Last Updated : 12 Dec, 2014 01:25 PM

 

Published : 12 Dec 2014 01:25 PM
Last Updated : 12 Dec 2014 01:25 PM

தமிழ் பேசும் சீனப் பெண் ஆர்ஜெ

லியோ லியாங் எனும் சீனப் பெயரைச் சரியாக உச்சரிப்பதே நமக்குக் கடினமாக இருக்கும். ஆனால் இந்த பெயர் கொண்ட ஓர் இளம் சீனப் பெண்ணின் நாவில் தமிழ் சரளமாக விளையாடுகிறது. சீன அரசு, ‘சீனா ரேடியோ இண்டர்நேஷனல்’என்ற பெயரில், வெளிநாடுகளின் மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.

அந்த சீன வானொலி நிலையத்தில் தமிழ் ஒலிபரப்புப் பிரிவில் ஆர்ஜேவாக வேலை பார்த்து வருபவர்தான் லியோ லியாங். ஆனால் அந்த நிகழ்ச்சியைக் கேட்பவர்களுக்கு லியோ என்றால் தெரியாது ‘பூங்கோதை’ என்றால்தான் தெரியும். எப்படித் தமிழ் மொழியை இவ்வளவு சரளமாக பேசக் கற்றுக் கொண்டார், பூங்கோதை என்ற பெயர் எப்படி வந்தது போன்ற பல கேள்விகள் மனதில் ஓடுகின்றனவா?

பூங்கோதையாக மாறிய லியா

சீனாவின் தமிழ் வானொலி ஒலிபரப்புப் பிரிவில் 20 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் சிலர் தமிழகத்திலிருந்து சென்றவர்கள். பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் முறைப்படி தமிழ் பயின்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அவர்களுள் மிகப் பிரபல மானவர் பூங்கோதை என்ற லியோ லியாங்.

யாரைப் பார்த்தாலும், இரு கை கூப்பி, அழகு கொஞ்சும் தமிழில் லியா சொல்லும் முதல் வார்த்தை, “வணக்கம்”. “என்னை மிகவும் ஈர்த்த மொழி தமிழ். கடினமான இலக்கணங்களை உடைய மொழி எனத் தெரிந்துதான் தமிழைக் கற்கத் தொடங்கினேன். ஆனால், கற்ற பின்தான், அந்த மொழியைவிட இனிமையான மொழி, வேறு எதுவும் இல்லை என்பதை அறிந்தேன். தமிழில் டிப்ளமா படித்துள்ளேன். பல்கலைக்கழகத்தில் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர்தான் பூங்கோதை என்ற பெயரையும் எனக்குச் சூட்டினார்” என்கிறார்.

தமிழ்‘நாடு’ கனவு

கிழக்குக் கடற்கரை மாகாணத்தில் உள்ள குசொவு நகரில் பிறந்த லியா தமிழ் மொழி படிப்பதற்காகவே பீஜிங் நகருக்கு இடம்பெயர்ந்தவர். பீஜிங்கில் உள்ள சீன தொடர்புக்கலை பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலை டிப்ளமா படித்து முடித்து 2011-ல் ‘சீனா ரேடியோ இண்டர்நேஷனல்’லில் ஆர் ஜேவாக மாறினார்.

சமீபத்தில் 100 நபர்கள் கொண்ட இந்திய இளைஞர் கழகம் சீனாவுக்கு வருகைதந்தது. அவர்களை வைத்து லியா மற்றும் அவர் குழுவினர் ஒரு வானொலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது ‘சீனப் பெண், இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுகிறாளே’ என ஆச்சரியப்பட்டார்கள். நான் அவர்களில் ஒருத்திபோல இயல்பாகவும் சகஜமாகவும் பேசியது அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது” என்னும் லியாவின் அடுத்த கனவு கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு வருவதுதான். நல்ல தமிழ் பேசும் லியா தமிழ்நாட்டின் உடனடி தேவைதானே?

(தகவல் ஆதாரம்: பிடிஐ)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x