Published : 13 Mar 2015 02:20 PM
Last Updated : 13 Mar 2015 02:20 PM
மதுரை காமராஜர் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறையில் மாலை நேரம் ஆகிவிட்டால் கலைப் பயிற்சிகள் ஆரம்பமாகிவிடும். நாட்டுப்புறவியல் மட்டுமன்றிப் பிற துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளும் தங்கள் வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கோ, விடுதிக்கோ செல்லாமல் நேராகத் துறை வளாகத்தில் கூடிவிடுகின்றனர்.
பின்னர் நடிப்பதற்கான களத்தில் இறங்கும் மாணவர்கள் நடிப்பு மட்டுமன்றிப் பறை, கும்மி, ஒயிலாட்டம் ஆகியவற்றையும் சேர்த்துக் கற்றுக் கொள்கின்றனர். நாட்டுப்புறவியல் துறை ஆய்வு மாணவர் செந்திலிங்கம்தான் அனைத்து மாணவர்களுக்கும் இந்தப் பயிற்சியைக் கற்றுத் தருகிறார்.
மதுரை மாவட்டம் குலமங்கலம் அருகே உள்ள பூதகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சே.செந்திலிங்கம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை நாட்டுப்புற வியல் முடித்த அவர் தற்போது உலகமய மாக்கல் சூழலில் நாட்டுப்புறக் கலைஞர்களின் சமூகப் பண்பாட்டுப் பிரச்சினைகள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மட்டுமன்றிப் பன்முகத் தன்மை கொண்ட கலைஞராகவும் திகழ்கிறார். இதன் முதல் அடித்தளம்தான் பறையாட்டக் கலைஞராக மாறியது.
பள்ளியில் படிக்கும்போது, ஆரம்ப காலங்களில் பக்தி, நாட்டுப்புறப் பாடல்கள் எழுதித் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மூலம் நாடகக் கலைஞராகவும் அறிமுகமானார். பின்னர் அறிவொளி இயக்கத்தில் இணைந்து அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.
அதன் பின்னர் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரைப்பட நடிகர் சண்முகராஜாவின் நிகழ் நாடகக் குழுவில் கலந்துகொண்டு 30 நாட்கள் பயிற்சி எடுத்து முறைப்படி நாடக நடிகரானார். இதன் மூலம் நவீன நாடகங்களைக் கற்றுக்கொண்ட அவர் மேடைகளில் அவற்றை அரங்கேற்ற ஆரம்பித்தார். பழங்குடியின மக்களின் துயரங்கள், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்த நாடகங்களின் வாயிலாகப் பேசிய அவர் தான் சொல்ல வேண்டிய கருத்துகளை நாடகங்கள் மூலமே தெளிவாக எடுத்துக் கூறிவருகிறார்.
காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு செந்தனல் என்ற நாடகக் குழு இவரால் அமைக்கப்பட்டுத் தற்போது செயல்பட்டு வருகிறது. மாலை நேரங்களில் ஓய்வுக்கு இடமின்றிக் கலையைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு பல்வேறு துறைகளைச் சார்ந்தோரும் இங்கே நடிப்புப் பழகி வருகின்றனர். இதனால், மாலை நேரங்களில் ஒரு சினிமா படமெடுக்கும் காட்சிகளை நாம் காணலாம்.
இத்துடன் மதுரையின் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளுக்கும் சென்று அங்குப் பயிலும் மாணவர்களுக்குப் பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மி எனச் சகல நாட்டுப்புறக் கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
பறையில் மிருதங்கம், தபேலா, கர்னாடக இசை எனப் பிற இசைகளையும் வாசித்துக் காட்டுகிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ‘யாத்தி ஒன்ன போல’ என்னும் பெயரில் நாட்டுப்புறப் பாடலுக்கான ஆல்பம் ஒன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள அவர் தற்போது முற்போக்குப் பாடல்கள் அடங்கிய மற்றொரு ஆல்பம் வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்துச் செந்திலிங்கம் கூறியது: பறை என்பது இறப்புக்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி இதைத் தமிழர்களின் கலை என்ற நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். தற்போது பல பள்ளி மாணவர்கள் பறையை விரும்பி கற்றுக் கொள்கின்றனர்.
எனவே, அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கிராமியக் கலைகளை எடுத்துச்செல்ல வேண்டும். இதன் மூலம் கலைகளை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT