Last Updated : 13 Mar, 2015 02:17 PM

 

Published : 13 Mar 2015 02:17 PM
Last Updated : 13 Mar 2015 02:17 PM

கார்ப்பரேட் உலகின் கண்ணாடி

வருடா வருடம் பொறியியல் பட்டம் பெறும் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்ப்பது கால் செண்டர்களில்தான். படிக்கும் காலத்திலும், பி.பி.ஓ வேலையில் சேர்ந்த புதிதிலும் இந்த இளைஞர்கள் சுமந்து கொண்டிருக்கும் கனவு பிறகு என்னவாக மாறுகிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது “சம்முக்கா” நாவல்.

‘ஐ.டி.உலகம் குறித்த தமிழின் முதல் உளவியல் நாவல்’ என்ற அடைமொழியோடு வெளிவந்திருக்கும் சம்முக்கா சென்னை பெசன்ட் நகரில், கடலுக்கு மிக அருகில் இருக்கும் ஈஸி சொல்யூஷன் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் சண்முகக்கனி எனும் சம்முக்கா, கவுதமன், சம்முக்காவின் காதலியாகும் தோழி கீதா ஆகியோர் பற்றியது.

கிராம வாடை வீசும் முகம், நகர்ப்புறத்தின் மேதாவித்தனமோ, மெல்லியதாகக் கன்னத்தில் மின்னலாகத் தோன்றி மறையும் கிருதாவோ, அழகுக்காகச் சிரைக்காமல் விட்ட முகமூடிகளோ இல்லாதவன் சம்முக்கா என வர்ணிக்கும் போதே நாவல் ஆசிரியர் ராஜ்மோகன் பெரு நகரில் ஹைஃபை வாழ்க்கை என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டப்போகிறார் என்பது புரிந்துவிடுகிறது.

“அனைவருக்கும் அடையாள அட்டைகள். இது என்ன? கழுத்தில் மாட்டிக் கொண்டு அலைவது? என்று கொதிப்பவர்களுக்கு அடையாள அட்டை இடுப்பில் தொங்கும்.” “யாரை வேணுமின்னாலும் எங்க கம்பெனில பேரைச் சொல்லி கூப்பிடலாம். இந்த மிஸ்டர், சார், ஐயாங்கிறதெல்லாம் இங்க கிடையாது.” போன்ற வரிகளில் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலைபார்க்கும் துடுக்கான இளைஞர்களின் மனவோட்டத்தைத், துல்லியமாக நகல் எடுக்கிறார் ஆசிரியர்.

“வேற பி.பி.ஓ. கம்பெனில உள்ள மாதிரி இங்க இங்கிலீஷ்ல நல்லாப் பேசணும்கிற அவசியம் கிடையாது!...புதுசா வர்றவங்களுக்கு வேலை ராத்திரிதான். அப்படின்னா பகல் பூரா நீங்க என்னென்னவோ பண்ணலாம்… சரி சார்! நாங்க எப்ப தூங்குறது?” என்பது போன்ற உரையாடல்கள் கார்ப்பரேட் அதிகாரிகள் அப்பாவியான இளைஞர்களை எப்படி மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கின்றன.

இன்றைய கார்ப்பரேட் உலகில் சுழலும் இளைஞர்களின் காதல், நட்பு, வேதனை, வெறுமை, ஏக்கம், இறுதியில் நிறைவான புதிய மாற்றுப் பாதை எனப் பல கோணங்களை ரசித்து, லயித்துப் படிக்கும் விதத்தில் தந்திருக்கிறது சம்முக்கா நாவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x