Published : 12 Dec 2014 01:28 PM
Last Updated : 12 Dec 2014 01:28 PM
சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் உடற்பயிற்சி பாடப் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார் அவர். எட்டு வருடங்களாக வாலிபால் விளையாடி நேஷனல் லெவல், யூத் லெவல், ஜூனியர் லெவல், பீச் நேஷனல், பீச் இந்தியா என ஒவ்வொரு லெவலிலும் எக்கச்சக்கமான பரிசுகளைக் குவித்திருக்கிறார். கழுத்தே தொங்கும் அளவுக்குப் பதக்கங்களையும் கோப்பைகளையும் அடுக்கி வைத்திருந்தாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் கனவோடு துள்ளித் திரிகிறார்.
“ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்கும் என் வீட்டுக்கும் பெருமை சேர்க்கணும் இதுதான் என் கனவு” எனத் தன்னம்பிக்கையுடன் சொல்லும் அவர் பானு பிரியா.
ஒன்றா! இரண்டா! சவால்கள்
“நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது, வாலிபால் விளையாட ஆரம்பித்தேன். என் பள்ளி தான் எனக்கு எல்லாமே கற்றுக் கொடுத்தது. முக்கியமாக என் கோச் சரத் சார்தான் என்னை ஊக்குவித்து இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்” எனச் சொல்லும்போது பானுவின் கண்கள் கலங்கின. பானு சிறுமியாக இருந்தபோதே அவர் அப்பா ஒரு விபத்தில் இருந்துவிட்டார். ஐந்து பெண் பிள்ளைகள் கொண்ட அவர் குடும்பத்தை பானுவின் மூன்று அக்காக்கள்தான் பராமரித்து வருகிறார்கள்.
“நான் ஒரு தடவை மினி நேஷனல் லெவெலுக்கு ஆடப் போகும்போது உயரம் இல்லை எனச் சொல்லி அனுமதிக்க மறுத்தாங்க. அப்போது சரத் சார் உங்க கணிப்பு தவறு இவளோட உயரத்தைப் பார்க்காதீங்க விளையாட்டைப் பாருங்க எனச் சொல்லி விளையாடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். அதே மாதிரி அந்த போட்டியில் முதல் பரிசு வென்றேன். அதைத் தான் என்னோட மிக பெரிய வெற்றியாக நினைக்கிறேன்” எனச் சொல்லும் பானுவின் பாதையில் பல தடைகள் ஏற்பட்டுள்ளன. அப்போதெல்லாம் தன் ஆசிரியர்தான் கை கொடுத்து தூக்கிவிட்டதாகப் பூரித்துப்போய் சொல்கிறார் அவர்.
“நான் பீச் வாலி பாலில் இந்தியா லெவெலுக்கு விளையாட போகும்போது ஒரு பிரபலமான கல்லூரி எங்களை விலகச் சொல்லி மிரட்டியது. ஆனால் நாங்கள் பின்வாங்காமல் அந்தப் போட்டியில் 2-வது இடம் வென்றோம். ஆனால் அந்தக் கல்லூரி தோற்றுவிட்டது. அதே மாதிரி மற்றொரு போட்டியின் போது பாஸ் போர்ட் கிடைக்க விடாமல் பன்னாங்க. மேட்ச்சுக்கு கடைசி நாள் வரைக்கும் பாஸ் போர்ட் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியோ சமாளிச்சு பாஸ் போர்ட் வாங்கினோம். மேட்சுக்குக் கடைசி நேரத்துல போனதால எங்களால மூன்றாம் இடத்துக்குத்தான் வர முடிந்தது” இப்படிச் சவாலுக்கு மேல் சவாலைச் சமாளிக்கிறார் பானு.
நம்பிக்கை தானே எல்லாம்
“நான் மேட்சுக்கு போகும்போது ஒரு வாரம்கூட வெளியே தங்க வேண்டி வரும். அந்த நாட்களில்கூட என் வீட்டில் ‘நல்லா விளையாடிட்டு வா’ என்றுதான் சொல்லி அனுப்புவாங்க. தினமும் இரவு பகல் பார்க்காமல் 5 மணி நேரத்துக்கு மேல் பயிற்சி செய்வேன். அப்போதெல்லாம் வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகிவிடும் அந்த சமயத்தில் கூட என்னை திட்டமாட்டாங்க” எனும் பானுவின் குடும்பத்தில் ஆண்கள் கிடையாது. ஆனால் ஐந்து குழந்தைகளையும் துணிச்சலான பெண் பிள்ளைகளாக வளர்த்திருக்கிறார் அவருடைய தாய்.
மேற்கொண்டு எம்.பி.ஏ. படிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறார் பானு. எப்படியும் ஒலிம்பிக்கில் விளையாடி தங்கப் பதக்கம் வெல்லும் உத்வேகத்தோடு பேசும் பானு, “நிச்சயம் என்னை மறுபடியும் இதே மாதிரி பேட்டி எடுக்க வருவீங்க அப்போ ஒலிம்பிக்கில் இந்திய ‘வாலிபால் விளையாட்டு வீரர் பதக்கம் வென்றார்’ எனும் பட்டத்தோடும் பதக்கத்தோடும் நான் பேட்டி கொடுப்பேன்” கம்பீரமாகச் சொல்லிச் சிரிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT