Published : 06 Feb 2015 12:44 PM
Last Updated : 06 Feb 2015 12:44 PM
வாழ்க்கை வேறு. சமூகம் வேறு. சமூகமே சிக்கல் நிரம்பியது, வாழ்க்கை அல்ல. வாழ்க்கை பற்றி நமக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால் வாழ்க்கையின் மீது முழு நம்பிக்கை கொண்டால் வாழ்வது எளிது. சமூகத்தில் ஜாதி, மதம் போன்ற விஷயங்களின் ஆதிக்கம் இருக்கிறது. சமூகம் தன் நம்பிக்கைகளை நம் மேல் திணிக்கிறது. நம் மனத்தைப் பெருமளவுக்கு அது தன் வசமாக ஆக்கிக்கொண்டு விட்டிருக்கிறது. அதனால்தான் நமக்கு நம் மீது நம்பிக்கை இல்லாமல் போகும் நிலை இங்கு நிலவுகிறது.
சமூகம் நமக்குள் திணித்துள்ள நம்பிக்கைகளுடன் நாம் ஒன்றிப் போய்விட்டதால் அவை நமது எண்ணங்கள் என்ற நினைப்பில் வாழ்கிறோம். சமூகம் நம் மனத்தில் தன்னை நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறது. சமூகம் நமக்குள் நிலைநாட்டிய மனத்தில் சிக்குண்டு தவிக்கிறோம். வாழ்க்கையே துன்பங்கள் நிறைந்தது என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கிறோம். ஜாதி, மதம் போன்ற சமூக நம்பிக்கைகளிலிருந்து நாம் விடுபட்டுவிட்டால் வாழ்வது பெருமளவுக்கு எளிமையானதாக ஆகிவிடும் என்பதுதான் உண்மை.
மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 24 வயதுப் பெண் நான். பி டெக் ஐ டி படித்துவிட்டு இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என் தந்தைக்கு உடல் நிலை குன்றியதால் என் தாய் மீன் விற்றுத்தான் என்னையும் என் அக்கா, அண்ணனையும் படிக்க வைத்தார். நான் படித்து முடித்தவுடன் என் பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கினார்கள். ஆனால் முன் பின் தெரியாத ஒருவரை மணக்க எனக்குப் பயமாக இருந்தது. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒருவர் என்னைக் காதலிப்பதாகச் சொன்னார்.
ஆனால் அவர் என்னைவிட மூன்று மாதங்கள் வயதில் இளையவர். முதலில் யோசித்தாலும் அவருடைய குணத்தால் ஈர்க்கப்பட்டு நானும் அவரைக் காதலிக்க ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகப் பழகினோம். ஒரு கட்டத்தில் என் காதலை என் பெற்றோரிடம் தெரிவித்தேன். குடும்ப மானம் போய்விடும் என என்னை மிரட்டி என் மாமாவின் மகனோடு திருமணம் நிச்சயம் செய்தார்கள். ஆனால் என் காதல் விவகாரம் என் மாமா மகனுக்குத் தெரியவர அவர் கல்யாணத்தை நிறுத்திவிட்டார். என் காதலன் நல்ல வேலையில் சேர்ந்த பின்னர் என் பெற்றோரைச் சந்தித்து என்னைத் திருமணம் செய்து தரும்படி வேண்டினார். முதலில் மறுத்தாலும் அவர் மீது நம்பிக்கை உருவானதால் எங்கள் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள்.
ஆனால் அதன் பின் தான் பிரச்சினை பூதாகாரமானது. எங்கள் ஜாதியைக் காரணம் காட்டி என் காதலனின் அப்பா எதிர்ப்பு தெரிவித்தார். எப்படியாவது அப்பவைச் சம்மதிக்க வைக்கிறேன் எனக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என அவர் என் குடும்பத்தினரிடம் கேட்டார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. என் குடும்பத்தினரோ அவருடைய குடும்பத்தினரைப் பல முறை சந்தித்து சுமுகமான உறவை ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால் அவமானம் மட்டுமே கிடைத்தது.
என் காதலர் என்னை உண்மையாக முழுமையாகக் காதலிக்கிறார். ஆனால் அவருடைய பெற்றோர் எங்களை எப்படி அவமானப்படுத்தினாலும் அதைச் சரி செய்ய முடியாமல் கையாலாகாதனத்தோடு வேடிக்கை பார்க்கிறார். இப்படியே 2 ஆண்டுகள் கடந்து விட்டன. இனியும் அவரை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்று என் குடும்பத்தினர் சொல்கிறார்கள். இதற்கு மேலும் என் பெற்றோர் என்னால் அவமானப்படக் கூடாது என்பதால் இப்போது வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஆனால் நானும் என் காதலரும் சேர்ந்திருந்த நாட்கள், அன்பைப் பரிமாறிக்கொண்ட நாட்களை என்னால் மறக்க முடியவில்லை. நான் எப்படி இன்னொருவரை ஏமாற்றுவது?
என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் தூய்மையானவராக இருக்கலாம். அவருக்கு நான் எப்படி உண்மையான மனைவியாக இருக்க முடியும்? இது போன்ற கேள்விகள் என்னைத் துளைக்கின்றன.
முன்பின் தெரியாத ஒருவரை எப்படி மணந்துகொள்வது என்ற பயத்தில் நீங்கள் எடுத்த முடிவு உங்களை இப்போது இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன. மீனவர் சமூகத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அது உங்கள் குடும்பம் செய்யும் தொழில். உங்கள் சுய அடையாளம் அல்ல அது என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்களுக்குள் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், யாராக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது.
என்னவெல்லாமோ நடந்துவிட்டிருக்கிறது. இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கிருந்துதான் வாழ்க்கையை நீங்கள் தொடர முடியும். இந்த அளவுக்கு நீங்கள் முன்னேறி வந்திருப்பது குறித்து உங்களை நீங்களே வாழ்த்திக்கொள்ளுங்கள். உங்கள் காதலரின் இயலாமையை ஒப்புக்கொள்ளுங்கள். இதுவரை நடந்ததை உங்கள் வாழ்க்கையின் முடிந்துபோன அத்தியாயமாகப் பாருங்கள். புதிதாக அமையவிருக்கும் வாழ்க்கையை முழு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் யாரையும் ஏமாற்றப் போவதில்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழப் போகிறீர்கள். உண்மையான மனைவி என்பதைவிட உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதுதான் தூய்மை. அதுதான் முக்கியம். அது போதும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பொறியியல் பட்டதாரி நான். என் மேல் எனக்கு நம்பிக்கையே இல்லை. தாழ்வு மனப்பான்மையால் வருந்துகிறேன். மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். இப்படி இருக்க ஒரு முறை ஒரு உளவியல் நிபுணரை அணுகி என் பிரச்சினையைச் சொன்னேன். ஆனால் அவர் என் பெற்றோரை அழைத்து வரும்படி கூறிவிட்டார். என்னால் என் சிக்கலை என் பெற்றோரிடம் வெளிப்படுத்த முடியவில்லை. நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறேன். ஆனால் மன உளைச்சலால் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் நிற்கிறேன்.
நீங்கள் கொடுத்துள்ள தகவல் மிகவும் குறைவானது. அதை மட்டும் வைத்துக்கொண்டு பார்க்கும்போது, நீங்கள் சந்தித்த உளவியல் நிபுணர் ஏன் உங்கள் பெற்றோரை வரச் சொன்னார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் உங்கள் பெற்றோரைப் பார்க்க அவர் விரும்புவது நியாயம்தான். ஆனால் உங்களுக்கு அதில் விருப்பமில்லை என்னும் பட்சத்தில் அவர்களை அவர் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் எதுவுமில்லை.
அவரிடம் இதைச் சொன்னீர்களா? சொல்லியும் அவர் நிர்ப்பந்தப்படுத்தினார் என்றால் வேறொரு உளவியல் நிபுணரை நீங்கள் சந்திக்கலாம். எந்த உளவியல் நிபுணரையும் விட நீங்கள்தான் முக்கியம். ஒரு நல்ல உளவியல் நிபுணர் உங்களுக்கு உதவ முடியும் என்பது உண்மையானாலும், முடிவில் உங்கள் சுய நம்பிக்கை உங்களிடம்தான் இருக்கிறது. உங்கள் தாழ்வு மனப்பான்மையை நீங்கள்தான் நிலைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ‘என் வாழ்க்கை என் கையில்’ என்ற புதிய நம்பிக்கையுடன் புதியதொரு வாழ்க்கையைத் தொடங்குங்கள்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT