Last Updated : 26 Apr, 2014 01:06 PM

 

Published : 26 Apr 2014 01:06 PM
Last Updated : 26 Apr 2014 01:06 PM

நீல மலர்களின் ஏற்காடு

சேலம் ரயில் நிலையத்திலிருந்து, ஏற்காட்டை நோக்கிச் செல்லும் மலைப் பாதையில் காரில் ஏறியபோதே காலை இள வெயில் அடிக்கத் தொடங்கியிருந்தது. கோடை மாதத் தொடக்கம் என்றாலும் சேலத்தில் மார்கழிக் குளிரின் தண்மை காலை ஏழு மணிவரை நீடித்தது. அறுபது அடி பாலத்தில் எங்கள் கால் டாக்சி நின்றது. வலது பக்கம் நெடிதுயர்ந்து நிற்கும் சேர்வராயன் மலை எங்களை அழைக்கிறது. தவிட்டுக் குருவிகள், தேன் சிட்டுகள், தீக்காக்கை, குங்குமப் பூச்சிட்டு என மரங்கள், குற்றுச் செடிகளுக்கு இடையே விரல் அளவிலிருந்து உள்ளங்கை அளவு வரை எண்ணற்ற பறவைகள். ஒரு செடியில் செக்கச்செவேல் என்று பூத்திருந்த மிளகாய்ப் பழத்தைப் பார்த்தபோது சிறு கிளியைப் போலத் தோன்றியது.

குண்டூர் பிரிவைத் தாண்டிச் சற்று தூரம் கல்பாதையில் ஏறியதும் எந்திரங்களின் ஓசை கேட்கத் தொடங்கியது. கிட்டத்தட்டப் பாதி தூரம் வந்துவிட்டோம் என்ற உணர்வில் சற்று இளைப்பாறினோம். மேலிருந்து கீழே பார்க்கும்போது, சேலம் சிறிய வரைபடமாகச் சுருங்கியிருந்தது. சேலத்தின் பாக்சைட் வெட்டும் இடங்கள் மட்டும் காயம்பட்ட உடல்போலக் காட்சியளித்தன. மீண்டும் நடக்கத் தொடங்கினோம். நுரையீரல் குளிர்ந்து உடலே பஞ்சாய் ஆகியிருந்தது. கால் தசைகள், வயிறு என எல்லா இடத்திலும் குளிர் மத்தாப்புகள் பொடிப்பொடியாகத் தெறிப்பதை உணர முடிந்தது. உடலில் அழகானதும், ஆரோக்கியமானதுமான ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்பதை மட்டும் உணர முடிந்தது. இதுவரை அனுபவித்திராத உணர்வு இது.

குண்டூருக்கு மேலே ஒரு திருப்பத்தில் சட்டென்று பளீர் வெளிச்சம் புதிய பாதை மேலே விழுந்துகொண்டிருந்தது. நிலம் கால்களுக்குக் கீழே புழுதியாக மாறியிருந்தது. மரங்கள் வெட்டப்பட்டு வேகவேகமாகச் சாலை அமைக்கப்பட்டுவருகின்றன.

நூற்றாண்டு கண்ட மரங்களையும் கற்களையும் புல்டோசர்கள் தமது ராட்சசக் கரங்களால் பெயர்த்துவிட்டன. புதிதாக அரிந்தெடுக்கப்பட்ட இறைச்சியைப் போல இருந்தது அந்த இடம். மேற்பார்வையாளர்கள் பைக்கில் வலம்வந்து சாலைப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கற்களை ஏற்றும் வண்டி ஒன்று கடந்தபோது, பெரும் புழுதி முகம் வாயெங்கும் புகுந்து சென்றது.

மெத்தென்று இருக்கும் புழுதி மணலுக்குள் கால்கள் புதைவது அசௌகரியமான உணர்வைத் தந்தது. மலையேறுபவர்களுக்கு துணையாக இருக்கும் மரங்களின் கருணையில் பெற்ற நிழலும், குளிர்ச்சியும் மறைந்து நகரத்தில் நடப்பது போன்ற ஒரு பிரமை. சாலை வேலைகளால் மலையைக் கடப்பதற்கான பாதைகளும் சீர்குலைந்துள்ளன. அதனால் சுற்றிச் சுற்றி வளையும் புதிய சாலைகள் வழியேதான் அதற்குப் பிறகு நடக்க வேண்டி இருந்தது. மணி பதினொன்று.

சாலை போடும் வேலையில், துண்டிக்கப்பட்ட நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி தடத்தைத் தேடி இரண்டு பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் கடந்து சென்றனர். இனிமேல் சாலைதான், லேடீஸ் சீட் என்று அழைக்கப்படும் பகுதிக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்றனர்.

அப்போது மரங்களினூடாக சாலைக்குத் தடதடவென்று வேகமாக இரண்டு மலைவாழ் கிராமத்துப் பெண்கள் நடந்துவந்தனர். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டோம். அறுவது அடி பாலத்திலிருந்து வருவதாகச் சொன்னார்கள். இந்த சாலை போடுவதால் இனி போக்குவரத்துக்கு சங்கடமில்லை என்று சொன்னார்கள். தேர்தலை முன்னிட்டு வேகமாக சாலைப்பணிகள் நடந்துமுடிந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் சொன்னார்கள். எங்க புள்ளைகள் எல்லாம் சேலத்தில் உள்ளவர்களைப் போல வண்டி வாங்கிவிடுவார்கள் என்று சொல்லும்போது முகத்தில் பெருமிதம் தொனித்தது. நாங்கள் மூன்று மணிநேரத்துக்கும் மேல் நடந்துவந்த பாதையை அவர்கள் 43 நிமிசத்தில் கடந்துவிட்டோம் என்று கையில் உள்ள பழைய செல்போனைப் பார்த்து துல்லியமாகச் சொன்னார்கள். வெயிலில் கருத்து, வத்தலைப் போல இருக்கும் உடலுடன் எங்களை வேகமாகக் கடந்து சென்றனர். எங்களுக்கு முன்னரே அவர்கள் ஏற்காட்டை அடைந்துவிடுவார்கள்.

மலைக்கு மேலே வந்துவிட்டோம் என்ற எண்ணத்தை ஏற்காட்டின் விதவிதமான மலர்களே நமக்குத் தெரியப்படுத்துகின்றன. குழந்தைகளின் நடமாட்டம் ஆரம்பித்துவிட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல் நாள் பொதுத்தேர்வை முடித்து, கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததாக சந்தோஷமான முகத்துடன் பகிர்ந்துகொண்டார்கள்.

ஏற்காடு என்னும் பெயருக்கே காரணமான, பிரதான ஏரிப்பகுதிக்கு வந்துவிட்டோம். இந்த ஏரி இயற்கையாகவே உருவானது. ஏற்காடு மலைவாசஸ்தலத்தின் முக்கியமான அடையாளம் என்றால் மலர்கள்தான். மலையின் காமம் போல அவை நிறம் நிறமாக, வெவ்வேறு வடிவங்களில் வகைவகையாகத் திருவிழா கொண்டாடுவதுபோல நிற்கின்றன. இங்குள்ள மலர்களும், மரங்களும், மனிதர்களும் புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான். இங்குள்ள பாரம்பரியமான பூவினங்கள் பல அழிந்துவிட்டதாகச் சுற்றுச்சூழலியாளர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம் அன்னிய இனத்தாவரங்கள்தான் என்றும் 2005-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் அறிக்கை வேதனைப்படுகிறது.

அன்னிய மலர்களாக இருந்தாலும் மற்ற தாவர இனங்களை அழிப்பவை என்று கூறப்பட்டாலும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கின்றன.

(இது தி இந்து சித்திரை மலரில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x