Published : 09 Jan 2015 12:42 PM
Last Updated : 09 Jan 2015 12:42 PM
உண்மையான, ஆழமான காதல் என்பது மிகவும் அரிதானது. அது சுயத்தின் ஆழம் சார்ந்தது. ஆழமற்ற ஒரு மனத்தில் ஆழமான காதல் பிறந்து, வேர்கொண்டு வளர்ந்து, நிலைக்க முடியாது. அது சாத்திய மில்லை. சுயமும் காதலும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவை. வாழ்க்கையின் சம்பவங்கள் முன்கூட்டிக் கணிக்க முடியாதவை. நம் எதிர்பார்ப்புகளின் இலக்கணத்துக்குள் அடங்காதவை. இவ்வாறு கணிக்க முடியாமல் இருப்பது தான் வாழ்க்கையின் ஆச்சரியம், சுவாரசியம். எல்லாவற்றையும் முன்கூட்டித் தெரிந்துகொண்டுவிட முடிந்தால் வாழ்க்கை மிகவும் இயந்திரத் தனமானதாக ஆகிவிடும்.
காதல் அகவளர்ச்சி சார்ந்தது. அக வலிமை சார்ந்தது. காதலிப்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். பெரும் மனோதிடம் வேண்டும். கஷ்டங்களை எதிர்கொள்ளும் துணிவு வேண்டும். திடமான சுயஉணர்வு இல்லாதவர்களின் காதல் பலவீனமாக இருக்கும். நிலையற்றுப் போய்விடும். சந்தர்ப்ப சூழ்நிலைகளின் வீச்சுக்கு முன்னால் எதிர்த்து நிற்கும் திராணி அதற்கு இருக்காது.
காதல் சுயத்தின் வெளிப்பாடு. வீரியம் மிகுந்த சுயத்தில்தான் வீரியம் மிக்க காதல் வெளிப்படும். இந்தக் காரணத்தால்தான் காதல் உறவுகள் பெருமளவில் நிலை யற்றுத் தடுமாறித் தோற்றுப் போகின்றன. காதலர்களைவிடக் காதல் முக்கியமானது. காதலர்க்குத் தோல்வி நேரலாம். காதலுக்கு என்றும் தோல்வி இல்லை.
நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். என் வகுப்பில் படிக்கும் பல பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு யாரும் கிடையாது. இதனால் எனக்கே என்மீது வெறுப்பு வந்துவிட்டது. இந்த எண்ணத்தைப் போக்க பேஸ்புக்கில் ஆண் நண்பர்களைச் சேர்க்க ஆரம்பித்தேன். என் புகைப்படம் பதிவு செய்ய வேண்டிய இடத்தில் வேறொரு அழகான பெண்ணின் முகத்தை அப்லோட் செய்தேன். என்னைப் பற்றிய தகவல்களைக் குறிப்பிடும்போது நான் மிகவும் மார்டனாக உடை அணிவேன், காரில்தான் கல்லூரிக்குச் செல்வேன், எனப் பல பொய்யான தகவல்கள் கொடுத்தேன்.
நிறைய ஆண் நண்பர்கள் கிடைத்தார்கள். தினமும் ஜாலியாக பேஸ்புக்கில் அவர்களோடு அரட்டை அடிப்பேன். காலப்போக்கில் ஜீவாவோடு நட்பு மலர்ந்தது. அவன் மிகவும் நல்லவன். நான் பணக்காரி எனச் சொன்னபோதும், தான் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவன், தினமும் பேருந்தில்தான் கல்லூரிக்குச் செல்வேன் என்றான். இதனால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நட்பு காதலாக மாறியது. பேஸ்புக்கிலும், மொபைல் போனிலும் பேசியபடி காதலித்துவருகிறோம்.அடுத்த வாரம் அவன் என்னைப் பார்க்கச் சென்னைக்கு வருவதாகக் கூறியுள்ளான். நான் இத்தனை நாட்களாகச் சொன்ன அத்தனை விஷயங்களும் பொய் என்று தெரிந்தால் அவ்வளவுதான் அவன் என்னை வெறுத்துவிடுவான். இப்போது நான் என்ன செய்வதென்று புரியவில்லை.
நீங்கள் உங்களைப் பற்றிப் பொய்யான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இதன் மூலமாக நீங்களே உங்களை மறுத்திருக்கிறீர்கள். உங்கள் பொய் முகத்தையே நீங்கள் என்று உங்கள் பேஸ்புக் நண்பர்களும் உங்கள் காதலரும் நம்பிவருகிறார்கள். அவர் காதலிப்பது உங்கள் பொய் பிம்பத்தைத்தான், இல்லையா? ஏன் நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? நீங்களே உங்களை மறுத்தால் வேறு யார் உங்களை ஏற்றுக்கொள்ள முடி யும்? மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள், இல்லையா? உங்கள் மீது உங்களுக்குப் பிரியமோ, மரியதையோ மதிப்போ இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதன் விளைவாகத்தான் உங்களுக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதுவரையில் போனது போகட்டும். முதலில் உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ‘இதுதான் நான்,’ என்று உங்களை உள்ளபடியே ஏற்றுக் கொள் ளுங்கள். உங்கள் காதலர் வரும்போது உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வதிலிருந்து அவர் பணத்தாலும் ஆடம்பரத்தாலும் மயங்குபவர் அல்ல என்றுதான் தோன்றுகிறது. அவர் என்ன முடிவெடுத்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை அவர் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீங்களே உங்களுக்குக் கிடைத்திருக்கும் பரிசு என்று பார்க்கத் தொடங்குங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் மாறுவதை நீங்களே பார்ப்பீர்கள். உங்களுக்கு நீங்கள் கிடைப்பதுதான் முக்கியம்.
எனக்கு 23 வயதாகிறது. ஒரு பெண்ணை ஒரு வருடத்துக்கும் மேலாகக் காதலித்துவருகிறேன். அவள் என் காதலை ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஏற்றுக்கொண்டாள். அவள் பத்தாவது படிக்கும்போது ஒரு பையனைக் காதலித்திருக்கிறாள். நானும் என் முன்னாள் காதலை அவளிடம் சொன்னேன். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டு காதலித்து வந்தோம். நான்கு மாதங்களுக்கு முன்பு எங்களுடைய காதல் அவள் வீட்டுக்குத் தெரியவர அவளை அடித்து, அவள் மொபைல் போனைப் பறித்துக்கொண்டார்கள். இருந்தாலும் எப்படியாவது என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் என்னைத் தொடர்புகொள்வதே இல்லை. ஒரு நாள் அவள் பிரண்ட்ஸ் மூலமாக என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள். நான் அவளை மிகவும் ஆழமாகக் காதலிக்கிறேன். அடுத்த மாதம் வெளிநாட்டில் வேலையில் சேரப் போகிறேன். ஆனால் எங்கு சென்றாலும் என்னால் அவளை மறக்க முடியாது. இப்போது நான் என்ன செய்ய?
அவளை ஆழமாகக் காதலிக்கிறேன் என்று சொல்கிறீர்கள். அவள் காரணம் ஏதும் சொல்லாமல் உங்களை மறுத்திருக்கிறாள். மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம்தான் அது. ஆனால் இதை வேறு விதமாக யோசித்துப் பாருங்களேன். உங்கள் காதல் உங்களுடையது. உண்மையானது. அதுதான் முக்கியம். அதை நீங்கள் என்றைக்குமே இழந்துவிட முடியாது. காதலி போய்விடலாம். அது உங்கள் கையில் இல்லை. ஆனால் உங்கள் காதல் உங்களிடமிருந்து என்றைக்கும் போய்விடாது. அது உங்கள் சுயம் சார்ந்தது. நீங்கள்தான் அது.
ஏன் உங்கள் காதலி திடீரென்று உங்களைவிட்டு விலகிச் சென்றுவிட்டாள் என்பது தெரியவில்லை. பெற்றோரின் கட்டுப்பாடாக இருக்கலாம். காரணம் வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை இப்போது ஆராய்ந்து கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. கவனத்தை உங்கள் மீதே திருப்புங்கள். இப்போது நடந்ததை உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் சேர்ந்து, வெளிநாடு போக உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பையும் பயன் படுத்திக்கொள்ளுங்கள். புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள் இவையெல்லாம் உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் உண்மையான, ஆழமான, திடமான காதலுக்குப் பொருத்த மான, தகுதியான ஒரு பெண் உங்களுக்குக் கிடைப்பாள். இது ஒரு வாழ்க்கை அனுபவம். இதில் இருக்கும் படிப்பினையை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையை முன்னோக்கிப் பாருங்கள். முன்னே செல்லுங்கள்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT