Last Updated : 28 Nov, 2014 11:58 AM

 

Published : 28 Nov 2014 11:58 AM
Last Updated : 28 Nov 2014 11:58 AM

சாதிக்குமா இளம் படை?

வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் என்றாலே இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிலிதான். அதுவும் ஆஸ்திரேலியா என்றால் கேட்கவே வேண்டாம். கவுரமாகத் தோல்வியடைந்தால் போதும் என்ற மனநிலையில்தான் வீரர்களே விளையாடுவார்கள். ஆனால், 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த கபில்தேவ் தலைமையில் இளம் படைதான் எதிரணிகளைப் பந்தாடியது. அதேபோல் 2007-ம் ஆண்டு நடந்த முதல் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும் தோனி தலைமையிலான இளம் படைதான் நமக்குச் சொந்தமாக்கியது. இப்போது ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணியும் முழுக்க முழுக்க இளமை ததும்பும் சூப்பர் படைதான். ஆமாம், இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்களின் சராசரி வயது 26 மட்டுமே!

இளம் படை

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களிலேயே மிகவும் குறைந்த வயதுடைய வீரர் லோகேஷ் ராகுல். முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அவரது வயது 22. அணியில் அதிகபட்ச வயதுடைய வீரர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். முரளி விஜயும், விருத்திமான் சாகாவுக்கும் வயது 30 ஆகிறது. (தோனிக்கு 33 வயது ஆனாலும், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாததால் அவரைக் கணக்கில் கொள்ளவில்லை).

அன்றும் இன்றும்

1991-92, 1999-2000, 2003-04, 2007-08, 2011-12 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது அதில் அனுபவம் மிக்க வீரர்கள் அதிகம் இடம்பிடித்திருந்தார்கள். இந்தத் தொடர்களில் கபில்தேவ், அசாருதீன், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, கங்குலி, ராகுல் டிராவிட், லக் ஷ்மண், சேவாக், ஹர்பஜன் சிங் என சீனியர் வீரர்கள் அதிக அளவு அணியில் இருந்தார்கள். ஆனால், இப்போதுதான் முதல் முறையாகப் பெரிய அளவில் அனுபவமில்லாத, முழுவதும் இளம் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த அணியில் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் விளையாடிய வீரர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அஸ்வின், உமேஷ் யாதவ், விராட் கோலி, விருத்திமான்

சாகா, இஷாந்த் சர்மா ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் விளையாடி இருக்கிறார்கள். அதிலும் இஷாந்த் சர்மா மட்டுமே 2007-08, 2011 ஆகிய இரு தொடர்களில் விளையாடி இருக்கிறார்.

அனுபவமும் தோல்வியும்

தற்போதுள்ள இந்திய அணியில் 50-க்கும் மேற்பட்ட (தோனியைத் தவிர்த்து) டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரரும் இஷாந்த் சர்மா மட்டுமே. ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரூன், விருத்திமான் சாகா ஆகியோர் இதுவரை ஒற்றை இலக்கப் போட்டிகளிலேயே விளையாடியிருக்கிறார்கள். இப்படி இந்திய அணி அனுபவமற்ற வீரர்களைக் கொண்டுதான் ஆஸ்திரேலியாவில் களம் இறங்கப் போகிறது.

கடந்த 2011-12-ம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணியும் இளம் படையாகத்தான் காட்சி அளித்தது. அப்போது இந்திய அணி அனுபவ வீரர்களுடன் ஆஸ்திரேலியா சென்றது. ஆனால், 0-4 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மோசமாகத் தோல்வியைத் தழுவியது. அனுபவ வீரர்களாலேயே ஆஸ்திரேலிய பந்து வீச்சைச் சமாளிக்க முடியவில்லை.

இந்த ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்று விளையாடிய அதே அணிதான் இப்போது ஆஸ்திரேலியா செல்கிறது. சில வீரர்கள் அணியில் மாறியிருக்கிறார்கள், அவ்வளவுதான். அனுபவமில்லாத இந்த வீரர்கள் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே திறமையை வெளிப்படுத்தினார்கள். கடைசி மூன்று போட்டிகளில்தான் கோட்டைவிட்டார்கள். எனவே இளம் வீரர்கள் பொறுமையுடனும், பதற்றமின்றியும் விளையாடும்போது சாதிக்க முடியும்.

சவால்கள்

கடந்த ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. எனவே அதற்குப் பழிதீர்க்கும் விதமாக ஆஸ்திரேலியா நிச்சயம் விளையாடும். வேகப்பந்து வீச்சுக்கு உதவும் வகையில் பிட்சுகள் தயாரிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பந்துகள் அதிவேகமாக எழும்பும் பிட்சுகளில் அசுர வேகத்தில் பந்தை வீசும்போது முகத்தைக்கூடத் தாக்கலாம். சில தினங்களுக்கு முன்பு சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் பந்து தாக்கி பிலிப் ஹியூக்ஸ் உயிருக்குப் போராடிவருவது

இளம் வீரர்களுக்குக் கிலியை ஏற்படுத்தலாம். மிதவேக பவுன்சர்கள்கூட நம் வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். வாய் வீச்சில் ஈடுபட்டு வீரர்களின் கவனத்தைத் திசை திருப்புவதும் ஆஸ்திரேலிய வீரர்களுக்குக் கைவந்த கலை. அதையும் இளம் வீரர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

சாதிக்க முடியுமா?

இப்படி நிறைய சவால்கள் இந்த இளம் வீரர்களுக்குக் காத்திருக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே பந்துகளைச் சரியாகத் தேர்வு

செய்து நொறுக்கும்போது, அது எதிரணியின் கணிப்பைப் பொய்யாக்கும். அது எதிரணிக்கு மனரீதியாகப் பதற்றத்தையும் ஏற்படுத்தும். அதற்கேற்ப இளம் வீரர்கள் செயல்பட வேண்டும். இப்போதுள்ள இந்திய அணி, இந்தியத் துணைக் கண்டத்தில் சிறப்பாக விளையாடி, திறமையை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் வெற்றியைச் சாதிக்குமா இந்த இளம் படை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x