Published : 06 Mar 2015 11:24 AM
Last Updated : 06 Mar 2015 11:24 AM
மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டுக் கல்லூரிகளில் மாணவிகளுக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். டி.வி.யில் மகளிர் தின சிறப்புத் திரைப்படங்களாக, ‘மகளிர் மட்டும்’, ‘த்ரீ ரோஸஸ்’, ‘சினேகிதியே’ மாதிரியான படங்கள் ஒளிபரப்பாகும். எப்.எம்.கள் சமையல் போட்டிகள் நடத்திப் பரிசு கொடுப்பார்கள். இனியும் இப்படித் தான் கொண்டாட வேண்டுமா? என்பதில் இளைஞர்களுக்கு மாற்றுக் கருத்துகள் உள்ளன. குறிப்பாக ஆண்களை அடியோடு ஒதுக்கிவிட்டு, பெண்கள் மட்டுமே ஒன்று கூடிக் கொண்டாடுவது குறித்த விவாதம் எழுந்துவருகிறது.
“மார்ச் 8 மகளிர் தினம் என்பதைத் தாண்டி, அந்த நாள் எதைக் குறிக்கிறது என்ற புரிதல் பலருக்கு இல்லை. முதலில் அதன் நோக்கம் பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதில் ஆண்களையும் இணைத்துக் கொண்டு, இந்த விழாவைப் பரவலாக்குவதுதான் புத்திசாலித்தனம்” என்கிறார் கல்லூரி மாணவி ரோஸ் ரிபானா.
இன்றைக்குமா?
ஆனால், ஆண்கள் உள்ளே நுழைவதை அனுமதிக்கவே கூடாது என்கிறார் சுவாதிப்ரியா. அதற்கு அவர் கூறும் காரணம், “தொழிலாளர்கள் உரிமைக்காகக் கொண்டாடுகிற மே தினத்தை, முதலாளிகளை மேடையில் வைத்துக் கொண்டே கொண்டாடினால் எப்படியிருக்கும்? அதைப் போலதான் ஆண்களை வைத்துக் கொண்டே, பெண்களின் உரிமைகள் பற்றிப் பேசுவதும். நான் படிப்பது இருபாலர் கல்லூரி. இங்கே எந்த நிகழ்ச்சி என்றாலும், ஆண்களின் ஆதிக்கம்தான் இருக்கும். இந்த ஒரு நாள் மட்டுமாவது நாங்கள் நாங்களாக இருந்துவிட்டுப் போகிறோம்”.
அதை அப்படியே ஆதரிக்கிறார் ஜோதிகண்ணன். “மகளிர் தினம் பெண்களுக்கானது. தனியாகக் கொண்டாடுவது அவர்களது உரிமை. அதில் ஆண்கள் தலையிட வேண்டாம். வேண்டுமென்றால், ஆண்களுக்காக ஒரு தினத்தைக் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்” என்கிறார்.
எரிச்சலும், பொறாமையும்
ஆனால், ஆண்களையும் மகளிர் தின விழாவுக்கு அழைக்க வேண்டும் என்றே விரும்புகிறார் எம்.எம்.கங்காதரன். “எங்கள் கல்லூரியில் ஆண்டுதோறும் மகளிர் தின விழா நடக்கிறது. ஆனால், ஒருமுறைகூட ஆண்களை உள்ளே அனுமதித்ததில்லை. அவர்கள் போடும் ஜாலியான கூச்சல் கலையரங்கில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அப்போது எங்களுக்கு எரிச்சலும், பொறாமையும்தான் வரும். எங்களை உள்ளே அனுமதித்தால் நாங்களும் அவர்களை உற்சாகப்படுத்துவோமே? குறைந்தபட்சம் மகளிர் தினம் எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவாவது உதவுமே?” என்கிறார் இவர்.
முதலாவது வீட்டில்
நாட்டிலும், வீட்டிலும் பெண்ணுரிமைக்காக முதலில் குரல் கொடுத்தது பாரதியார், பெரியார் போன்ற ஆண்களே. அப்படியிருக்க பெண்ணுரிமையில் அக்கறை கொண்ட எத்தனையோ ஆண்கள் அவர்களை ஊக்குவித்துப் பாராட்டத் தயாராக உள்ளனர் என்பதைப் பெண்கள் உணர வேண்டும் என்பதே கே.சரவணனின் எண்ணம்.
மகளிர் தினத்தன்று தோழி முதல் ஆசிரியை வரை அத்தனை பேருக்கும் பரிசோ இனிப்போ கொடுக்க வேண்டும் என ஆசைப்படுபவராம் சுரேஷ். “அன்னையர் தினம் அளவுக்குகூட மகளிர் தினம் இன்னமும் குடும்பத்துக்குள் நுழையவில்லை. பெண்களை மதிக்காத வீட்டில் தான், அதே மனோபாவம் கொண்டு ஆண்கள் பிறக்கிறார்கள். பெண்களை மதிக்கக் கற்றுத் தரும் விழாவாகக் குடும்பத்துக்குள் இதனைக் கொண்டாடலாம்” என்கிறார் இவர்.
பெண்கள் தினம் கொண்டாடப்படும் விதத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார் எம்.கார்த்திகா. “மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்குச் சம உரிமை கிடைத்ததற்காக உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடுவது அபத்தமானது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் எல்லாவற்றிலும் பெண்களுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பு கொடுத்துவிட்டு இதைக் கொண்டாடலாம். 33 சதவிகித இட ஒதுக்கீடே 25 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறபோது, ஒப்புக்காக விழா கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை” என அழுந்தந்திருத்தமாகக் கூறுகிறார் கார்த்திகா.
சின்ன கோடு, பெரிய கோடு
ஊடகங்கள் மகளிர் தினத்தை இன்னமும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நினைப்பவர் மதுரை ரேடியோ மிர்ச்சியின் ஆர்.ஜே. ஏழிசைவாணி. “இது எங்க ஏரியான்னு சொல்லி, மகளிர் தினத்தை கேர்ள்ஸ் மட்டும் கொண்டாடுவது, அவ்வளவு சரியில்லைன்னு தான் சொல்வேன். ஒரு லைன் சின்னதா பெரிசான்னு தெரிஞ்சிக்கிடணும்னா கூடப் பக்கத்துல இன்னொரு லைன் இருக்கணும். அந்த ஒப்பீட்டுக்காகவாவது, கண்டிப்பா ஆண்களையும் விழாவில் சேர்த்துக்கணும்” என்கிறார்.
இவர்கள் சொல்வதை எல்லாம் வைத்து ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. மகளிர் தின விழாவை இனியும் சம்பிரதாய விழாவாகக் கொண்டாடாமல் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்க வேண்டும். அடுத்து, ஆண்களுக்கு ரெட் கார்டு காட்டுவதை நிறுத்துவிட்டு, அவர்களுக்கும் இன்விடேஷன் கார்டு கொடுத்தால் பெண்ணின் பெருமை அவர்களுக்கும் புரியும்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT