Published : 05 Apr 2014 12:00 PM
Last Updated : 05 Apr 2014 12:00 PM

செல்போன் காலத்திற்கு முன்னால்...

எனக்கு இப்போது திருமணமாகி கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. எனக்குத் திருமணமான நாளிலிருந்தே என் கணவர் வெளிமாநிலத்தில்தான் பணிபுரிகிறார். குழந்தைகள் பிறந்த செய்திகளைச் சொல்லும்போது என் பிறந்த வீட்டினர் எஸ்.டி.டி. பூத்தில் தவமிருந்து குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் நண்பர் கடையில் வந்தமர்கின்ற என் கணவருக்குச் சொல்வார்.

செய்திகளை வெளியூரில் இருப்பவர்களுக்குத் தெரிவிப்பதற்குள் போதும்போது என்றாகிவிடும். “ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் ஏழு மணிக்கு கணேஷ் ஜவுளிக்கடையில் இருப்பேன். அந்தக் கடையின் தொலைபேசி எண் இதுதான்” என்று ஒரு எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார். நானும் அவருடன் பேசுவதற்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக, என் கணவர் ஒரு எஸ்.டி.டி. பூத்தின் ஓனருடன் நட்பு கொண்டிருந்தார். என்னை அழைத்துச் சென்று அறிமுகமும் செய்துவைத்தார்.

எஸ்.டி.டி. பூத் அனுபவம்

வெள்ளிக்கிழமைக்கு முந்தின தினமே படபடப்பு ஆரம்பித்துவிடும். ஒரு வெள்ளைத்தாளில் எதையெல்லாம் பேசவேண்டுமென்பதை எழுதிவைத்துக் கொள்வேன். சமைக்கும்போதும் மற்ற வேலைகளின்போதும் நினைவு வருவதையெல்லாம் ஓடிஓடிப்போய்க் குறித்துக்கொள்வேன். வெள்ளி இரவு ஆறுமணிக்கே குழந்தைகளைப் பக்கத்துவீட்டில் ஒப்படைத்துவிட்டு ( இதற்காகவே அவர்களிடம் குழைந்து குழைந்து ஃப்ரெண்ட்ஷிப் வைத்துக்கொண்டிருப்பேன். அவர்களுக்கு ஊரிலிருந்து வரும் என் கணவரிடமிருந்து வாங்கிப் பரிசுபொருள் ஏதாவது கொடுப்பேன்.)

கோயிலுக்குப் போவதுபோல தலைமுடி ஒதுக்கி, ஆடை திருத்தி, வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலிருக்கும் அந்த பூத்துக்குச் செல்வேன். செல்லும்போது கடவுளே கடை மூடியிருக்கக் கூடாது என ஆயிரம் கடவுள்களை வேண்டிக்கொள்வேன். ஒருபுறம் பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு வந்த கைக்குழந்தை மேல் ஒரு கவனம்; போனில் பேசவேண்டிய விஷயங்கள் ஒரு புறம்.

திகில் படம் பார்ப்பதுபோல இதயம் துடிக்கும். வைரமுத்து சொல்வதுபோல ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமிலா உருளை’ ஒன்று சுழன்றுகொண்டே இருக்கும். கடை திறந்திருப்பதைப் பார்த்தவுடனே பரவசமாகும். அந்தக் கடையின் படிக்கட்டுகளில் என்னைப் போல பசலைநோய் வந்த பெண்கள் பத்துபேராவது அமர்ந்திருப்பர். பூத்தின் ஓனர் ஒரு மேனேஜிங் டைரக்டர் ரேஞ்சுக்குப் பந்தா பண்ணிக்கொண்டு சீனியாரிட்டி பிரகாரம்தான் அனுப்புவார் கண்ணாடிக் கூண்டுக்குள்.

ஏழுமணி நெருங்குகையில் , ‘ஐயோ இன்னும் நான்குபேர் இருக்கிறார்களே’ என்று ஆயாசமாக இருக்கும். அப்பொழுதே நினைத்துக் கொள்வேன், நமக்காவது தொலைபேசி இருக்கிறது; அந்தக் காலத்தில் ஐந்துவயதிலேயே பிள்ளையைக் குருகுலத்திற்கு அனுப்பிவிட்டு வாலிப வயது வரும்வரை அவனது குரலைகூடக் கேட்கமுடியாமல் எத்தனை தாய்மார்கள் புத்திர சோகத்தில் மாண்டிருப்பர்?

ஓடும் டிஜிட்டல் எண்கள்

“அம்மா நீங்க போங்க” என ஓனரின் குரல் கேட்டுத் தடுமாறிக் கண்ணாடி அறைக்குள் புகுந்து எண்களைச் சுழற்றித் தொடர்பு கிடைத்ததுமே கையில் குறித்துவைத்துள்ள காகிதத்தைப் பார்த்துக்கொண்டு படபடவென்று பேச ஆரம்பிப்பேன். அவர் எத்தனை விஷயங்களைக் கிரகித்துக்கொண்டார் என்றுகூட யூகிக்கமுடியாமல் கண்கள் மேலே ஓடும் டிஜிட்டல் எண்கள் எகிறுவதையே பார்த்துக் கொண்டிருக்கும்.

அவரும் அதே எண்ணத்தோடு வேகமாகப் பேசுவார். ஒருமுறை ரூ.300-ஐத் தாண்டி போய்க்கொண்டே இருந்தது. அதற்காக இதயம் கூடுதலாகத் துடித்தது. டக்கென்று விஷயத்தை அப்ரப்டாக முடித்துக்கொள்வேன். சில நேரங்களில் குழந்தையோடும் பேசவேண்டும் என்றுசொல்லிவிட்டால் இன்னும் திணறல்.

என் பையன் ஆறாம்வகுப்பு படிக்கும்போது அவனது பள்ளியில் ஸ்கவுட் வகுப்புக்காக 3நாள் முகாமுக்கு அழைத்துச்சென்றிருந்தார்கள். திரும்பிவரும்வரை என் உயிர் என்னிடம் இல்லை. ஆக மொத்தம் வீட்டிலுள்ள ஆண்கள் வெளியூருக்குச் சென்றுவிட்டாலே பெண்கள் எல்லோரும் ‘அஞ்சி அஞ்சிச் சாவார்; இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்ற பாரதியார் வாக்கைத்தான் மெய்ப்பித்துக் கொண்டிருப்பர்.

ஆனால் இன்று வேலையையெல்லாம் முடித்துவிட்டு அக்கடா என்று மதியம் இரண்டு மணிக்கு படுக்கையில் விழும்போது கை தடவி கைபேசியை எடுக்கிறது, மிகக் கேஷுவலாக. ‘என்ன பண்ணிட்டு இருக்கீங்க?’ என்று வெட்டி அரட்டை. எவ்வளவு பெரிய சேவையைச் செய்துவிட்டு அந்த செல்போன் தேமேயென்று கிடக்கிறது. ‘எந்தப் பொருளும் நல்ல பொருள்தான் கண்டுபிடிக்கையிலே; அது நன்மை தருவதும் தீமை தருவதும் நாம் கையாளுவதிலே’ என ஒரு திரைப்படப் பாடலை உல்டா பண்ணிப் பாடவேண்டியதுதான் பாக்கி.

- தவமணி கோவிந்தராசன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x