Last Updated : 20 Feb, 2015 02:39 PM

 

Published : 20 Feb 2015 02:39 PM
Last Updated : 20 Feb 2015 02:39 PM

செவ்வாயில் ஒரு குடியிருப்பு

செக்கச் சிவந்த பெண்ணோடு செவ்வாயில் ஒரு குடியிருப்பு… என்னும் ரீதியாக எழுதித் தள்ளும் தமிழ் திரைப்படப் பாடலாசிரியர்கள் காதலியும் காதலனும் உறவாட ஏதாவது ஒரு தனிமையான இடத்தைத் தம் பாடல்களில் அமைத்துத் தருவார்கள்.

தனியான தீவுக்குக் கூட்டிப் போகலாம், சேலையில் வீடு கட்டி வசிக்கலாம், ஆளே இல்லாத அமெரிக்காவில் உலவலாம் எனப் புதிது புதிதாக மூச்சு முட்டவைக்கும் அளவுக்கு ஐடியாக்களை அள்ளி வீசுவார்கள்.

தமிழ் ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்த இயக்குநர்களும் விமானம் ஏறி ஏதோவொரு வெளிநாட்டில் இதுவரை யாரும் படமெடுக்காத இடங்களைத் தேடிப் பிடித்து -நல்ல கதைக்கோ திரைக்கதைக்கோ இவ்வளவு மெனக்கெட மாட்டார்கள்- நாயகனையும் நாயகியையும் ஆடவிடுவார்கள்.

ஆனால் அந்தப் பாடல் திரையில் வரும்போது ரசிகர்கள் கூலாக எழுந்து வெளியே வராண்டாவில் தம் அடித்துவிட்டுப் படம் மொக்கை என வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு மெஸேஜ் அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.

இது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையிலேயே இந்தப் பூமியில் இருப்பதைவிட செவ்வாய்க் கிரகத்திலேயே இருக்கலாம் என ஒரு கூட்டத்தினர் முடிவுசெய்துள்ளனர். மார்ஸ் ஒன் என்னும் டச்சு நிறுவனம் தான் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தது. முதலில் இதைக் கேட்பதற்குக் கேலியாகவும் ஆச்சரியமாகவும்தான் இருந்தது.

ஆனால் அவர்களின் முயற்சி அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. எப்படியாவது இந்தப் பூமியிலிருந்து வெளியேறிவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருந்த ஆயிரக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

2024-ம் ஆண்டில் செவ்வாயை நோக்கிய முதல் பயணம் நடைபெறும் என்று தெரிவிக்கும் அந்நிறுவனம் முதல் கட்டமாக நூறு பேர் அடங்கிய பட்டியலை வெளியிடுள்ளது. இதிலிருந்து 24 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு ஆறு பேராகச் செவ்வாய்க்கு அனுப்பப்படுவார்களாம்.

செவ்வாயில் ஒரு காலனி என்பது கேட்க சுவாரசியமாக இருக்கிறது. ஒருமுறை போய்விட்டால் திரும்ப வர முடியாது. அங்கேயே இருந்துவிட வேண்டியதுதான். இப்படியெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்னும் 37 ஆயிரத்து 356 கோடியே 27 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறதாம். அதே நேரத்தில் இப்போதைய தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு செவ்வாயில் 68 நாட்களுக்கு மேல் இருக்க இயலாது என்றும் தகவல்கள் வருகின்றன.

அநேகமாக இது மிகப் பெரிய தோல்வித் திட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதைப் பற்றிய கவலையில்லாமல் செவ்வாய் சென்றுவிடலாம் என்னும் கனவில் சிலர் மிதக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த தரன்ஜீத் சிங் பாடியா, ரித்திகா சிங், சாரதா பிரசாத் ஆகிய மூவரும் இருக்கிறார்கள்.

செவ்வாய் செல்வார்களா வெறும் வாயை மெல்லுவார்களா என்பது போகப் போகத் தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x