Published : 03 Apr 2015 01:21 PM
Last Updated : 03 Apr 2015 01:21 PM
மண்ணில் ஊன்றப்பட்ட ‘மல்லர் கம்பம்’ வானத்தை நோக்கி கம்பீரமாக நிற்கிறது. அதைச் சுற்றிலும் அரைக்கால் டவுசர் அணிந்த சிறுவர்கள், இளைஞர்கள் என 15 பேர் வரிசையில் தயாராக நிற்கின்றனர். பயிற்சியாளர் முத்துக்குமார் சமிக்ஞை கொடுத்தவுடன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து சென்று கம்பத்தில் ஏறுகின்றனர்.
முதலில் சிறுவர்கள் ஏற, அடுத்ததாக இளைஞர்கள் அவர்களைத் தாங்கிப் பிடிக்க, இருவர் தலை கீழாகத் தொங்குவது எனக் கம்பத்தின் மேலிருந்து கீழ் வரை ஆக்கிரமித்து சாகசங்களைத் தொடங்குகின்றனர். தொடர்ந்து ஒவ்வொருவரும் விதவிதமான சாகசங்களை ஆசன வடிவில் செய்து அசத்துகின்றனர். இவையெல்லாம் திருச்சியை அடுத்த மணப்பாறை தியாகேசர் ஆலை பள்ளி வளாகத்தில் வாரம்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன.
கம்பம் மேல் சாகசம்
சிலம்பம், கபடி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மக்கலை வரிசையில் மனிதனின் உடலையும் மனதையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது மல்லர் கம்பம் எனும் விளையாட்டு. இது குறித்து நம்மிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்கிறார் தலைமையாசிரியர் அருள் அரசன். தரையில் ஊன்றிய உறுதியான நீண்ட தடிமனுடைய மரத்தில் ஏறிச் சாகசங்கள் செய்து காட்டும் விளையாட்டுதான் மல்லர் கம்பம்.
தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சிலம்பத்துக்கும் மல்லர் கம்பம் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சிலம்பத்தில் வீரர் நின்று கம்பை சுழற்ற வேண்டும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரர் அதன் மேல் சுழன்று சாகசம் புரிவார். மன்னர்கள் காலத்தில் போர் வீரர்களின் உடல் மற்றும் மனவலிமை வலுப்படுத்த இந்த விளையாட்டு தோன்றியதாகக் கூறப்படுகிறது.
கம்பத்தைப் பார்த்து அச்சம்
மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றைக்கும் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலத்தில் மல்லர் விளையாட்டை அங்கீகரித்துப் போட்டிகள் நடத்துகின்றனர். மகாராஷ்டிராவில் எந்த ஒரு விழாவிலும் இறை வணக்கத்துக்குப் பின் ஐந்து நிமிடம் மல்லர் பயிற்சி கட்டாயம் இடம்பெறும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் கலையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிகளில் தங்கள் மாணவர்களுக்குக் கடும் போராட்டத்துக்கு நடுவே கற்றுக் கொடுப்பதாகக் கூறுகிறார் பயிற்சியாளர் முத்துக்குமார்.
முத்துக்குமார்
சென்னை உடற்கல்வியியல் கல்லூரியில் மல்லர் கம்பம் விளையாட்டைக் கற்றுக்கொண்ட இவர், கிட்டத்தட்ட 12 வருடங்கள் போராட்டத்துக்குப் பின் 2009-ல் முதல்முறையாகத் தான் பணிபுரியும் தியாகேசர் பள்ளியில் மல்லர் கலையைப் பயிற்றுவிக்கத் தொடங்கியுள்ளார். “மற்ற விளையாட்டில் ஆர்வமாக இருந்த மாணவர்கள் பலர் மல்லர் கம்பத்தைப் பார்த்துப் பயந்து ஒதுங்கினார்கள். முதலில் 10 பேர் வந்ததே ஆச்சரியமாக இருந்த நிலை மாறி, தற்போது 50 மாணவர்கள், 10 மாணவியர் உள்பட 60 பேர் பயிற்சி பெறுகின்றனர்” என மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.
வெறும் ‘ஷோ’ அல்ல
மல்லர் விளையாட்டுக்கு மிகவும் முக்கியமானது கம்பம். இது பெரும்பாலும் வைரம் பாய்ந்த தேக்கு மரத்திலானதாக இருக்க வேண்டும். தேக்கு மரத்தில் சாகசம் செய்யும்போது வீரர்களுக்கு சிராய்ப்பு ஏற்படாது. முறிந்தோ அல்லது வளைந்து விடும் என்ற அச்சம் இல்லை. திருப்பராய்துறை, உத்திரமேரூர் உள்பட தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மல்லர் கம்பம் சாகச விளையாட்டு இப்போதும் கற்றுத் தரப்படுகிறது.
“தமிழகத்தைப் பொறுத்தவரை விழாக்களில் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் ஒரு ‘ஷோ’வாகத்தான் இது நடத்தப்படுகிறது தவிர வட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் மல்லர் கம்பம் விளையாட்டை அரசு அங்கீகரித்து போட்டிகள் நடத்தினால் இன்னும் ஏராளமான மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று பயனடைவதுடன், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் இந்த கலையை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு செல்ல முடியும்” என்கிறார் முத்துக்குமார்.
கிரிக்கெட் விளையாட மாட்டோம்!
மணப்பாறை அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் திருமுருகன் மல்லர் கம்பம் சாகசம் செய்வதில் வல்லவர். பிரபலமான விளையாட்டுகள் பல இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் போது தியாகேசர் ஆலை பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரான இவரை மல்லர் கம்பம் விளையாட்டு கவர்ந்தது எப்படி என்றதற்கு, “கூலி வேலைக்குச் செல்லும் என் பெற்றோருக்கு உதவியாக விடுமுறையில் விவசாய வேலைக்குச் செல்வது வழக்கம்.
அப்படியே கிணற்றில் குளிப்பது, மரம் ஏறுவதென என்னுடைய கிராம வாழ்க்கையே சாகசம் நிறைந்ததுதான். பள்ளியில் மல்லர் கம்பம் விளையாட்டை எங்கள் உடற்கல்வி ஆசிரியர் அறிமுகம் செய்தபோது நகர்ப்புற மாணவர்கள் பலர் பயந்து ஒதுங்கினார்கள். ஆனால் மனதாலும், உடலாலும் வலுவாக இருந்த நான் மிகவும் சுலபமாகக் கம்பத்தில் ஏறிவிட்டேன்” என்கிறார் உற்சாகமாக.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவரான ராமசாமி கூறுகையில், “ஆரம்பத்தில் சற்றுக் கடினமாக இருந்தது, தொடர் பயிற்சிக்குப் பின் இப்போது சாதரணமாகக் கம்பத்தில் ஏறி சாகசம் செய்கிறேன். என்னை விடச் சிறியவர்களுக்கு ஆசிரியர் இல்லாதபோது சீனியர் மாணவர்கள் சொல்லிக் கொடுப்போம்.
இதுதவிர எங்கள் பள்ளியில் கோ-கோ, ஹாக்கி, குத்துச் சண்டை போன்ற விளையாட்டுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும். கிரிக்கெட் விளையாட்டை மறந்தும்கூட மைதானத்தில் மாணவர்கள் விளையாடுவதைப் பார்க்க முடியாது” என்றவரைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT