Published : 20 Feb 2015 01:02 PM
Last Updated : 20 Feb 2015 01:02 PM
தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள். கடந்த உலகக் கோப்பையைவிட இந்த முறை அதிகமான சலசலப்பு உள்ளது. காரணம் இந்த முறை அதிகம் பரிச்சயம் இல்லாத புதிய ஆட்டக்காரர்களை இந்திய அணி களம் இறக்கியுள்ளது.
இருப்பினும் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய அணி பதற்றம் இல்லாமல் வெற்றி வாகை சூடியது. இந்தத் தருணத்தில் நம் இளம் கிரிக்கெட் ரசிகர்களோடு ஒரு கலாட்டா கலந்துரையாடல்.
இந்தியா கோப்பை வெல்லும்
அமைதியாகப் பேசும் விக்னேஷுக்கு கிரிக்கெட் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். இந்தத் தடவை உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினர் களைகட்டி விளையாடத் தொடங்கியுள்ளார்கள். இருந்தாலும் யுவராஜ் சிங் போன்ற பலமான வீரர்கள் இல்லை.
என்னதான் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் பயமாகத்தான் உள்ளது எனக் கூறும் இவருக்கு தோனியின் தலைமையில் நம்பிக்கை உள்ளதாம். “எப்படியாவது தோனி ஆட்டக்காரர்களை ஒன்று திரட்டி வெற்றி வாகை சூட்டி விடுவார் என்று நம்பிக்கை இருக்கிறது” என்று மிகவும் பவ்யமாகப் பேசுகிறார்.
இந்திய அணியின் பலமே பந்து வீச்சுதான்!
கிரிக்கெட் என்றால் எனக்குச் சாப்பாடு, தண்ணீர்கூட வேண்டாம் எனச் சொல்லும் ரசிகர்தான் கணேஷ். கடந்த வாரம் பாகிஸ்தானை நல்ல ரன் ரேட்டில் இந்தியா வீழ்த்தியுள்ளது. ஆனால் அடுத்த வாரம் விளையாடப் போகும் சவுத் ஆப்பிரிக்கா உடனான போட்டியை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்கிறார் இவர்.
“இப்போது நம் இந்திய அணியில் ஆல் ரவுண்டர்கள் குறைவாக உள்ளனர். குறிப்பாக இந்த முறை விளையாடுவோரில் பாதிப்பேர் புதிதாக உலகக் கோப்பையில் களம் இறங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆட்டக்காரர்கள். வெளிநாட்டு ஆட்டக்காரர்களுடன் விளையாடி இருந்தால் எப்படிப் பந்து வீசினால் தோற்றுப் போவார்கள் என்று தெரியும்.
நம் இந்திய அணியின் மிகப் பெரிய பலமே பந்து வீச்சு தான். நாம் ரன் ரேட்டில் குவித்து வெற்றி பெற்றதை விடப் பந்து வீச்சில் விக்கெட் விழ வைத்து வெற்றி பெற்ற போட்டிகள் தான் அதிகம். எனவே ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுடன் விளையாடும்போது தான் சற்றுக் கவனமாக விளையாட வேண்டும்” என எச்சரிக்கை விடுக்கிறார்.
கேப்டன் தோனிக்கு பதற்றம்
“2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற அணிகளின் ரன் ரேட் 250 முதல் 270-ஆக இருந்தது. ஆனால் இந்த முறை ரன் ரேட் 300ஐ தாண்டுகிறது” என கிரிக்கெட்டை அலசி ஆராய்கிறார் கார்த்திக். ஆனால் இவர் ஏரியா பசங்களோடுகூட கிரிக்கெட் விளையாடமாட்டாராம்.
“போன முறை நம் இந்திய அணி சச்சின், யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் என நல்ல பலமான அணியாக இருந்தது. ஆனால் இப்போது புதிய ஆட்டக்காரர்களைக் களம் இறக்கியுள்ளதால் கேப்டன் தோனிக்குச் சற்றுப் பதற்றம் உள்ளது. பாகிஸ்தனுடனான வெற்றி நல்ல ரன் ரேட்டில் முடிந்தாலும் தோனி ஆட்டக்காரர்களை ஒருங்கிணைத்து ஆட வைத்ததில் முன்பு இருந்த அளவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனத் தோன்றுகிறது. அதனால் இந்த முறை நான் எந்த எதிர்பார்ப்பும் வைக்கவில்லை” எனக் கவலையோடு பேசுகிறார்.
விராட் கோலியின் சதம் ப்ப்பா..!
நாங்களும் கிரிக்கெட் பாப்போம்ல எனும் கவிகா, இந்த முறை தோனியின் ஒருங்கிணைப்பு மிகவும் நன்றாக இருந்தது. அதனால் தான் இந்தியா பாகிஸ்தானுடன் 6-வது முறையும் வெற்றுள்ளது என்கிறார். “மோகித் ஷர்மாவின் பந்து வீச்சு மிகவும் நன்றாக இருந்தது.
அவர்களிடம் முதல் முறையாக வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடப் போகிறோம் என்ற பதற்றம் இல்லாமல் விளையாடினார்கள்” என்று கூறும் கவிகாவிற்கு சச்சின் இல்லாதது வருத்தமாக உள்ளதாம். இருந்தாலும் ரெய்னாவும் விராட் கோலியும் சச்சின் இல்லை என்ற குறை தெரியாத அளவிற்கு நல்ல ரன் ரேட்டைக் குவித்தனர். முக்கியமாக விராட் கோலியின் சதம் “ப்ப்ப்பா….. அப்படி இருந்தது” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT