Last Updated : 06 Mar, 2015 11:26 AM

 

Published : 06 Mar 2015 11:26 AM
Last Updated : 06 Mar 2015 11:26 AM

டங்கா மாரியில் பட்டையைக் கிளப்பும் எம்.ஜி.ஆர்.

தமிழ்த் திரைப்படங்கள் தொழில்நுட்பத்தில் எவ்வளவோ வளர்ச்சி கண்டுவிட்டன. ஆனால் திரைப் பாடல்களின் காட்சியமைப்புகள் ஆதி காலத்தில் இருந்து பெரிய மாற்றம் அடையவே இல்லை. காதல் பாடல்கள், காதல் தோல்வி பாடல்கள், கதாநாயகன் அறிமுகப் பாடல்கள் போன்றவை பெரிய அளவிலான எந்தவித மாறுபாட்டையும் காணவில்லை. | வீடியோ இணைப்பு கீழே |

புதிது புதிதான இடங்களைக் கண்டுபிடித்துப் பாடல்களைப் படமாக்க முடிந்தவர்களால் காட்சியமைப்பில் புதிய விஷயங்களைக் கையாள முடியவில்லைபோல. எனவே அவற்றை இளம் பார்வையாளர்கள் பத்தோடு பதினொன்றாகக் கருதிவிடுகிறார்கள். புதுசு புதுசாகச் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் போனில் அதே பழைய மாதிரியான பாடல்களைப் பார்ப்பதா எனச் சலித்துக் கொள்கிறார்கள். புத்துணர்ச்சியுடன் ஏதாவது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பயணத்தின்போதோ, ஓய்வின்போதோ பார்க்கும் பாடல்கள் அவர்களைத் தடாலென்று மகிழ்ச்சிக் கடலில் தள்ளிவிட்டுவிட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களது பெரும் பசிக்குத் திரைப் பாடல்களால் தீனி போட முடியவில்லை. கைபேசியில் காட்சிப் படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கு மிகச் சாதாரணமான ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அதில் சிறிய அளவிலான கிளுகிளுப்பு இருந்தால் போதும் கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள். இதனால்தான் ‘வொய் திஸ் கொலை வெறி’ மூலை முடுக்கக்கெல்லாம் பரவியது.

இதுதான் இப்போதைய டிரெண்ட். இதைப் பிடித்துக்கொண்டன சமூக வலைத் தளங்கள். வித விதமான ரீமிக்ஸ்கள் இதில் வலம் வருகின்றன. சமீபத்தில் அனேகனில் ஒலித்த ‘டங்கா மாரி ஊதாரி’ பாடலை எம்ஜிஆர் படக் காட்சிகளுக்குப் பொருத்தி யூடியூபில் வெளியான வீடியோ வாட்ஸ் அப் வழியாகத் தமிழகத்தில் அநேகரைக் களிப்பூட்டியது.

இதே பாடலுக்குத் தமிழ் நடிகர்கள் பெரும்பாலானோர் ஆடிப் பாடும் காட்சிகளாலான வீடியோவும் யூடியூபில் காணக் கிடைக்கிறது. இதைப் போன்ற அநேக வீடியோக்கள் அதில் உள்ளன. எந்திரனின் காதல் அணுக்கள் பாடலுக்கு டி.ராஜேந்தரும் மும்தாஜும் இணைந்து குதூகலப்படுத்துகிறார்கள். அதே எந்திரன் படப் பாடல் காட்சிக்குப் பின்னணியில் தில்லு முல்லு படத்தில் இடம்பெற்ற ‘ராகங்கள் பதினாறு’ பாடல் ஒலிக்க வீடியோ ஒன்று உள்ளது. மின்னலே படத்தின் ‘வசீகரா’ பாடலுக்கு சவுகார் ஜானகி ஆடிப் பாடுகிறார்.

யூடியூப் அசுர வளர்ச்சி கண்ட பிறகு உற்சாகம் கொண்ட இளைஞர்கள் எளிதில் இதைப் போன்ற வீடியோவை உருவாக்கிவிடுகிறார்கள். ஏனெனில் அதற்குத் தேவையான மென்பொருள்களும் இலவசமாகவே கிடைக்கின்றன. ஏதாவது ஒரு பாடலைப் பார்க்கிறார்கள். அதற்குப் பொருந்தும்படியான காட்சிகளை அல்லது அந்தக் காட்சிக்குப் பொருத்தமான பாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

இரண்டையும் இணைத்துப் பதிவேற்றிவிடுகிறார்கள். எந்தச் செலவும் இல்லை. தனக்குப் பிடித்த பாடலுக்குத் தனக்குப் பிடித்த நடிகர் நடிகைகளை ஆடவைத்து விடுகிறார்கள். கோடி கோடியாகச் செலவு செய்த பாடல்கள் தராத மகிழ்ச்சியை இந்தப் பாடல்கள் பார்வையாளர்களுக்குத் தந்துவிடுகின்றன.

இந்த உத்தியை வைத்துத் தான் தங்களுக்குத் திருப்தி தராத படங்களைக் கிழிகிழியெனக் கிழிக்கிறார்கள் பார்வையாளர்கள். திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளை, வசனங்களை வைத்து புகுந்து விளையாடுகிறார்கள். திரைத் துறையில் சிம்ம சொப்பனமாக விளங்கும் படைப்பாளிகளைக்கூட இந்த முகம் தெரியாத பார்வையாளர் பதம் பார்த்துவிடுகிறார்.

நல்ல படங்களைக் கொண்டாடும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடிக்காத படங்களை விமர்சிப்பதையும் தாங்கிக்கொள்ளத் தான் வேண்டியதிருக்கிறது படைப்பாளிகள். திரைத் துறையினரே நக்கல் பிடித்தவர்கள் என்றால் இப்படி வீடியோ உருவாக்குகிறவர்கள் அவர்களைவிட நக்கல் பிடித்தவர்களாக உள்ளனர். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உள்ளான் அல்லவா?