Published : 19 Jul 2017 04:29 PM
Last Updated : 19 Jul 2017 04:29 PM
தனித்துவிடப்பட்ட ஓர் இளைஞன். கால் காயம் காரணமாக அவனால் நடக்க முடியவில்லை. இந்தச் சூழலில், கழுதைப்புலி கள் அவனைச் சூழ்ந்துகொள்கின்றன. ஆப்பிரிக்காவின் இரவுகளும் பகல்களும் வாழ்க்கையின் இருவேறு நிலைகளைப் போன்றவை. பகலிலோ வெப்பம் வாட்டியெடுக்கும்; இரவிலோ கடும் குளிர் முதுகெலும்பைச் சில்லிட வைக்கும். இந்தச் சூழலில்தான் அந்த இளைஞன் கழுதைப்புலி களிடம் சிக்கிக்கொள்கிறான்.
அவற்றை நெருங்கவிடாமலிருக்க, மரக்கட்டைகளைக் கொண்டு, நெருப்பைப் பற்றவைக்கிறான். அவனுக்கும் கழுதைப் புலிகளுக்கும் இடையே ‘நீயா, நானா?’ போட்டி உருவாகிறது. இதில், முதலில் விட்டுக்கொடுப்பவர்களுக்குக் கிடைக்கும் பரிசு, மனித உயிர். ஒரு நொடி அவன் கண்ணயர்ந்தாலும், தாக்குவதற்கு அவை காத்திருக்கின்றன.
உடலில் வலியுடனும் காய்ச்சலுடனும் இருக்கும் அந்த இளைஞன் தூங்காமல் இரவைக் கழிக்கிறான். பகலில் அவனது வீழ்ச்சியை எதிர்பார்த்து வல்லூறுகள் காத்திருக்கின்றன. அப்போது அந்த இளைஞன் ஒரு விமானத்தின் ஓசையைக் கேட்கிறான். ஆனால், அவனது உதவிக்குரல் அவர்களுக்குக் கேட்குமா?
மறுநாள் இரவு, இன்னொரு அழையா விருந்தாளியாக ஒரு ஓநாய் வருகிறது. கழுதைப்புலிகளைப் போலில்லாமல், மிகவும் தீர்க்கமாக அவனை நெருங்குகிறது. வேறு வழியில்லாமல், அந்த இளைஞன் அந்த ஓநாயைச் சுட்டு வீழ்த்துகிறான். இப்போது அவனது துப்பாக்கியில் இருப்பதோ, ஒரே ஒரு தோட்டாதான். காலையில் வழக்கம்போல, வல்லூறுகள் சூழ்ந்திருக்க, தூரத்தில் ஏதோ ஒரு ஓசை கேட்கிறது.
இப்போது அந்த இளைஞனுக்கு இருப்பது ஒரே ஒரு வாய்ப்புதான். தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை இயக்கி, இருக்கும் ஒரே ஒரு தோட்டாவைப் பயன்படுத்தி ஓசையெழுப்பி, உதவி கோருவது. ஆனால், இம்முறை(யும்) அவனுக்கு உதவி கிடைக்காவிட்டால், கழுதைப் புலிகளிடமிருந்தோ வல்லூறுகளிடமிருந்தோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த ஆயுதமும் அவனிடம் இல்லாமல் போகும். அந்த இளைஞன் என்ன செய்தான்?
ஆப்பிரிக்கப் பயணம்
இந்தக் கதை 1909-ம் ஆண்டு தொடங்குகிறது. படிப்பு, விளையாட்டு ஆகியவற்றில் முதன்மையானவனாக விளங்கும் 20 வயது இளைஞனான ஷங்கருக்கு, பயணம் செய்வது, சாகசங்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம். ஆனால், குடும்பச் சூழல் காரணமாக, அவன் ஒரு ஆலையில் கணக்கெழுதும் வேலையில் சேர்கிறான். ஆனால், ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஒரு குறிப்பிட்ட கனவு வருகிறது. அதில், ஒரு அந்நியனுடன் பெரும் மலையொன்றின் மீது பயணம் செய்வதாகவும் வனவிலங்குகள், யானைகளை எதிர்கொள்வதாகவும் காட்சிகள் தோன்றுகின்றன.
ஒருநாள், அவனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கடிதத்தைக் கொடுத்து, அதைப் படித்துக் காட்டச் சொல்கிறார். அது அவனுடைய மருமகனிடமிருந்து வந்த கடிதம். அவர் ஆப்பிரிக்காவிலிருந்து எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஷங்கர், அவருக்குத் தனியே ஒரு கடிதம் எழுதுகிறான். இரண்டு மாதம் கழித்து, அவனுக்குப் பதிலும் கிடைக்கிறது. ஆப்பிரிக்காவில் அவர் வேலை செய்யும் ரயில்பாதை அமைக்கும் நிறுவனத்திலேயே வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்ல, உடனடியாக ஆப்பிரிக்காவுக்குப் புறப்படுகிறான் ஷங்கர்.
உயிருக்குப் போராட்டம்
கிழக்கு ஆப்பிரிக்காவின் காட்டுப்பகுதியில் ரயில்பாதை அமைக்கும் பணியில் ஷங்கர் வேலைக்குச் சேர்கிறான். அங்கே, திருமால் என்ற தமிழருடன் நட்பு ஏற்படுகிறது. ஆப்பிரிக்காவின் இயற்கை அழகையும் வன விலங்குகளையும் ரசித்தவாறே பணியில் ஈடுபடுகிறான். ஒரு நாள், காணாமல் போன திருமாலை சிங்கம் அடித்திருப்பது தெரியவருகிறது. சிங்கத்தைத் தேடிச் செல்லும் ஷங்கரும் தாக்கப்பட்டு, குதிரையைப் பலிகொடுத்து, மயிரிழையில் உயிர் பிழைக்கிறான்.
பின்னர், அங்கிருந்து இடமாற்றம் கேட்க, 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு ரயில் நிலையத்துக்கு ஸ்டேஷன் மாஸ்டராக அவனை அனுப்பி வைக்கிறார்கள். ஓர் இரவில், அவனது அறைக்கு வெளியே சிங்கம் உறுமிக்கொண்டிருக்க, உள்ளே ஆப்பிரிக்க விஷப் பாம்பு அவனது படுக்கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படித் தனி ஆளாக அந்த ஸ்டேஷனில் ஷங்கரின் நாட்கள் கழிகின்றன.
சாகசத்தின் தொடக்கம்
ஒரு நாள், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு போர்த்துக்கீசியரைக் காப்பாற்றுகிறான் ஷங்கர். அவர் வேட்டைக்காரர் ஆல்வேரஸ். அவருக்கு உணவளித்து, உடல்நலம் தேற உதவுகிறான். ஆல்வேரஸ் 1888-ல் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்.
ஆல்வேரஸின் இளம் வயதில் ஆப்பிரிக்கக் காட்டில் வேட்டையாடும்போது, ஜிம் கார்ட்டர் என்ற ஆங்கிலேயரைச் சந்திக்கிறார். இருவரும் இணைந்து ஆல்வேரஸ் தற்செயலாகக் கண்டறிந்த வெள்ளிப் படுக்கையைத் தேடும்போது, ஆப்பிரிக்க பழங்குடியினரை எதிர்கொள்கின்றனர். அவர்களுடைய தலைவரின் மகள் உடல்நலம் இல்லாமல் இருக்க, இவர்கள் கொடுத்த மருந்து அவள் உயிரைக் காப்பாற்றுகிறது. நன்றிக்கடனாக, தலைவன் இவர்களுக்கு ஒரு வைரத்தை அளிக்கிறான். இதுபோன்ற வைரங்கள், அடர்ந்த காட்டின் மத்தியிலிருக்கும் மலையில் இருப்பதாகவும், அந்த வைரங்களை புன்யப் பாதுகாப்பதாகவும் எச்சரிக்கிறார்.
புன்யப்
புன்யப் என்பது என்ன என்றே தெரியாமல், ஆல்வேரஸும் கார்ட்டரும் அந்த மலையை நோக்கிச் செல்கிறார்கள். கடுமையான பயணம், திகிலூட்டும் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதி, விசித்திரமான விலங்குகள் என்று அவர்களது பயணம் கார்ட்டரின் மரணத்துடன் ஒரு நாள் முடிவுக்கு வருகிறது. பெரிய அளவில், மூன்று அகலமான பாதப் பிளவுகளைக் கொண்டதொரு விலங்கின் சுவடுகள் மட்டும் தெரிய, பயங்கரமாகத் தாக்குண்டு இறந்துகிடக்கிறார், கார்ட்டர்.
இதனால் தனித்து விடப்பட்ட ஆல்வேரஸ், பழங்குடியினரின் ஆலோசனைப்படி தனது தேடலைக் கைவிடுகிறார். பின்னர், இலக்கில்லாமல் அலைந்து திரிந்தவரைத்தான் ஷங்கர் காப்பாற்றி இருக்கிறான்.
ஒரு சாகசத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த ஷங்கருக்கு, இந்த வாய்ப்பு கிளர்ச்சியூட்டுகிறது. லீவு எடுத்துக்கொண்டு, ஆல்வேரஸுடன் அந்த மலையை நோக்கிப் புறப்படுகிறான். வானத்தைத் தொட்டுவிடும் அளவுக்கு உயரம் கொண்ட அந்த மலையைத் தேடி இருவரும் பயணம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு நாள் பயணமும் முந்தைய நாளைவிட மோசமாக அமைகிறது. ஒருவழியாக அந்த மலையைக் கண்டுபிடித்த உடன், இன்னொரு பிரச்சினை தலைதூக்குகிறது. அது புன்யப்.
கதாசிரியரின் வெற்றி
இப்படி விறுவிறுப்பாக செல்கிறது ‘மூன் மவுன்டன்’ என்ற இந்த கிராஃபிக் நாவல். 154 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் வெளிச்சம் நிறைந்த பக்கங்களை எண்ணிவிடலாம். ஆரம்பத்தில், சயான் முகர்ஜியின் ஓவியங்கள் ஈர்க்க மறுத்தாலும், கதையின் வேகமும் சாகசங்களும் நம்மைக் கவர்ந்து விடுகின்றன.
கதையில் வரும் புன்யப் என்ற அந்த விலங்கை, மனிதனின் ஆசையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கதை வேறொரு தளத்துக்குச் செல்கிறது. அந்த விலங்கை நமது தேடலோடு-ஆசைகளோடு உருவகப்படுத்தினால், கதையின் போக்கே முற்றிலும் மாறிவிடுகிறது. புன்யப் என்பதுதான் என்ன? இந்த கிராஃபிக் நாவலில் புன்யப்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து, முழுமையாகச் சொல்லாமல் விட்டதில்தான் கதாசிரியர் விபூதிபூஷண் பாந்தோபாத்யாய ஜெயிக்கிறார்.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு:TamilComicsUlagam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT