Last Updated : 07 Jul, 2017 11:47 AM

 

Published : 07 Jul 2017 11:47 AM
Last Updated : 07 Jul 2017 11:47 AM

விளையாட்டு செய்த மாயம்!

‘நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி என்றில்லை. டென்னிஸ், கால்பந்தாட்டம் என எந்தவொரு விளையாட்டும் உங்களின் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் எப்படி உதவும்’ என்பதை தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களிலிருந்து `வென் ஐ லுக்டு பேக் இட் வாஸ் 21 ஆல்ரடி’ என்னும் நூலை எழுதியிருக்கிறார் விளையாட்டு உளவியல் ஆலோசகரான கீர்த்தனா சுவாமிநாதன்.

சோம்பலிலிருந்து சுறுசுறுப்புக்கு

கீர்த்தனா அவருடைய வளர்இளம் பருவத்தில் எப்படி இருந்தார் என்பதை எழுதியுள்ளார். “நான் எப்படி இருந்தேன் தெரியுமா? யாரும் என்னை எதுவும் குற்றம் சொல்லக் கூடாது. அது அப்பா, அம்மாவாக இருந்தாலும் சரி. உடல் பருமன் பிரச்சினை, கோபம், வெறுப்பு, எப்போதும் தனிமை விரும்பியாக இருப்பது, என்னுடைய நெருங்கிய தோழியாக இருப்பவள் வேறு யாருடனும் நெருங்கிப் பழகுவதை பொறுத்துக் கொள்ளமுடியாத நிலை. இப்படி நிறையப் பிரச்சினைகள் எனக்கு இருந்தன. இத்தனைக்கும் நீச்சல், பாட்டு, நடனம் போன்ற பயிற்சிகளை நான் எடுத்துக்கொண்டாலும் எதிலும் என்னால் முழுமையாக ஈடுபட முடியாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் எதற்கெடுத்தாலும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவளாக நான் மாறிவிட்டேன்’ என்று எழுதியுள்ளார் கீர்த்தனா.

இதிலிருந்து அவர் விடுபட ஓட்டப் பயிற்சி எப்படி உதவியது? தன்னுடைய மனத் தடைகளைக் கடந்து தான் எப்படி வெளியே வந்தேன் என்பதையும் இந்த நூலில் விவரித்துள்ளார் அவர். நாம் பெரும்பாலும் வெளித் தோற்றத்தில் மயங்குபவராக இருக்கிறோம். எதைக் குறித்தும் மேலோட்டமான அறிவுடனேயே இருக்கிறோம். ஆனால், உண்மையை அறிவதற்கு இந்த மேலோட்டமான அறிவு போதாது. ஆழமான பார்வை வேண்டும் என்பதை கீர்த்தனா தன்னுடைய நூலில் வலியுறுத்துகிறார்.

கீர்த்தனா இளமைப் பருவத்தில் ரொம்பவும் கூச்சப்படுபவராக இருந்திருக்கிறார். இப்போது தன்னம்பிக்கையோடு பேசுபவராகவும் செயல்படுபவராகவும் தன் நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார். மனிதர்களின் இயல்பு என்ன என்பதையும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்வது வாழ்க்கையின் அடிப்படைத் தேவை எனும் கருத்தை நூல் அடிநாதமாக ஒலிக்கிறது.

விளையாட்டில் உளவியல்

இன்றைய இளம் பெற்றோர்களுக்கு நிறைய சவால்கள் உள்ளன. குழந்தைகள் வீதியில் இறங்கி விளையாடுவதே இல்லை. வீடியோ கேம் விளையாடுகிறார்கள். மொபைல் போனில் நேரத்தைச் செலவழிக்கிறார்கள். பெற்றோர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் தங்களின் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வையும் இந்த நூலின் மூலம் தந்துள்ளார் கீர்த்தனா.

“விளையாட்டு வீரர்களுக்கு உள்ளேயும் போட்டிகள் இருக்கும். பல்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கும். அதில் குறிப்பாக குழந்தைகளை அடுத்த குழந்தைகளோடு ஒப்பிடுவதும் ஒன்று. இதெல்லாம் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளுக்கு பெரும் பின்னடைவைத் தரும். நம் நாட்டில் உளவியல் சார்ந்த விஷயங்களில் நிபுணர்கள் குறைவு. அதிலும் விளையாட்டு உளவியல் தேவை அதிகம் இருக்கும் நம் நாட்டில் அது குறித்த படிப்புகளுக்கு பெரிய வெற்றிடமே இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த நிலை மாறும் என நம்புகிறேன்” என்கிறார் கீர்த்தனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x