Published : 31 May 2014 11:16 AM
Last Updated : 31 May 2014 11:16 AM

கடவுளின் காலத்தில்

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையிலான ஒரு பாதையில்தான் கோவில்களுக்கும் தர்ஹாக்களுக்கும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் எனக்குத் தேவையான நம்பிக்கை, ஆற்றல் மற்றும் வரத்தை அவை தந்திருக்கின்றன. பல சமயங்களில் வெறுமையையும் அசூயையையும் அளித்திருக்கின்றன. பெரும்பாலான மக்களுக்கு இது பொதுவான அனுபவமாகவே இருக்கும்.

ஆனால் திருவிழாக் காலங்கள், சிறப்பு நாட்களில் கோவிலுக்குச் செல்வதும், கூட்டத்தோடு முண்டியடித்துத் தரிசனம்செய்வதும் இன்னமும் அசௌகரியத்துக்குரியதாகவே இருக்கிறது. ஆனால் வாழ்க்கை போலவே - அனுபவங்கள் சார்ந்து எல்லாமும் திரும்பத் திரும்ப நிகழ்கிறது என்றாலும் தவிர்த்துவிட முடிவதில்லை.

எனக்கு அப்போது ஐந்து வயது இருக்கலாம். எங்கள் ஒன்றுவிட்ட அண்ணனுக்கு அரசு வேலை கிடைத்ததற்கு திருச்செந்தூர் கோவிலில் நேர்த்திக்கடனாகக் காவடி எடுத்தனர். கோவிலின் இருண்ட உட்பிரகாரத்தில் தொடங்கிய காவடி ஆட்டம் கடலுக்கு அருகே இருக்கும் பிரகாரத்துக்கு வந்தது. அருள் வந்த மூர்க்கத்தில் வேகமாக ஓடிச்சென்ற என் அண்ணனை உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து கடலில் தாழ்த்திக் கொல்லப்போகிறார்கள் என்று அந்தப் பருவத்தில் உண்மையாகவே நினைத்தேன்.

இதுபோன்ற கோவில் சடங்குகள், உற்சவங்களைப் பொறுத்தவரையில் எப்போது என்ன அசம்பாவிதம் நேருமோ என்ற பயத்தையே குழந்தைப்பருவத்திலிருந்து உணர்ந்து வந்திருக்கிறேன். என் பூர்வ நினைவில் கோவில் அச்சத்துக்குரிய இருண்ட படிமமாக உறைந்து இருக்கலாம்.

பொதுக் காலம்

ஆலயங்களைப் பொறுத்தவரை அங்கு நுழைந்தவுடன் ஏழை, பணக்காரர், குழந்தை, பெண், முதியவர்கள், ஊனமுற்றவர் எல்லோரும் அவரவர் உலகங்களிலிருந்தும், அவரவர் காலப்பிரமாணத்திலிருந்தும் வெளியேறிவிடுகிறார்கள். சில, பல வித்தியாசங்கள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் ஒரு ‘பொது’ உலகம் மற்றும் ‘பொது’க் காலத்தில் அவர்கள் நிற்கிறார்கள்.

இருட்டு, கசகசப்பு, விளக்க இயலாத காத்திருப்பு, உணர்வுகள், மனிதர்கள், வியர்வைகள், பாலினங்கள், வர்க்கங்கள், அசூயை, காமம், தண்டனை அனைத்தும் கலந்த சகதியில் கடவுளை நோக்கி யாத்திரை செய்கிறோம். பெரும்பாலான இந்தியர்களுக்கு இன்னும் தீர்த்த தலங்களும் உண்டு. தீர்த்த யாத்திரைகளும் உண்டு. வாழ்க்கை யாத்திரையைக் குறுகிய வடிவில் பிரதிபலிப்பதாக இருக்கின்றன கோயில்கள். புல்லாய், பூடாய், புழுவாய் மரமாகி, வல் அசுரராய் தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் பிறந்திளைக்கிறோம்.

கடவுளின் வீட்டில் குளிர்சாதன வசதி

இன்று பிரபலமான கோவில்கள் பலவற்றிலும் மூலவரைத் தவிர வேறு சந்நதிகளைப் பெரும்பாலான சமயங்களில் பக்தர்கள் தரிசிப்பதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பக்தர்களின் வருகை அதிகரித்த கோவில்களில் மூலவரின் இருப்பிடம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏழையையும், பணக்காரரையும் அதிகாரம் உள்ளவரையும் அதிகாரம் அற்றவரையும் பிரிப்பதும், பரஸ்பரம் இரு உலகங்களையும் மூடிவைத்திருப்பதும் குளிர்சாதன அறையின் கதவுகள் தாம். அதனால் கடவுளின் அறையும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பிரபலமான கோவில்கள் பலவற்றிலும் மூலவரைத் தவிர வேறு சந்நதிகளைப் பெரும்பாலான சமயங்களில் பக்தர்கள் தரிசிப்பதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பக்தர்களின் வருகை அதிகரித்த கோவில்களில் மூலவரின் இருப்பிடம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏழையையும், பணக்காரரையும் அதிகாரம் உள்ளவரையும் அதிகாரம் அற்றவரையும் பிரிப்பதும், பரஸ்பரம் இரு உலகங்களையும் மூடிவைத்திருப்பதும் குளிர்சாதன அறையின் கதவுகள் தாம். அதனால் கடவுளின் அறையும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

தரிசனம்

கடைசியில் கடவுளின் கருவறைக்குள் எல்லாரும் அனுமதிக்கப்படுகிறோம். கடவுளின் காலப்பிரமாணத்திற்கு வெகு அருகே துல்லியமாக வந்துவிட்டோம். அத்தனை புராணங்களும் நம் பெருமிதங்களும் நம் ஆசையும் சேர்ந்த எல்லையற்ற அதிகாரம் கொண்ட மகாராஜா வடிவில் கடவுள் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். ஓரிரு நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம். இதுதான் வேண்டுதலின், துய்ப்பின், காத்திருப்பின் உச்சம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை. எல்லாரும் மலையிலிருந்து இறங்கித்தான் ஆகவேண்டும். கடவுள் விடைகொடுக்கிறார். ஒரு களைப்பும் நிறைவும் வெறுமையும் சேர்ந்து சூழ்கிறது. கடவுளின் அரசாங்கத்திலிருந்து கடைசிக் காற்று எனது முதுகை வருடுகிறது.

கடவுளின் அருகிலும் சுற்றுப்பிரகாரங்களிலும்

கோவிலில் பணிபுரிபவர்களுக்கு அது ஒரு அலுவலகம் போல இருக்கிறது. சுற்றி கடை வைத்திருப்பவர்கள், பூ விற்பவர்கள், ஒவ்வொரு முகமாகப் பார்த்து பக்தர்களின் இரக்கத்தின் எல்லை வரை பின்தொடரும் யாசகப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் யாருக்கும் இதுவரை கடவுள் என்ற நபரே அறிமுகமாகவில்லை. கடவுளுக்கும், கடவுளின்மைக்கும் இடைப்பட்ட பாதையில் என் வாகனத்தில் ஏறி வீடு திரும்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x