Published : 13 Mar 2015 12:41 PM
Last Updated : 13 Mar 2015 12:41 PM
சைக்கிள் காதலர்கள் கொண்டாடுவதற்குச் சென்னையில் புதிதாக ஓர் இடம் கிடைத்திருக்கிறது. ஆமாம், இனிமேல் சைக்கிள் பிரியர்கள் அனைவரும் ஜாலியாகச் சந்தித்துக்கொள்ள கோட்டூர்புரத்தில் இருக்கும் ‘சைக்ளோ கஃபே’வுக்குச் செல்லலாம்.
இந்தியாவில் சைக்கிள் விற்பனையையும், கஃபேவையும் ஒன்றாக இணைத்து தொடங்கப்பட்டிருக்கும் முதல் ‘சைக்கிளிங் கஃபே’ இதுதான். ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே சென்னைவாசிகளின் ஏகோபித்த வரவேற்பை இந்த ‘சைக்ளோ கஃபே’ பெற்றிருக்கிறது என்பதை கஃபேவுக்குள் நுழைந்தவுடனேயே தெரிந்துகொள்ள முடிகிறது.
வாசலில் அமைந்திருக்கும் சைக்கிள் சாவி பெட்டி, ரிசப்ஷனில் வரவேற்கும் சைக்கிளின் ஹேண்டில்பார், சைக்கிள் சக்கரங்களாலான சாப்பாட்டு மேசை என எந்தப் பக்கம் திரும்பினாலும் சைக்கிளின் அழகான சுவடுகள் நம்மை உற்சாகத்தில் ஆழ்த்திவிடுகின்றன. ‘டிஐ சைக்கிள்ஸ்’ நிறுவனம், ல’அமாந்தியர் ரெஸ்டாரண்ட் நிர்வாகத்துடன் இணைந்து இந்த ‘சைக்ளோ கஃபே’வை ஆரம்பித்திருக்கிறது.
சைக்கிளிங் என்னும் வாழ்முறை
இந்தியாவின் சாலைகளில் பைக்குகளும், கார்களும் ஆற்றில் ஓடும் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்த வெள்ளத்தில் சைக்கிள்கள் எங்கேயோ அடித்துசெல்லப்பட்டன. இந்தத் தலைமுறையில் இருக்கும் பலருக்கும் சைக்கிள் ஓட்டுவது என்பது சிறு வயது நினைவுகளில் ஒன்றாகிபோனது.
ஆனால், இதற்கு மாறாக மேற்கத்திய நாடுகள், சைக்கிள்கள் தங்கள் வாழ்க்கைமுறையில் இருந்து தொலைந்துபோகாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்த சைக்கிளிங் கஃபேக்கள் மிகவும் பிரபலம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, சைக்கிளிங்கைக் கருப்பொருளாக வைத்து ஆரம்பித்திருக்கும் இந்த கஃபே புதுமையானதாகவே இருக்கிறது. “சைக்கிளிங்கை மிக முக்கியமான வாழ்க்கைமுறையாகச் சொல்லலாம்.
நானும் ஒரு ‘சைக்கிளிஸ்ட்’ என்பதால் இந்த சைக்ளோ கஃபே தொடங்குவது தொடர்பாக ‘டிஐ சைக்கிள்ஸ்’ என்னை அணுகியவுடன் உற்சாகமாகிவிட்டேன். சைக்கிள் விற்பனை செய்யும் இடத்தில் சைக்கிளில் அமர்ந்து சாப்பிடுவது என்பது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சியான அனுபவத்தைத் தரும்” என்கிறார் சைக்ளோ கஃபேவின் இயக்குநர் நிதி தடானி.
சைக்கிளிங் கலாசாரம்
சைக்ளோ கஃபேவில் திரும்பிய பக்கமெல்லாம் சைக்கிளிங் கலாசாரம் விதவிதமாக வெளிப்படுகிறது. சைக்கிளிங் பற்றிய ஒளிப்படங்கள், முக்கிய நிகழ்வுகள், புத்தகங்கள் என உலகம் முழுவதும் இருக்கும் சைக்கிளிங் கலாசாரத்தைத் தெரிந்துகொள்ளவும் சைக்ளோ கஃபே உதவுகிறது.
“சைக்கிள் செயின்கள், ஸ்டாண்டுகள், சக்கரங்கள் என எல்லா இடங்களிலும் சைக்கிளின் பாகங்களை வைத்தே வடிவமைத்திருக்கிறோம். ஓர் ஐரோப்பா பாணி சைக்கிளிங் கஃபே எப்படியிருக்குமோ, அப்படித்தான் சைக்ளோ கஃபேவை வடிவமைத்திருக்கிறோம். இங்கே வரும் அனைவருக்கும் சைக்கிள் ஓட்டும் ஆசை நிச்சயமாக வரும்” என்கிறார் நிதி தடானி.
சைக்கிளும், உணவும்
பியான்ச்சி (Bianchi), கேன்னான்டேல் (Cannondale), மங்கூஸ்(Mongoose), ஷ்வின்(Schwinn) போன்ற சர்வதேச சைக்கிள்களும் இங்கே விற்பனை செய்யப் படுகின்றன. இந்த சைக்கிள்களின் விலை ரூ. 20,000த் திலிருந்து ரூ.3.5 லட்சம் வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
“ஒரு கஃபேவின் மெனுவில் இருக்க வேண்டிய உணவுவகைகள் சுவாரஸ்யமான சூழலில் இங்கே கிடைக்கும். பெரும்பாலும் எளிமையான உணவுவகைகளையே தேர்ந்தெடுத்திருக்கிறோம். காபி, பாஸ்தா, பர்கர், பிட்சா, சாலட், சூப், டெஸ்ஸர்ட் போன்ற கஃபே உணவுவகைகளை சைக்ளோ கஃபேவில் சுவைக்கலாம்” என்கிறார் நிதி தடானி.
சென்னைவாசிகளிடம் சைக்கிள் கலாசாரம் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை ‘சைக்ளோ கஃபே’வுக்குக் கிடைத்திருக்கும் உற்சாக வரவேற்பு உறுதிசெய்கிறது.
தொடர்புக்கு:
சைக்ளோ கஃபே, 33/47, காந்தி மண்டபம் சாலை,
கோட்டூர்புரம், சென்னை- 4204 8666.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT