Published : 20 Mar 2015 04:56 PM
Last Updated : 20 Mar 2015 04:56 PM
சென்னையின் முக்கிய வீதிகள், கோயில் முகப்புகள், கடைவீதிகள் என 1920-ம் ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அந்த இடங்களில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியைச் சென்னையை அடுத்துள்ள தக்ஷிணசித்ராவில் இம்மாதம் 30 வரை காட்சிக்கு வைத்திருக்கிறார் அனிருத் கணபதி.
பறைசாற்றும் கறுப்பு வெள்ளை
தொன்மையான வரலாற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னை நகரின் குறிப்பிட்ட சில இடங்கள் அடைந்திருக்கும் மாற்றங்களையும் காலம் கடந்தும் மாறாமல் இருக்கும் சில தன்மைகளையும் எடுத்துக் காட்டுவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்கிறார் அனிருத்.
எப்போதுமே கலைத் தன்மைக்கும் கறுப்பு வெள்ளைக்கும் இருக்கும் பிரிக்க முடியாத உணர்வு இந்தக் காலத்தில் நான் எடுக்கும் படங்களுக்கும் இருக்க வேண்டும் என நினைத்தேன். இதற்கு எனக்கு உதவியது, கோவா சென்டரில் நான் படித்த `ஆல்டர்நேட்டிவ் போட்டோகிராபி, 18-ம் நூற்றாண்டில் தொடங்கி 19-ம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இருந்த `கான்டாக்ட் பிரிண்டிங் பிராசஸ்’ என்னும் கலர் பிராசஸ் மூலம் சமீபத்தில் எடுத்த வண்ண படங்களையும் பழமையான கறுப்பு வெள்ளைப் படங்களாக மாற்றமுடியும். இந்த டெக்னிக்கைத்தான் நான் சமீபத்தில் எடுத்த படங்களுக்குச் செய்தேன் என்கிறார்.
கண்காட்சியில் 1920-களில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் படங்களும் சமீபத்தில் அனிருத் எடுத்திருக்கும் கறுப்பு வெள்ளைப் படங்களும் உள்ளன. பழைய படங்களைப் ஒளிப்படக் கலைஞரும் அரிதான ஒளிப்படச் சேகரிப்பாளருமான தேசிகன் கிருஷ்ணனிடம் இருந்து காட்சிக்கு வைத்திருக்கிறார்.
அன்றும் இன்றும்
1920-ல் ஏகாந்தமான கிராமத்தின் பின்னணியில் காட்சி தரும் மயிலாப்பூர் கோயில் குளம், இன்றைக்கும் பெரிய அளவில் மாற்றத்துக்கு உட்படாமல் காட்சியளிக்கிறது. இதேபோல் மொப்ரேஸ் சாலை, சென்ட்ரல் ஸ்டேஷன் போன்ற படங்களும் அந்தக் கால மெட்ராஸையும் இந்தக் காலச் சென்னையையும் நம் கண்முன்னே கொண்டுவருகின்றன.
வழக்கொழிந்து போன லேப்ரட்டரி பிராசஸின் மூலம் வண்ணப் படங்களைக் கறுப்பு வெள்ளைக்கு மாற்றும் வழியும் இருக்கிறதாம். “உப்பு மற்றும் சில்வர் நைட்ரேட் சேர்ந்த கலவையில் வண்ணப்படத்தை நனைத்து, சூரிய வெளிச்சத்தில் எக்ஸ்போஸ் செய்யவேண்டும். சியானோடைப் முறையில், புறஊதாக் கதிர் ஊடுருவும் வகையில் நீலவண்ண கோட்டிங் படத்துக்குக் கொடுக்கப்படும். இதன்மூலம் சியான் நீலவண்ணம் படத்துக்குக் கிடைக்கும். அதன்பின் அதனைத் தேநீர் அல்லது கடுக்காய் சாறு அல்லது காபி போன்றவற்றால் கழுவ வண்ணப் படத்தின் தன்மை மாறி நுணுக்கமான நிற பேதங்களுடன் கூடிய கறுப்பு வெள்ளைப் படமாக மாறிவிடும்” என்கிறார் அனிருத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT