Published : 27 Feb 2015 03:17 PM
Last Updated : 27 Feb 2015 03:17 PM
சென்னைவாசிகள் சென்னை மாநகரத்தின் மீது வைத்திருக்கும் காதலை பேஸ்புக்கில் சென்னைக்காக ஆரம்பத்திருக்கும் பக்கங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். சென்னையின் பல வண்ண முகங்களை இந்தப் பக்கங்கள் பதிவுசெய்கின்றன. அப்படி ஒரு பக்கம்தான் ஐ அம் மெட்ராஸ் (I am Madras). இந்தப் பக்கத்தை நடத்துபவர் ரவுனக் என்னும் 24 வயது இளைஞர். “ஹுயூமன்ஸ் ஆஃப் நியூ யார்க்’ (Humans of New York) என்னும் பேஸ்புக் பக்கத்தின் தாக்கத்தால்தான் ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தை உருவாக்கினேன். சிறுவயதில் இருந்தே நான் ஒரு இன்ட்ரோவெர்ட்’. அவ்வளவு எளிதில் யாரிடமும் பேசமாட்டேன். ஆனால், சென்னையின் மீது எனக்கிருக்கும் அன்பை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் இந்த ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கம்” என்கிறார் ரவுனக்.
நியூயார்க் நகரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பதிவுகளை ‘ஹுயூமன்ஸ் ஆஃப் நியூயார்க்’ பேஸ்புக் பக்கத்தில் காணலாம். அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு, ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கம், சற்று விரிவாகச் சென்னையின் மக்களைப் பற்றிப் பேசுகிறது.
சென்னையின் வண்ணங்கள்
சென்னையின் பன்முகத்தன்மையை ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தில் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, எளிய மனிதர்களின் கதைகளை நிறையக் காண முடிகிறது. “அப்போதுதான் சென்னையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்துக்காக நானும் அவர்களுடைய பேச்சில் கலந்துகொண்டேன். பேசிமுடித்துச் செல்லும்போது, அவர்கள் டீ, வடை எல்லாம் கொடுத்து உபசரித்து அனுப்பினார்கள். அவர்களுடைய அன்பை மறக்கவே முடியாது” என்கிறார் ரவுனக்.
சென்னையின் டிரெண்டில் இருக்கும் விஷயங்களைத் தவறாமல் ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தில் பதிவு செய்துவிடுகிறார் இவர். அது மெட்ராஸ் தினக் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, ஐபிஎல் ஃபீவராக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிராக இருக்கும் மனநிலை குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் இவருடைய பக்கத்தில் பார்க்கலாம். பெரும்பாலும் இவர் கடந்து செல்லும் சாமானியர்களைப் பற்றித்தான் பதிவிடுகிறார். “ஒரு முறை, ஒரு கேஸ் சிலிண்டர் எடுத்துச் செல்லும் நபரிடம் பேசினேன். அவரை நான் படம் எடுத்துக் காட்டியவுடன் அவருடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அதைப் பார்த்ததும் நான் செய்துகொண்டிருக்கும் இந்த வேலையைப் பெருமையாக உணர்ந்தேன்” என்கிறார் ரவுனக்.
அர்த்தமுள்ள வீக்எண்ட்
ரவுனக் தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அதனால் தன் வீக்எண்டை ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்துக்காகச் செலவிடுகிறார். “வீக்எண்ட்டில் மட்டும் பதிவிடுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், பணிச்சூழல் காரணமாக அதிக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறேன். என் நண்பர்களும் நிறைய ஆலோசனைகள் வழங்கி தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்” என்கிறார் ரவுனக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT