Published : 02 Jan 2015 01:33 PM
Last Updated : 02 Jan 2015 01:33 PM
2014-ம் ஆண்டின் லேட்டஸ்ட் ட்ரெண்டாக மாறிய ஒரு விஷயம் செல்ஃபி. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, கணினி எனக் கேமரா பொருத்தப்பட்ட எந்தக் கருவியாக இருந்தாலும் சரி வயது வரம்பின்றி அனைவரும் செல்ஃபி எடுக்க ஆரம்பித்தார்கள். ‘லெட்ஸ் டேக் செல்ஃபி புள்ள’ எனச் சினிமா பாடலே வரும் அளவுக்குச் செல்ஃபி பித்து எல்லோரையும் பிடித்து ஆட்டியது. கிட்டத்தட்ட இளமையின் அடையாளமே செல்ஃபி எடுத்துச் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்வது என்பதாக உருவெடுத்தது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் பிளஸ், ஸ்னாப் சாட், டம்ளர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செல்ஃபிகளால் நிரம்பி வழிந்தன.
தூங்கி விழித்தவுடன் கழுவாத முகம், கலைந்த தலைமுடி, வாயில் டூத் பிரஷோடு கண்ணாடி முன்னால் நின்றபடி படம் பிடிப்பது, நல்லா இருக்கும் தலை முடியை ஹேர் ஸ்டைல் என்ற பெயரில் கொந்திவிட்டுப் படம் பிடிப்பது, கூட்ட நெரிசலான தெருவில் இண்டு இடுக்கில் புகுந்து பைக் ஓட்டிக்கொண்டே ஒரு கையில் கேமராவைப் பிடித்தபடி படம் பிடிப்பது இப்படித் தன்னைத் தானே படம் பிடித்து வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் ஷேர் செய்தவர்கள் பலர்.
ஏடாகூடமாகச் செல்ஃபி எடுத்தவர்களும் உண்டு, செல்ஃபி ட்ரெண்டில் புதிய போக்கை அறிமுகம் செய்தவர்களும் உண்டு. வாங்க! 2014-ல் பரபரப்பு ஏற்படுத்திய செல்ஃபிகளைப் பார்ப்போம்.
சூப்பர் செல்ஃபி 1 - உலகம் சுற்றி 360 டிகிரி செல்ஃபி
அலக்ஸ் சாகான் என்ற 26 வயது அமெரிக்க இளைஞர் ஒரு கோ பிரோ (GoPro) கேமரா மற்றும் செல்ஃபி ட்ரைபாட் ஸ்டாண்ட் எடுத்துக்கொண்டு அவருடைய மோட்டார் பைக்கில் பயணத்தைத் தொடங்கினார். 2011-ல் அலாஸ்காவில் தொடங்கிய அவர், ஒண்ணேகால் லட்சம் மைல்களுக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து 2014-ல் அர்ஜென்டீனாவில் தன் பயணத்தை முடித்தார்.
36 நாடுகளை 600 நாட்களில் சுற்றி வந்தார். பயணத்தின்போது ஒவ்வொரு இடத்திலும் அவர் சந்தித்த மனிதர்கள், எழில் கொஞ்சும் இயற்கை, தனக்குக் கிடைத்த அனுபவங்கள் இப்படி அத்தனையையும் பதிவு செய்ய ஸ்டிக் பொருத்தப்பட்ட கேமராவில் செல்ஃபி வீடியோ எடுத்தார்.
பனிப் பிரதேசம், பாலைவனம், அடர்ந்த காடு, ஆர்ப்பரிக்கும் அருவி, ஆழ்கடல், உலக அதிசயங்கள் இப்படி உலகில் பிரமிப்பூட்டும் பல்வேறு விஷயங்களைப் பார்த்து அனுபவித்து 360 டிகிரியில் சுற்றிச் சுற்றிப் படம் பிடித்தார். அனைவரும் அதிசயிக்கும் விதத்தில் அந்தச் செஃல்பி வீடியோவை வெறும் 3 நிமிடப் பயணப் படமாக அருமையாகத் தொகுத்து, பின்னணி இசை சேர்த்து யூ டியூபில் வெளியிட்டார். அலக்ஸின் பரவசமூட்டும் பயணத்தைக் கண்டு களிக்க https://www.youtube.com/user/chaiku232
சூப்பர் செல்ஃபி 2 -3டி செல்ஃபி கட்டிடம்
வெறும் ஸ்மார்ட் போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் செல்ஃபி எடுத்தவர்களைத் திணறடித்த விஷயம் ரஷ்யாவின் சோச்சி நகரில் உள்ள ‘மெகா ஃபேஸ்’ கட்டிடம். கட்டிடத்தின் உள்ளே சென்று தானியங்கி கேமரா மூலம் புகைப்படம் எடுக்க வேண்டும் அவ்வளவுதான்.
வெளியே வந்து கட்டிடத்தின் முன்னால் நின்று அண்ணாந்து பார்த்தால், 8 மீட்டர் உயரக் கட்டிடம் முழுவதும் புகைப்படம் எடுத்துக்கொண்டவரின் முகம் 3டியில் தத்ரூபமாக எழும்பும். 2014-ன் குளிர்கால ஒலிம்பிக்ஸைச் சிறப்பிக்கும் வகையில் இந்த மெகா ஃபேஸ் கட்டிடத்தை வடிவமைத்தார் கட்டிடக்கலை நிபுணரான ஆஸிப் அலி. அவருக்கு 2014-ம் ஆண்டின் முன்மாதிரி கட்டிடக்கலைக்கான விருது வழங்கப்பட்டது.
சூப்பர் செல்ஃபி 3 - இது குரங்கு செல்ஃபி
அட! உண்மைதாங்க. இது குரங்கு வேலையேதான். காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான டேவிட் ஸ்லேடர் இந்தோனேஷியா காட்டுப் பகுதியில் சுற்றி வந்தபோது திடீரென்று ஒரு கருங்குரங்கு அவர் கேமராவைப் பிடுங்கிக்கொண்டது. இது என்ன பெரிய விஷயம் நான் கூடத்தான் செல்ஃபி எடுப்பேன் என்பதுபோலக் கேமரா பட்டனை அழுத்தியதில் நூற்றுக்கணக்கான செல்ஃபிகள் வந்து விழுந்தன. இது நடந்தது 2011-ல்.
ஆனால் ஏன் இப்போது இதைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், குரங்கின் செல்ஃபி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட விக்கிப்பீடியாவுக்கும் டேவிடுக்கும் பெரிய சண்டை வந்துவிட்டது. “இது நான் எடுத்த செல்ஃபி” என டேவிட் வாதாட, “இல்லை! இது குரங்கு எடுத்த செல்ஃபி அதனால் டேவிடுக்கு காபிரைட்ஸ் கிடையாது குரங்குக்குத்தான்” என 2014-ல் சொல்லிவிட்டது விக்கிப்பீடியா.
ஐந்தறிவு ஜீவனான குரங்கே அழகாகச் சிரித்த மாதிரி போஸ் கொடுத்துச் செல்ஃபி எடுக்கும்போது இனி யாரும் திறமையாகச் செல்ஃபி எடுத்துக்கொண்டதாக காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியாது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT