Published : 23 Jan 2015 04:10 PM
Last Updated : 23 Jan 2015 04:10 PM
ஆதரவற்றோர்களுக்கு உதவும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால் அதற்கான நேரமும், சூழ்நிலையும் நமக்கு கிடைத்திருக்காது. எங்கே சென்று உதவுவது, யாருக்குச் செய்வது, நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று பல விஷயங்களை யோசிப்போம்.
கடைசியாக சிக்னல்களிலும் தெரு ஓரங்களிலும் தட்டை நீட்டுபவர்களுக்கு ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு நம் கடமை முடிந்து விட்டதாக ஆத்ம திருப்தி அடைந்து விடுவோம். பணத்தால் வெல்ல முடியாத அன்பை, நாம் அனைவரும் இணைந்து மனதால் வெல்வோம் என்னும் குறிக்கோளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது இளைஞர் சேவை அமைப்பான ‘படிக்கட்டுகள்’.
இணைந்த இளம் கைகள்
மதுரை சுற்றுவட்டாரத்தில் 2012-ல் கல்லூரிப் படிப்பை முடித்த சில இளைஞர்களும், படித்து கொண்டிருந் தவர்களும் ஒருங்கிணைந்து தோற்று வித்ததே ‘படிக்கட்டுகள்’ அமைப்பு. 25 பேர் மட்டுமே சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பில் இப்போது மதுரை, சென்னை, கோவை, ராஜபாளையம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 150 பெண்கள் உள்ளிட்ட 350 உறுப்பினர்கள் உள்ளனர்.
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என ஒட்டு மொத்தமாய் வேகம் கலந்த இளமைப் பட்டாளம்தான் இந்தப் படிக்கட்டுகளின் செங்கற்கள்! விருப்பப்படும் எவரும், படிக்கட்டுகளைப் பலப்படுத்தலாம்!
செயல் திட்டம்
முதியோர் இல்லங்களில், மனநலக் காப்பகங்களில், சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவியைப் பணமாகவோ பொருளாகவோ அளிப்பது இவர்கள் வழக்கம். ஏழைக் குழந்தை களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கு கிறார்கள், வசதி இல்லாத குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவைக்கிறார்கள். கிராமப்புற, நகர்ப்புற அரசு மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள், ஆலோசனைகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துகிறார்கள்.
ரத்ததானம் வழங்குவது, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது போன்ற சேவைகளில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களைக் கற்பித்தல், நடனப் பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், பார்வையற்றோருக்குத் தேர்வு எழுத உதவது எனப் பொருளாதாரம் சாரா சேவைகளும் இவர்கள் பணியில் இடம் பெறுகின்றன.
உதவிய ஃபேஸ்புக்
சென்னை புழலில் உள்ள வள்ளலார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கஷ்டப்பட்டவர்களுக்கு போர்வெல் அமைக்க ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டிருக்கிறது.
>https://www.facebook.com/Padikkattugal என்னும் முகநூல் பக்கத்தில் படிக்கட்டுகளின் சேவையையும் குழந்தைகளின் தேவையையும் பதிவிட, ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. அதை வைத்து, போர்வெல் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். படிக்கட்டுகளின் >padikkattugal.org வலைத்தளம் இவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாதச் சம்பளம் பெறுகிற 300 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்திலிருந்து மாதம் ஐந்நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை படிக்கட்டுக்குத் தந்துவிடுகிறார்கள். அதைக் கொண்டு மாதம் ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் தேவையானதைச் செய்து கொடுக்கிறார்கள்.
எதிர்காலப் பாதை
தங்களைப் போன்ற கல்லூரி மாணவர் களைப் பெரிய அணியாகத் திரட்டி ஒன்றிணைந்து ஆதரவற்றோருக்குச் சேவை செய்யும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார்கள் படிக்கட்டுகளின் அத்தனை உறுப்பினர்களும்.
ஏழைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் உதவ ஆயிரமாயிரம் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுடன் உட்கார்ந்து நேரம் செலவிட, குழந்தைகளுக்குப் பாடம் போதிக்க, பொது அறிவு சொல்லித்தர, அவர்களின் தனித்திறனை வளர்க்க யாரும் முன்வருவதில்லை!
இது போன்ற துடிப்பான, சேவையில் ஆர்வமுள்ள இளைஞர் சமுதாயத்துடன் கைகோத்துப் பயணித்தாலே ஆதரவற்றோர்க்கான பாதைப் பூக்கள் அழகாய் மலரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT