Published : 13 Mar 2015 12:24 PM
Last Updated : 13 Mar 2015 12:24 PM
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையைப் பின்தொடரும் ஒருவரால் அவருடைய சமூக வலைத்தளங்களைப் பின்தொடராமல் இருக்க முடியுமா? அப்படி இசைப் புயலின் அஃபிஷியல் முகநூல் பக்கத்தைத் துழாவியபோது அது கண்ணில் பட்டது. கிளிக் செய்ததும் யூடியூபில் “தரமான பொழுதுபோக்கை அளித்த ஏ.ஆர்.ரஹ்மான், வால்ட் டிஸ்னிக்குச் சமர்ப்பணம்” என்ற வரிகளோடு விரிந்தது வீடியோ.
காவியத் தலைவன் படத்தின் கலாட்டா பாடலான 'ஏ சண்டி குதிர...வாயேண்டீ எதிர...' ஒலிக்கக் கணினி திரையில் சித்தார்த்துக்குப் பதிலாக வால்ட் டிஸ்னியின் அலாவுதீன் எகிறி குதித்தான். அட்டகாசமான மேஷ் அப் (mashup). இதுவரை அந்தப் பாடலின் காட்சிகளைப் பார்த்திராதவர்கள் இதுதான் ஒரிஜினல் என்றே நம்பிவிடுவார்கள்.
உதட்டின் அசைவு, வெவ்வேறு இசை கருவிகளின் ஒலி, பாடல் வரிகளின் அர்த்தம் இப்படி அத்தனையும் கச்சிதமாகப் பொருந்தும்படியாக அலாவுதீன், ஜங்கிள் புக், லயன் கிங், ஹெர்குலிஸ், பாம்பி உள்ளிட்ட அனிமேஷன் படங்களிலிருந்து காட்சிகள் அழகாக எடுத்து தொகுக்கப்பட்டிருந்தன. இது சாதாரண ரீ மிக்ஸ் வீடியோ என்று பார்த்துவிட்டு போக முடியவில்லை. வெறுமனே குறும்பு, விளையாட்டுத்தனத்தைத் தாண்டி அதில் நேர்த்தியும், புத்திக்கூர்மையும், ரசனையும் வெளிப்பட்டது.
இல்லாவிட்டால் ரஹ்மான் அவருடைய அஃபிஷியல் பேஜில் பகிர்ந்திருப்பாரா? அடேங்கப்பா! யாருப்பா இதை வடிவமைத்தது என்று தேடினால், ஐஸ் பாய்ஸ் எண்டர்டெயின்மென்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தும் சுப்பு மற்றும் அவருடைய குழுவினர்களான சரண்யா, கிருஷ்ணா, அருண், அகிலா, தனஞ்செயன் எனும் இளைஞர் பட்டாளம்தான்.
அசலைத் தேடுகிறேன்!
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான திரைப்படத் தயாரிப்பு, தொலைக்காட்சி விளம்பரப்படத் தயாரிப்பு, எதேச்சையான தருணங்கள் (candid moments) படப்பிடிப்பு, இணையதளத்தில் வீடியோக்களை வைரலாக்க பிரத்யேகப் படங்கள் தயாரிப்பு, டீ சர்ட் வடிவமைத்தல், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இப்படிச் சுப்புவும் அவர் ஐஸ் பாய்ஸ் குழுவும் செய்யும் தொழில்நுட்ப சித்து வேலைகள் ஏராளம்.
இத்தனை வேலைகளைச் செய்யும் ஜகஜாலக் கில்லாடிகள் ஏன் ஒரு மேஷ் அப் செய்தார்கள் எனக் கேட்டபோது, “இன்று இருப்பதைக் காட்டிலும் பத்து வருடங்களுக்கு முன்னால் பொழுதுபோக்கு ஊடகங்களில் அசல்தன்மை (originality) இன்னமும் சிறப்பாக இருந்தது என எனக்குத் தோன்றுகிறது. ஆகையால்தான் என் குழந்தைப் பருவம் முதல் நான் பார்த்து, ரசித்து, வியந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தரமான பொழுதுபோக்கை அளித்துவந்த வால்ட் டிஸ்னி ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லும் விதத்தில் ஒரு மேஷ் அப் செய்தேன்” எனப் படு சுறுசுறுப்பாகப் பேசத் தொடங்கினார் சுப்பு.
ஈர்ப்பு, தேடல், புதிர் வேண்டும்…
2013-ல் ஐஸ் பாயிஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கக் காரணம், கடந்த காலத்தின் மீதான ஈர்ப்பும், ஏக்கமும்தான் என்கிறார் இவர். “வீட்டுக்கு வெளியே ஓடி, ஆடி, ஒளிந்து மகிழ்ச்சிப் பொங்க விளையாடும் ஐஸ் பாய்ஸ் எனும் கண்ணாமூச்சி ஆட்டத்தை விளையாடியவன் நான்.
அதைக் கடைசியாக விளையாடிய தலைமுறை எங்களுடையது என்றும் சொல்லலாம். அதே போல அந்தச் சொற்களுக்குள்ளே ஒரு ஈர்ப்பு, தேடல், புதிர் போன்ற பல அர்த்தங்கள் ஒளிந்துள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் எங்களுடைய ஒவ்வொரு படைப்பிலும் பிரதிபலிக்க வேண்டும் என நினைத்து ஐஸ் பாய்ஸ் என்ற பெயரை எங்கள் நிறுவனத்துக்கு வைத்தோம்” என்கிறார்.
டீ சர்ட்டில் புதுமை
இவர்களின் படைப்புகளில் முதலில் நம்மைக் கவர்ந்திழுப்பது டீ சர்ட் டிசைனிங்தான். இணையம், புத்தகம் என் எங்கிருந்தோ வாக்கியங்களை, வடிவங்களைக் கள்ளத்தனமாகப் பதிவிறக்கம் செய்யாமல் சுவாரஸ்யமான கற்பனை திறனோடு அவை ஜொலிக்கின்றன. அத்தனை டீ சர்ட்களுக்கான வடிவங்களைத் தீட்டுபவர் சுப்புதான். சிறுபிராயம் முதல் சுப்புவுக்கு ஓவியம் வரைதல் கை வந்த கலை.
இளங்கலை பட்டப்படிப்பில் கட்டிடக்கலையைத் தேர்ந்தெடுக்க ஓவியம் தீட்டும் ஆர்வம்தான் காரணம் என்கிறார். இவருக்குக் கவிதை எழுதும் பழக்கமும் உள்ளதால் கற்பனைக்குப் பஞ்சமில்லை. 2012-ல் சுட்ட கதை என்ற படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சுப்பு அந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
எல் அண்டு டி, அசோக் லேலண்ட், போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சிறப்புத் திரைப்படங்கள் தயாரிப்பது இவர்களின் மற்றொரு பரிமாணம். நிறுவனத்தின் சாதனைகள், ஊழியர்கள் பணி நியமன அழைப்பு, சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி போன்ற திட்டங்களுக்குக் காட்சி வடிவம் தருகிறார்கள்.
கனவுலகில் கல்யாணம்
இவர்களுடைய கற்பனைத் திறனின் உச்சக்கட்டம் எதேச்சையான தருணங்களைப் படம்பிடிப்பது எனலாம். கல்யாணம், பிறந்த நாள் போன்ற வைபவங்களில் வீடியோ படம் எடுப்பது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நாம் அறிந்ததே. ஆனால் இவர்கள் தீம் வெட்டிங், கேண்டிட் வெட்டிங், கேண்டிட் வீடியோஸ் என முற்றிலுமாக ஒரு புதிய போக்கை முன்வைக்கிறார்கள். உங்கள் திருமண நாள் என்றும் நினைத்து நினைத்து சிலிர்த்துப் போகும் அனுபவமாக அமைய வேண்டும் என நீங்கள் நினைத்தால் இவர்களை அணுகலாம்.
பூலோகத்தில் நிகழும் திருமணத்தைச் சொர்க்க லோகத்தில் நடைபெறும் கொண்டாட்டமாக மாற்றும் அத்தனை வேலைகளையும் செய்துவிடுவார்கள். திருமண அழைப்பிதழ், மணமக்களின் சிகை அலங்காரம், ஒப்பனை முதல் செட் பிராப்பர்ட்டிவரை அத்தனை அம்சங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கலை நயம்மிக்கத் திரைப்படம் போல உங்கள் திருமணத்தைப் புகைப்படம் எடுத்து, வீடியோ படம் பிடித்து பிரமாதமாகத் தருகிறார்கள்.
எப்படி இத்தனை விஷயங்களை உங்களால் கையாள முடிகிறது எனக் கேட்டால், “பார்ப்பதற்கு இவை சம்பந்தமில்லாத பல்வேறு விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் இவை அனைத்துக்கும் மையப்புள்ளி வடிவமைத்தல்தான். அதைவிடவும் முக்கியக் காரணம் என் குழு உறுப்பினர்களில் ஒருவரான என் காதல் மனைவி சரண்யா, மற்றும் என்னுடன் உற்சாகமாக வேலை பார்க்கும் நண்பர்கள்” என்கிறார் சுப்பு.
தொடர்புக்கு: >www.theiceboys.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT