Last Updated : 26 Dec, 2014 01:25 PM

 

Published : 26 Dec 2014 01:25 PM
Last Updated : 26 Dec 2014 01:25 PM

காலர் டியூன் டீன்கள்

இன்றைய பேஷன் உலகத்தில் அதிகரித்து வரும் விஷயங்களில் ஒன்று காலர் டியூன். இப்போதெல்லாம் யாருக்கு கால் செய்தாலும் காலர் டியூன் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டாகாசங்கள் தாங்க முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்?

நான் எப்போதும் அப்டேட்

“எனக்குப் பாடல்கள் கேட்பது ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லும் இந்துமதி எப்போதும் ஹெட்செட் கையுமாகத் தான் இருப்பாராம். “நான் கேட்டு ரசித்த பாடல்களை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக காலர் டியூன் வைப்பேன். யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டுமே!” என்று வசனத்தை அள்ளி விடுகிறார்.

மேலும் “நான் திரைக்குப் புதிதாக வரும் பாடல்களைக் கேட்டு உடனடியாக காலர் டியூனாக செட் செய்து விடுவேன். அப்போதுதான் மற்றவர்களுக்கு நான் எப்போதும் அப்டேட்டாக இருக்கிறேன் என்பது தெரியும். அதே நேரத்தில் மெலடி ஸாங்ஸ்தான் வைப்பேன். நாம ஜாலிக்காக எதையாவது குண்டக்க மண்டக்க வெச்சு கடைசியில் ஜோலி முடிஞ்சுடும்” என அலர்டாகவும் பேசுகிறார்.

காலர் டியூனால் காது போச்சா?

பேசும் போதே கணீர் கணீர்னு பேசுகிறார் பார்வதி. இவங்க காலர் டியூனும் அப்படித்தான் இருக்குமோ என்று நினைத்தால் அங்கதான் வெச்சாங்க டுவிஸ்ட். இவங்க இப்போது புதியதாக வெளியில் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காவியத் தலைவன் படத்தில் வரும் யாருமில்லா தனியரங்கில் பாட்டை காலர் டியூனாக வைத்திருக்கிறார்.

உங்களுக்கும் இந்தப் பாட்டுக்கும் சம்பந்தமே இல்லையேனு கேட்டதற்கு “ஏங்க அதுக்காக கழுத கனைக்கறதலாமா காலர் டியூனாக வெக்க முடியும்”னு நம்மையே கலாய்க்கிறார் பார்வதி. ஆனால் இதுக்கும் ஒரு காரணம் இருக்கிறது, என்று ஒரு பிளாஷ்பேக் ஓட்டுகிறார்.

“அன்றைக்கு செமெஸ்டர். என் பிரண்ட் தேர்வு ஹால் டிக்கெட்டை என் பையில் வைத்து விட்டுச் சென்றுவிட்டாள். அப்போது எனக்கு போன் செய்திருக்கிறாள் ‘அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச் சோறு கிங்குனு’ காலர் டியூன் வைத்திருந்தேன். பரிட்சை அன்னைக்கு ஏன் இந்தப் பாட்டைக் கேட்கணும் என்று தோணவே, போனை சைலெண்டில் போட்டிருந்தேன். அழைப்பு வந்தது தெரியவில்லை. அதற்குப் பிறகு வந்தவ சும்மா விடுவாளா, எனக்குக் காதுல ரத்தம் வர அளவுக்குச் சங்கு ஊதிட்டா. அன்றைக்கு முடிவு பண்ணிட்டேன் அய்யோ இனி இந்தமாதிரி பாடல்களை காலர் டியூனா வைக்கவே கூடாது என்று” இருந்தாலும் இவங்க ரொம்ப பாவம்!

இதுவும் ஜாலிதான்

“நான் காலர் டியூன் வைத்த கதையெல்லாம் கேட்டா தாங்க மாட்டிங்க”னு எச்சரிக்கை விடுகிறார் சித்தார்த். “நான் ‘ஐ’ படத்தில் வரும் மெர்சலாயிட்டேன் பாட்டைத் தான் தற்போது காலர் டியூனாக வைத்திருக்கிறேன்”. ஆனால் மற்றவர்களையும் மெர்சலாக்கும்படி காலர் டியூன் வைக்கும் ஆள்தான் இவர்.

“நான் மற்றவர்களைத் திட்ட வேண்டும் என்றால் உடனே அண்ணன் கவுண்டமணியின் காமெடிகளை காலர் டியூனாக வைத்து வேண்டுமென்றே அவர்களுக்கு மிஸ் கால் கொடுப்பேன். உடனே அவர்கள் எனக்கு கால் செய்வார்கள். அப்பொழுது தாறு மாறா டென்ஷனாகிவிடுவார்கள். இதுவும் ஒரு ஜாலி தான்” என்கிறார். ஆனால் சித்தார்த்துக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கிறானாம்.

“நண்பர்கள் பிறந்த நாள் என்றால் அதற்குத் தகுந்தாற் போன்ற பிறந்த நாள் பாடல்களை காலர் டியூனாக வைத்துப் புதுவிதமாக வாழ்த்து சொல்லுவேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் மெசேஜ் பேஸ்புக் என்று வாழ்த்து தெரிவிப்பதைவிட இது புதுவித வாழ்த்தாக இருக்கும்” என்று புதிது புதிதாக நமக்கும் யோசனைகள் கூறுகிறார்.

தப்பிக்க வைக்கும் காலர் டியூன்?

“நான் 5 வருடங்களாக அலைபாயுதே படத்தில் வரும் காதல் சடுகுடுகுடு பாடலைத் தான் காலர் டியூனாக வைத்திருக்கிறேன்” என்கிறார் விக்னேஷ்வரன். ஏன் அப்படி என்று கேட்டதற்கு “இப்போது வரைக்கும் எனக்கு நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று யார் அழைப்பு வந்தாலும் அவர்கள் பேசவந்த விஷயத்தைக் கூட முதலில் சொல்லாமல் உங்க காலர் டியூன் ரொம்ப நல்லா இருக்கு என்று தான் சொல்வார்கள்.

அதனால் என்னவோ தெரியவில்லை எனக்கு அந்தப் பாடலை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது கிடையாது” என்று மிகவும் அமைதியாகப் பேசுகிறார். “என்னை யாராவது திட்ட நினைத்து கால் செய்தாலும் அந்தப் பாடலைக் கேட்ட உடனே அவர்கள் கோபம் சற்றுக் குறைந்துவிடும்.இது எனக்கு ஒரு பிளஸ்” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

காலர் டியூன் வெறும் ஜாலி மட்டும் கிடையாது அதைப் பயன்படுத்துபவரின் குணங்களையும் மனோபாவத்தையும் பிரதிபலிக்கும் விஷயமாகவும் உள்ளது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x