Published : 20 Feb 2015 01:06 PM
Last Updated : 20 Feb 2015 01:06 PM
எதிலும் புதுமை படைக்கும் இளைஞர்களில் ஒருவர் சித்தேந்திரன். தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த இந்த இளைஞர், முறைப்படி ஓவியம் கற்றவரல்ல. 11-ம் வகுப்பு முடிக்கும் வரையில் ஓவியப் போட்டியில் பங்கேற்றுப் பரிசு வாங்கிய அனுபவமும் கிடையாது.
ஆனால், கல்லூரியில் படிக்கும்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தவர்.
கை கட்டி, பைக் ஓட்டி வரைபவர்
குறுகிய காலத்தில் ஓவியக் கலையில் உச்சங்களைத் தொட்ட இவர், தற்போது வித்தியாசமாக ஓவியம் வரைந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறார்.
பைக் ஓட்டியபடி வாயில் தூரிகையைக் கவ்விக்கொண்டு சர்வசாதாரணமாக ஓவியம் வரைகிறார். சில நேரங்களில் படம் வரைந்தபடியே, ஹேண்ட்பாரில் இருந்து கைகளை எடுத்து முதுகுக்குப் பின்னால் கட்டிக்கொள்கிறார்.
“பள்ளிப்படிப்பை முடிக்கும் தறுவாயில், 12-ம் வகுப்பில் ஓவியப்போட்டி ஒன்றில் மூன்றாம் பரிசு கிடைத்தது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திருக்காவிட்டால், அதன் பிறகு நான் பிரஸைத் தொட்டிருக்கவே மாட்டேன். முதல் தலைமுறைப் பட்டதாரியான நான் கல்லூரி முதலாமாண்டில் ஆர்வக்கோளாறாக ஓவியப் போட்டிக்குப் பெயர் கொடுத்துவிட்டேன்.
கிளி, திருவள்ளுவர் என்று ஏதாவது வரையச் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தால், ‘புல்மேயும் மாடுகள் பசியோடு மாடு மேய்க்கும் சிறுவன்’ என்று தலைப்பு கொடுத்தார்கள். முயன்று பார்ப்போமே என்று நான் வரையத் தொடங்க அதைப் பார்த்த தமிழ்ப் பேராசிரியர்கள் பாராட்டித் தள்ளிவிட்டனர்.
போட்டியில் பரிசும் கிடைத்துவிட்டது. கல்லூரியில் பாடச்சுமை குறைவு என்பதால் ஓவியம் வரைய நேரம் ஒதுக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார் சித்தேந்திரன்.
வேலைக்கு முழுக்கு
இவரது ஓவிய ஆர்வம் ஓவராகி, தமிழ் தேர்வில் சிலப்பதிகாரம் பற்றிய கேள்விக்குக் கண்ணகி, கோவலன் கதையைக் கன்னித்தீவு கதைபோல ஓவியமாகவே வரைந்திருக்கிறார். பிறகு பல்கலைக்கழக அளவில் பெயர் வாங்கியவர், அடுத்துச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த தென்னிந்திய பல்லைக்கழகங்களுக்கு இடையேயான கொலாஜ் ஓவியப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
அதன் அடுத்த கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த பல்கலைகளுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்துச் சாதித்திருக்கிறார்.
படிப்பு முடித்த கையோடு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தவர், அதைவிட்டுவிட்டு இப்போது ஓவிய ஆசிரியர் வேலை கிடைக்குமா? என்று பள்ளிகளை வலம் வரத் தொடங்கியிருக்கிறார்.
விழிப்புணர்வில் வித்தியாசம்
ஓவியம் ஓர் அற்புதமான கலை. குழந்தைகள் எழுதப்படிக்க ஆரம்பிக்கும் முன்பே படம் வரைவதைத் தான் விரும்புவார்கள். ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் அதனை ஊக்குவிப்பது இல்லை. ஓவியம் ஞாபகச் சக்தியை வளர்க்கிற கலை.
அதனால்தான் அறிவியல் பாடங்களில் படம் வரைந்து பாகம் குறிக்கச் சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் பள்ளிகளில் ஓவியத்திற்கு ஒதுக்கப்பட்ட பாடவேளைகளைக் கணிதம் அல்லது ஆங்கில ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டு பாடம் நடத்திவிடுகிறார்கள்.
ஆகவே ஓவியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்துள்ளார். எதையும் வித்தியாசமாகச் செய்தால் தானே நான்கு பேர் திரும்பிப் பார்க்கிறார்கள். அதனால்தான் தலையில் கரகத்தை வைத்துக் கொண்டே ஓவியம் வரைவது, பைக் ஓட்டிக்கொண்டே படம் வரைவது என்று வித்தியாசமாக முயல்கிறார். “பைக்கும், செல்லும் பாதையும் பழக்கப்பட்டதாக இருப்பதும் இந்தத் துணிச்சலுக்கு ஒரு காரணம்” என்கிறார் சித்தேந்திரன்.
100 கிலோ மீட்டர் தூரம் பைக் ஓட்டிக்கொண்டே கிலோ மீட்டருக்கு ஒரு ஓவியம் வரைவது, பைக்கின் மீது யோகாசனம் செய்தபடி படம் வரைவது போன்றவற்றைத் தன்னுடைய அடுத்த இலக்காக நிர்ணயித்திருக்கிறார் சித்தேந்திரன்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT