Last Updated : 20 Feb, 2015 12:56 PM

 

Published : 20 Feb 2015 12:56 PM
Last Updated : 20 Feb 2015 12:56 PM

"மக்கள தூங்கவிடக் கூடாது"

இளம் வயதில், இரண்டு ஆண்டுகளாக ‘கோலிசோடா’ எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ரேடியோ மிர்ச்சி நந்தினி. வழக்கமாக மக்களைக் கேள்வி கேட்கும் ஆர்.ஜேவிடம் கேள்விகளைக் கேட்டோம்.

முதல் வாய்ப்பு

டபிள்யு.சி.சி கல்லூரியில் இளங்கலை விஸ்காம் படித்து, எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்தார். ரேடியோ மிர்ச்சியில் ‘கோலிசோடா’எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முதல் வாய்ப்பு கிடைத்தது. அங்கே அங்கிருந்து அசத்தல் ஆரம்பம் ஆகிறது.

“மதியம் இரண்டு மணியில் இருந்து ஐந்து மணி வரையில் ஷோ நடத்த வேண்டும். இந்த நேரத்தில் மக்கள் கண்டிப்பாகக் களைப்பா இருப்பாங்க. நல்ல தூக்கம் வரும் நேரம் இது.

அதனால நான் நினைச்சது எல்லாம் மக்கள தூங்கவிடக் கூடாது, நல்ல செய்தியையும் தூங்க விடாத பாடல்களும் போடனும், கூடவே ஷோ பண்ற நானும் எனர்ஜெடிக்கா பேசனும். இப்படி ஆரம்பமானதுதான் கோலிசோடா” என்றார் நந்தினி.

கோலிசோடா மிக்ஸிங்

சினிமா, நாட்டு நடப்பு, கிரிக்கெட், சென்னை மாநகரச் செய்திகள் என மூன்று மணி நேரத்துக்குச் சுடச் சுடச் செய்திகளுடன், மக்களுடன் கலந்துரையாடலும் இனிமையான பாடல்களும்தான் கோலிசோடாவின் கலவை. கோலிசோடா நந்தினி சிட்டி யூத்களிடம் பாப்புலர்.

தன்னுடைய பேச்சில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கும் நந்தினி தன்னுடைய நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவதோ “நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாமே எக்ஸ்ட்டிராடினரி!” என்பதுதான். எனவே இளைஞர்களிடம் இவர் எக்ஸ்ட்டிராடினரி ஆர்.ஜேவாக பாப்புலர் ஆகிவிட்டார்.

மீடியாவில் பெண்கள்

எந்த ஒரு துறையிலுமே வெற்றி பெறுவது எளிதல்ல. எங்கேயுமே ‘சர்வைவல் ஆப் தி ஃபிட்டஸ்ட்’தான். இவர் மீடியாவில் பணியாற்றப் போறேன் என்று சொன்னபோது இவரது வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது.

ஆனால் இவரைப் பொறுத்தவரை பெண்களுக்கு மீடியா வேலைதான் ரொம்ப பாதுகாப்பு. கிடைக்கிற வாய்ப்புகளைத் தவறவிடாது ஆர்வத்துடன் தீவிரமாக வேலை செய்தால் வெற்றி நிச்சயம் என நம்புகிறார்.

புத்தம் புதுப் பாட்டு

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல, கோலிசோடா நந்தினி அடுத்த நிகழ்ச்சியாகப் புத்தம் புது பாட்டு எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். “கோலிசோடாவுக்கு முடிவு போட்டாச்சு. இனி வரப் போகும் நிகழ்ச்சியில கொஞ்சம் மாற்றம்.

நான்தான் பேசப் போறேன், பல சுவாரசியமான செய்திகள் சொல்லப் போறேன். ஆனால், புத்தம் புதுப் பாடல்களுடன். டைட்டில சின்ன மாற்றம் அவ்வளவுதான். கண்டிப்பா எக்ஸ்ட்டிராடினரி பண்ணலாம் மக்களே” என்றார்.

மக்கள் ஆதரவே முதல் வெற்றி

“இப்ப ஃபேஸ்புக், டிவிட்டர்னு நமக்கு மக்களோட பேச நிறைய வழிகள் இருக்கு. அதுனால இரண்டு வருஷமா அவங்க கொடுத்த ஆலோசனைகள், கருத்துகள், ஊக்குவிப்பு ரொம்ப உதவியா இருந்திருக்கு. மக்கள் எல்லோரும் வாக்களித்து இந்த வருடத்துக்கான சிறந்த ஆர்.ஜே.வா என்னை செலக்ட் பண்ணியிருக்காங்க.

இப்ப இன்னும் பொறுப்பு கூடியிருக்கு. தொடர்ந்து நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தரணும். வாக்களித்த ஒவ்வொரு நல்ல உள்ளத்துக்கும் எக்ஸ்ட்டிராடினரி தாங்ஸ்!” என்றார் நந்தினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x