஸ் இப்போது பல ஆயிரம் ரூபாய் விலைக்குப் போகிறது. என்னிடம் உள்ள காமிக்ஸை வைத்து ஒருவர் பி.எச்டி செய்துள்ளார்” எனப் பெருமை கொள்கிறார்.
அதே சமயம், “முன்பெல்லாம் காமிக்ஸ் அதிகமாக வந்தன. தற்போது அந்த அளவுக்கு வருவதில்லை. பழைய புத்தகக் கடையிலும் முன்பு காமிக்ஸ் அதிகமாகக் கிடைக்கும். தற்போது அவ்வாறு கிடைப்பதில்லை. சுண்டல் மடிக்கவும், வேஸ்ட் பேப்பராகவும் போட்டு விடுவது மிக வருத்தமாக இருக்கிறது” என ஏக்கத்துடன் பேசுகிறார்.
மொத்தத்தில் காமிக்ஸ் சேகரிப்பதுதான் கலீலுக்கு மிகப் பிடித்தமான விஷயம். அது காதல்போல. “பணம் சம்பாதிக்கலாம் சார். ஆனால், இதுபோன்ற சின்னச் சின்னச் சந்தோஷங்கள் எல்லாருக்கும் கிடைத்துவிடாது” எனப் பரவசம் பொங்கப் பேசுகிறார் இந்தக் காமிக்ஸ் காதலன்.
படங்கள்: எம். சாம்ராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT