Published : 30 Jan 2015 03:33 PM
Last Updated : 30 Jan 2015 03:33 PM
நாம் பிறந்த பிறகு குறிப்பிட்ட சில வளர்ச்சிப் பருவங்கள் இருக்கின்றன. பிறந்ததிலிருந்து ஆறு மாதங்களுக்கு நமக்கு உடல் இருப்பதுகூட நமக்குத் தெரியாது. வெறும் பிரக்ஞை மட்டும் இருக்கும். ஆறு மாதங்களில் நமக்கு உடல் இருப்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். அதன் பிறகு செயல்பாடு என்பது தொடங்குகிறது. ‘நான் செய்கிறேன்’ என்னும் உணர்வு ஏற்படுகிறது.
இது நிலைப்படுவதற்கு ஒரு வருடம் ஆகிறது. அதன் பிறகு ஒன்றரை வயதிலிருந்து மூன்று வயது வரையில் சிந்தனையின் ஆரம்ப அடிப்படைகள் நிலைபெறுகின்றன. இதன் பிறகுதான், அதாவது மூன்று வயதிலிருந்து ஆறு வயதுவரை உள்ள காலகட்டத்தில்தான் ‘நான் யார்’ என்னும் சுய அடையாளம் நிறுவப்படுகிறது. பொதுவாக நாம் பிறந்து வளரும் சமூகச் சூழல்தான் நம் சுய அடையாளத்தை நிர்ணயிக்கிறது.
நம் பெற்றோர், நம்முடன் வசிக்கும் நபர்கள், இவர்கள்தான் நம் சுய அடையாளத்தை நமக்குள் உருவாக்குகிறார்கள். இதன் அடிப்படையில்தான் நாம், ‘நான் பார்க்க நன்றாக இருக்கிறேன்’, அல்லது ‘நான் அழகாக இல்லை,’ ‘நான் புத்திசாலியாக இல்லை’, போன்ற மன பிம்பங்கள் உருக்கொள்கின்றன. அதாவது நம் சுய பிம்பத்தைப் பிறர்தான் பெருமளவுக்கு உருவாக்குகிறார்கள்.
நாம் வளர்ந்த பிறகு இவ்வாறு நடப்பதைப் பற்றி எந்த விவரமும் தெரியாமல் நம் சுய பிம்பத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு விடுகிறோம். இதன் அடிப்படையில் நாம் நம்மைப் பற்றிச் சிந்தித்துக் குழப்பிக்கொள்கிறோம். ஆனால் சுயசிந்தனையுடன்,’ இது ஏன் நடக்கிறது?’ ’எதனால் இந்த விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்போமானால் இந்த விஷயங்கள் நமக்குப் புரியவரும்.
அப்போது மற்றவர்கள் உருவாக்கிய பிம்பத்தை விடுத்து, நாமே புதியதாக ஒரு மன பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். நாம் நம் மனத்தில் என்ன பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறோமோ அதுதான் நம் வாழ்க்கையாக இருக்கும் என்னும் உண்மை புரியவரும். நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்பது தெரியவரும்.
எனக்கு 23 வயதாகிறது.சிறு வயதில் இருந்தே என்னைப் பற்றிக் கிண்டல், கேளிக்கைகளைக் கேட்டே வளர்ந்துவிட்டேன் . நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை, ஏன் இப்படி இருக்கிறாய் என்று என்னையே கேள்வி கேட்பார்கள். என் வீட்டில் உள்ளவர்களும் உறவினர்களும்கூட இப்படி அடிக்கடி சொல்லிக் கேட்டு நான் வேதனை அடைந்ததுண்டு.
தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது என்று நானே எனக்குள் கூறிக்கொள்வேன். இதனால் எனது பதின் வயதில் என்கூடப் படித்த ஆண் பிள்ளைகளிடம் பேசவும் தயக்கம். ஆனால் நானே இரவில் அவன் என் தோழனாக இருந்தால் நன்றாக இருக்கும், எப்படி ஒன்றாகப் படிப்போம் என்று கற்பனை செய்வேன்.
கல்லூரியிலும் என்னிடம் யாரும் அதிகமாகப் பழகவில்லை. அதனால் நான் பேச நினைத்த பையனிடம் கற்பனையில் பேச ஆரம்பித்தேன். இப்படி எல்லா நாட்களும் நான் கற்பனையில் இருந்ததுண்டு. ஆனால் இப்பொழுது தனிமையை நானே உருவாக்கி அதிக நேரம் கற்பனைக் கதையிலே இருக்கிறேன். எனக்குக் காதலன் இருந்திருந்தால் எங்கெல்லாம் போவோம் என்று நானே ஒரு கதையை உருவாக்கி, மனதில் நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் பயம் தடுக்கிறது. யாரேனும் என்னை ஏதாவது கேள்வி கேட்டுவிடுவார்களோ, அசிங்கமாகிவிடுவோமோ என்று தோன்றி என்னால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை. ஆண்களை அணுகுவதற்கு மிகவும் பயம், பதற்றம் வந்துவிடுகிறது. இதனால் என்னால் வேலைக்குக் கூடச் செல்ல முடியவில்லை.
வீட்டில் தான் இருக்கிறேன். வீட்டில் என் பிரச்சினையைக் கூறாமல் தனிமையில் இருப்பதால் திமிர் பிடித்தவள் என்று நினைக்கிறார்கள். என் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று பயமாக இருக்கிறது. நான் இதிலிருந்து மீள நினைக்கிறேன். என்னால் முடியவில்லை. தயவு செய்து ஒரு வழி கூறுங்கள்.
திறந்த மனத்துடன் பொதுவெளியில் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான ஆயத்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. இ
துவரையில் மற்றவர்கள் சொன்னதைக் கேட்டுத்தான் உங்களைப்பற்றிய சுய பிம்பத்தை வைத்திருக்கிறீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பார்க்க நீங்கள் நன்றாக இல்லை என்று மற்றவர்கள் சொன்னதை ஏன் நம்பினீர்கள்? ஏன் இன்னும் நம்புகிறீர்கள்? ‘நன்றாக இருப்பது’ என்பது என்ன என்பதை யார் நிர்ணயிப்பது? நீங்கள் பார்க்க நன்றாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
பார்ப்பதற்கு எப்படி இருக்கிறீர்கள் என்பதைத் தவிர உங்களிடம் வேறு விஷயங்கள் எதுவுமே இல்லையா? அதுபற்றி ஒன்றுமே நீங்கள் சொல்லவில்லையே? உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் என்னென்ன? அதைப் பட்டியல் இடுங்கள். நிச்சயம் நிறைய விஷயங்கள் இருக்கும்.
நீங்கள் மிகுந்த கற்பனைத் திறன் வாய்ந்தவர், ஆக்கபூர்வமானவர் என்று தெரிகிறது. இது வரையில் வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் செல்வதற்கு மட்டுமே அந்தத் திறன்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறீர்கள். இனிமேல் அதை உங்கள் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துங்கள். உங்களைப் பற்றிய எதிர்மறையான சுய பிம்பத்தை உதறிவிட்டுப் புதிய, ஆரோக்கியமான சுய பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது முற்றிலும் உங்களிடம் மட்டுமேதான் இருக்கிறது. வெளியில் சென்று மற்றவர்களிடம் திறந்த மனத்துடன் பழகுங்கள். ‘நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறேன்’ என்னும் உணர்வுடன் போய்ப் பேசுங்கள். அப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பாருங்கள். புதியதொரு வாழ்க்கையை இன்றிலிருந்து வாழத் தொடங்குங்கள்.
கிராமப்புறத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான எனக்குத் தற்போது 24 வயதாகிறது. கூச்ச சுபாவம் உடையவன் நான். படிப்பை முடித்து இரு வருடங்களுக்கு மேல் ஆகியும் நல்ல வேலை கிடைக்கவில்லை. ஏனெனில் ஆங்கிலம் சரளமாகப் பேசவராதது மட்டுமல்ல மற்றவரோடு எப்படிப் பழக வேண்டும் என்பதுகூட எனக்குத் தெரியாது.
பல போட்டித் தேர்வுகள் எழுதினேன். ஒரு அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி கிடைத்தது. அதுவும் ஒரு ஆண்டில் முடியவே பிறகு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன். அங்கு வேலை பளு மிக அதிகம் ஆனால் சம்பளமோ வெறும் 6000 ரூபாய். ஒரு கட்டத்தில் இந்த வேலை வேண்டாம் நல்ல அரசு வேலைக்கு மட்டும் செல். அதற்காக உன்னைத் தயார்படுத்திக்கொள் என்று சொல்லி மீண்டும் எங்கள் ஊருக்கே வர வைத்துவிட்டார்கள்.
என் நண்பர்களில் பலர் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்து நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு ஏக்கமாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் எனக்கு வேலைக்குச் செல்லவே பிடிக்கவில்லை. சென்னை போன்ற நகர்ப்புறங்களுக்குச் செல்லவும் பிடிக்கவில்லை. என் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ எனப் பயமாக இருக்கிறது. என் பயத்தைப் போக்க உதவுங்கள்.
செல்ல வேண்டிய திசையை மற்றவர்களிடமிருந்தே நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம் உங்களைப் பற்றி உங்கள் மனதில் இருக்கும் சித்திரம் மிகவும் தாழ்மையானதாக இருப்பதுதான். உங்கள் மீது உங்களுக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை. வாழ்க்கை மீதும் நம்பிக்கை இல்லை. ஆங்கிலம் பேசத் தெரியாதது ஒன்றும் பெரும் பிரச்சினை இல்லை, அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்போது மற்றவர்களிடம் பழகத் தெரிவது என்பது தானாகவே வந்துவிடும்.
நீங்கள் உங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் அதிமுக்கியமான நபர் என்னும் உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். அதன் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை நீங்கள் உள்ளேயிருந்து பார்க்காமல், மற்றவர்களின் கண்கள் வழியாக மட்டுமே பார்க்கிறீர்கள்.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நீங்கள் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. அது அவர்கள் பாடு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். தாழ்வு மனப்பான்மை என்னும் கனவு மூட்டத்திலிருந்து விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது நண்பரே.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,
சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT