Published : 13 Feb 2015 01:17 PM
Last Updated : 13 Feb 2015 01:17 PM

காதலனை மன்னிக்கவா? தண்டிக்கவா? - உளவியல் ஆலோசனை

மனமுதிர்ச்சி என்பது என்ன? அதன் அளவைகள் என்ன? மற்றவர்களுடைய எதிர்பார்ப்பின்படி நடந்துகொள்வது மன முதிர்ச்சியா? ஒருவர் மனமுதிர்ச்சி உள்ளவரா, இல்லையா என்பதை அவரது நடவடிக்கைகளை வைத்து எப்படிக் கண்டுகொள்வது?

வயதாகிவிட்டால் மனமுதிர்ச்சி தானாக வந்துவிடுமா? அப்படியென்றால் முதியவர்கள் எல்லோரும் மனமுதிர்ச்சி உள்ளவர்களா?

தன்னை ஓரளவுக்குப் புரிந்துகொண்டு, மற்றவர்களையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மன முதிர்ச்சி உள்ளவர் என்று சொல்லலாம். தன்னை மற்றவர்களின் இடத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவம் மனமுதிர்ச்சி உள்ளவர்களிடம் மட்டும்தான் இருக்கும்.

குறைந்தபட்ச அறிவுணர்வுகூட இல்லாத ஒருவரின் சிந்தனை, நடவடிக்கை எல்லாமே இயந்திரத்தனமானதாகத்தான் இருக்கும். தன் எல்லையைக் கடந்து பார்க்க அவர்களால் முடியாது.

அறிவுணர்வுதான் மனத்தில் ‘நான்’ என்னும் உணர்வாகப் பிரதிபலிக்கிறது. அதுதான் நம் சுயத்தின் அடையாளம். மென்மையுணர்வு, அழகுணர்வு, நிதானம், தீர்க்கமான சிந்தனை போன்ற தன்மைகள் எல்லாமே அறிவுணர்வு சார்ந்தவைதான். அறிவுணர்வின் அளவுதான் மன முதிர்ச்சியின் அளவுகோல். அறிவுணர்வுதான் இந்தக் கணத்தில் நம்மை நிலைகொள்ள வைக்கும்.

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்கட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். அடுத்த நிலைகளுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். நானும் என் மாமாவின் மகனும் கடந்த 8 வருடங்களாகக் காதலித்துவருகிறோம். இருவர் வீட்டாரும் முழுச் சம்மதம் தெரிவித்து அடுத்த மாதம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் இருவரும் ஒருவருக்கொருவர் எல்லாச் சூழலிலும் உறுதுணையாக இருந்திருக்கிறோம். நான் சிவில் சர்வீஸ் தேர்ந்தெடுக்க என்னை மிகவும் ஊக்குவித்தது அவர்தான். சில மாதங்களுக்கு முன்னர் வங்கி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றார். அங்கு ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவள் காதலை வெளிப்படுத்தி இருக்கிறாள். ஆனால், இவர் எங்களுடைய காதலை எடுத்துரைத்து, அவளுடைய காதலை மறுத்துள்ளார். இவ்வளவு நடந்ததையும் என்னிடம் வெளிப்படையாகத் தொலைபேசியில் சொன்னார். அதன் பின் நானும் அவளைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை. தினமும் இரவில் தொலைபேசியில் பேசுவது எங்கள் வழக்கம்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல என்னுடன் பேசும் நேரத்தைக் குறைக்க ஆரம்பித்தார். நான் தொடர்புகொள்ளும்போது என்னைத் தவிர்க்கத் தொடங்கினார். இந்நிலையில் அந்த பெண்ணுடன் ஒரு நாள் ஏசி கம்பார்ட்மெண்ட் ரயிலில் தனியாகப் பயணித்துள்ளார். அந்தப் பயணத்தின்போது இருவரும் வரம்பு மீறி உறவு கொண்டிருக்கிறார்கள். அன்றுகூட என்னுடன் அவர் தொலைபேசியில் பேசினார். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பதைக் காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேறொரு காதலன் இதற்கு முன்பே இருந்திருக்கிறார். அவர் இவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அந்த ரயில் பயணத்தின்போது மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைக்க என்னுடைய காதலன் பதற்றத்தில் எல்லா உண்மையையும் அவனிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார். உடனே அந்தப் பெண்ணின் பழைய காதலன் என்னை அழைத்து, நடந்த விவகாரத்தை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார்.

இப்பொழுது எங்கள் இரு வீட்டாரும் திருமண நிச்சயதார்த்த வேலைகளை மகிழ்ச்சியோடு செய்யத் தொடங்கிவிட்டார்கள். என் காதலனோ, “தயவுசெய்து நடந்த சம்பவங்களைப் போட்டு உடைத்துவிடாதே” என என்னிடம் கெஞ்சுகிறார். அவரை மன்னிப்பதா? அல்லது என் பெற்றோரிடம் உண்மையைச் சொல்லிவிடவா? நான் மிக மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன்னால், இந்த நிலைமை குறித்த தெளிவு அவசியம். பல கேள்விகளுக்கு நீங்கள் விடை காண வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் மேல் எந்தத் தவறும் இல்லை என்பது வெளிப்படை.

இந்த விஷயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் காதலை இப்போது என்னவாகக் காண்கிறீர்கள்? எட்டு வருடங்களாகக் காதலித்திருக்கிறீர்கள். அது இப்போது அடிப்படையிலேயே ஆட்டம் கண்டிருக்கிறது. உங்கள் காதலரின் மன முதிர்ச்சி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறாரா அல்லது முதிர்ச்சியின்மை காரணமா?

நடந்ததற்குக் காரணம் முதிர்ச்சியின்மைதான் என்றால், நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? இதில் அந்தப் பெண்ணின் பங்கு என்ன? அந்தப் பெண் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது இவர் முதலில் மறுத்திருக்கிறார். அதன் பிறகு நடந்ததற்கு அந்தப் பெண் எந்த அளவுக்குப் பொறுப்பு?

இப்போது அவர் தன்னைக் காட்டிக்கொடுத்துவிட வேண்டாம் என்று உங்களிடம் கேட்பது தன் தவறை உணர்ந்ததனாலா அல்லது பின் விளைவுகள் குறித்த அச்சம்தான் காரணமா? அவரை மன்னித்து நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன ஆகும்? அல்லது நடந்த உண்மைகளை உங்கள் பெற்றோரிடம் சொன்னால் என்ன ஆகும்? உங்களுக்கு எது நல்லது?

நீங்கள் ஒரு புத்திசாலியான பெண் என்று தெரிகிறது. இந்த விஷயத்தில் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும், அது சரிதான். ஆனால், நன்றாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மேலே சொன்ன கேள்விகள் குறித்து நிதானமாகச் சிந்தியுங்கள். தேவைப்பட்டால் அவரிடம் ஒருமுறை விவரமாகப் பேசுங்கள். இப்போது அவர் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள்.

விஷயம் தெளிவாகப் புரிவதற்கு முன்னால், எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். புரிந்த பிறகு நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கை. உங்கள் முடிவுதான் உங்களுக்குச் சரி என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவருகிறேன். என்னுடன் அவளும் வேலை பார்க்கிறாள். அவள் வேறு துறையைச் சேர்ந்தவள். யதார்த்தமாக அவளைச் சந்தித்துப் பேசத் தொடங்கினேன். அவளும் ஓரிரு வார்த்தைகள் பேசினாள். ஒரு நாள் “வேலை முடிந்து வீடு திரும்பும்போது இருவரும் பேசிக்கொண்டே போகலாமா?”எனக் கேட்டேன். அவள், வேண்டாம் என மறுத்துவிட்டாள்.

சில நாட்களுக்குப் பிறகு அவளுடைய தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து வாட்ஸ் அப்பில் “என் இறுதி மூச்சுள்ளவரை உன் தோழனாக இருக்க விரும்புகிறேன்” என மெசேஜ் அனுப்பினேன். அன்று இரவே “உங்களைத் தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்” என அடுத்த மெசேஜ் அனுப்பினேன். அடுத்த நாள் வாட்ஸ் அப் பட்டியலில் என் பெயரை நீக்கிவிட்டாள்.

உடனே “ஏன் நேற்றே என் பெயரை நீக்கவில்லை? உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பது புரிகிறது. ஓகே, பை, டேக் கேர்” என எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். சில நாட்கள் கழித்து பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் அனுப்பினேன். அதற்கும்“இப்பொழுது இல்லை” என்ற ஆப்ஷனைத் தட்டிவிட்டாள்.

தினமும் நான் அவளைப் பார்க்கிறேன். ஆனால் அவளோ என்னைக் கண்டு கொள்வதே இல்லை. எனக்குச் சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும் 1. என்னை நண்பனாக ஏற்க அவள் மறுப்பது ஏன்? 2. ஒரு பதில்கூடச் சொல்லாதது ஏன்? 3.என்னை ஏன் அவள் புரிந்துகொள்ளவில்லை? 4. என்னை மனிதனாகக்கூட அவள் மதிக்கவில்லையா?

நீங்கள் நடந்துகொண்ட விதத்தில் உங்களிடம் மிகுந்த தாழ்வு மனப்பான்மை இருப்பது தெரிகிறது. நீங்களே உங்களை மேலும் தாழ்மைப்படுத்திக் கொள்கிறீர்கள். வேண்டாம் என்று சொல்லும் பெண்ணிடம் ஏன் திரும்பத் திரும்பப் போகிறீர்கள்? உங்களையே எதற்காக இப்படி வருத்திக்கொள்கிறீர்கள்?

பதில் சொல்லவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? இதைவிடத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எப்படிச் சொல்ல முடியும்? ‘பேசிக்கொண்டே போகலாமா?’ என்று நீங்கள் கேட்டதற்கு, ‘வேண்டாம்,’ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறாள். நீங்கள் அதோடு விட்டிருக்க வேண்டும். அதுதான் நாகரிகம். அதோடு நில்லாமல், நீங்கள் அவளுடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து வாட்ஸாப் மெஸேஜ் அனுப்பியிருக்கிறீர்கள்.

அதற்கும் அவள் உங்கள் பெயரைப் பட்டியலிலிருந்த நீக்கியதன் மூலம் பதில் சொல்லிவிட்டாள். ‘உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. டேக் கேர்,’ என்று சொல்லிவிட்டு அதோடு விடாமல், பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்கிறீர்கள். உங்கள் தொல்லை தாங்க முடியாமல் அவள் ‘இப்பொழுது இல்லை,’ என்ற ஆப்ஷனைத் தட்டிவிட்டிருக்கிறாள்.

இதைவிட வெளிப்படையாக என்ன சொல்வது? மிகவும் நாகரிகமாக அவள் நடந்துகொண்டிருக்கிறாள். நீங்களும் நாகரிகமாக நடந்துகொண்டு, அவளை இதற்குமேல் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவதுதான் சரி. உங்களை நண்பனாக ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவளுடைய விருப்பம். அவள் எதற்காக உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்? உங்களை நீங்கள் மதிக்கத் தொடங்குங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் எல்லாமே சரியாக நடக்கும்.

உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து,

கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x