Published : 06 Feb 2015 12:30 PM
Last Updated : 06 Feb 2015 12:30 PM
தேசிய அளவிலான டார்ட் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதேவி. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவரிடம், “டார்ட் சாம்பியனானது எப்படி?” என்றால், “விளையாட்டாதான் கத்துக்கிட்டேன்…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
வாலிபால் தனக்குப் பிடித்த விளையாட்டு என்றும் பள்ளி, கல்லூரி அணிகளில் இடம்பெற்றுப் பல பரிசுகளை வென்றிருப்பதாகவும் சொல்கிறார் ஸ்ரீதேவி. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட `டார்ட் கார்ப்’எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான டார்ட் போட்டியில் அதிகமான புள்ளிகளை எடுத்து வெற்றி பெற்றவர் இவர். அப்போது டார்ட் கார்ப் அமைப்பில் சேர்ந்து சிறப்புப் பயிற்சியை எடுத்துக்கொண்டால் இந்த விளையாட்டில் மேலும் சாதிக்க முடியும் என அந்நிறுவனர் வேணு பிள்ளை கூற, அதன் பின்னர்தான் ஸ்ரீதேவி டார்ட் பயிலத் தொடங்கினார்.
டார்ட் கற்றுக்கொள்ளப் போவதாக வீட்டில் சொன்னவுடன் ‘என்னது? டான்ஸ் கத்துக்கப் போறியா! அதெல்லாம் வேணாம்மா’ என்று கூறியுள்ளார்கள். ஆனால் முயன்று பார்க்கலாமே என்னும் ஆர்வத்துடன் விளையாட்டாகக் கற்றுக்கொண்டேன் என்று சொன்னபடியே ஒரு டார்ட்டை இலக்கை நோக்கி எறிந்தார்.
மூளைத் திறனை அதிகரிக்கும்
டார்ட் எறியும் பயிற்சியின் மூலம் மூளைத் திறன் செயல்பாடு அதிகரிக்கும். உடலின் புலன்களுக்கும் மூளைக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை நெருக்கமாக்கும். “சிறப்புக் குழந்தைகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த விளையாட்டால் பலன் கிடைக்கும். கணிதத் திறனும் சமயோசிதத் திறனும் மேம்படும்” என்கிறார் `டார்ட் கார்ப்’பயிற்சி மையத்தின் நிறுவனர் வேணு பிள்ளை. இவர் 1989-லிருந்து டார்ட் விளையாடி வருகிறார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் டார்ட் விளையாட்டில் பல சாதனைகளைச் செய்துள்ளார். தமிழக டார்ட் விளையாட்டுச் சங்கத்தின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு புதிய டார்ட் விளையாட்டு வீரர், வீராங்கனை களை அறிமுகப் படுத்தி வருகிறார்.
துளி அம்பு
துளி அம்பு (இதுதாங்க டார்ட்டுக்குத் தமிழாக்கம்!) வித்தியாசமான விளையாட்டு மட்டுமல்ல, கோல்ஃபுக்கு அடுத்தபடியாகத் தனிநபருக்கான பரிசுத் தொகையும் இதில் அதிகம். லண்டனுக்குச் சென்று தொடக்க நிலையில் ஆடும் வீரருக்கே கணிசமான பவுண்ட்ஸ்களை அளிக்க முன்வருகின்றனர், சர்வதேச டார்ட் விளையாட்டு அமைப்பினர். பழங்குடி மக்களின் அன்றாடப் பயன்பாட்டிலேயே இந்த டார்ட் இருந்திருக்கிறது. அவர்கள் வேட்டைக்காக நீண்ட மூங்கிலின் உள்ளே ஊசி போன்ற மரத்தக்கையை வைத்து ஊதுவார்கள். அது குறிப்பிட்ட இலக்கை சென்று தாக்கும். இதைத்தான் டார்ட்டின் ஆரம்பம் எனலாம்.
ஒரு லெக்குக்கு 501 பாயிண்ட்!
வில் வித்தையில் குவியும் இலக்கை அம்பு தாக்கும்போது அதற்கு மதிப்பெண் அதிகம் கிடைக்கும். மாறாக டார்ட்டில், வெளிச்சுற்றுகளிலும் இரண்டு வளையங்களுக்கு நடுவில் டார்ட் பாயும் போதும் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். சில இடங்களில் மதிப்பெண்கள் இரட்டிப்பாகும்.
வீரருக்கும் டார்ட் எறியப்படும் இலக்குக்கும் 7 அடி 9 ¼ அங்குலம் இடைவெளி இருக்கும். 5.8 அடி உயரத்தில் இருக்கும். டார்ட் விளையாட்டு ஆண், பெண் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, இரு பாலினரும் சேர்ந்தும் போட்டிகள் நடக்கும். 501 மதிப்பெண்களை எட்டினால் அதை ஒரு `லெக்’ என்பார்கள். தொடக்க நிலை, காலிறுதி, அரையிறுதி நிலைகளுக்கு ஏற்ப பெஸ்ட் ஆஃப் 3, 5, 7, 9 என்று கேம்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.
ஏழு மாநிலங்களிலிருந்து 140 பேர் இந்தப் போட்டியில் பங்கெடுத்துள்ளனர். ஸ்ரீதேவிக்கும் பலமுறை தேசிய சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆயிஷா சயித் என்பவருக்கும் தான் கடுமையான போட்டி நீடித்துள்ளது. “ஏறக்குறைய 11 கேம்கள் வரை நடந்தன. இறுதியில் நான் வெற்றி பெற்றேன்” என்கிறார் ஸ்ரீதேவி உற்சாகத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT