Last Updated : 19 Jul, 2017 04:27 PM

 

Published : 19 Jul 2017 04:27 PM
Last Updated : 19 Jul 2017 04:27 PM

யூடியூப் கலைஞர்களின் சென்னை சங்கமம்!

நாடக நடிகர்களையோ சினிமா நடிகர்களையோ ஓரிடத்தில் திரட்ட சங்கங்கள் இருக்கின்றன. ஆனால், டிஜிட்டல் வடிவின் நீட்சியாக ஆன்லைனில் புதிது புதிதாக உதயமாகும் யூடியூப் சேனல்வாசிகளை ஓரிடத்தில் திரட்டுவதென்பது மிகவும் கடினம். ஆனால், சமீபத்தில் தமிழில் யூடியூப் சேனலைச் சேர்ந்த கலைஞர்கள் சென்னையில் ஒன்றுகூடி பெரிய விழா ஒன்றை நடத்தி காட்டியிருக்கிறார்கள்.

யூடியூப் ரசிகர்களுக்கென ‘டியூப் ஃபெஸ்ட்’ முதன்முறையாகச் சென்னையில் நடைபெற்றது. ‘ஸ்மைல் சேட்டை’ என்ற யூடியூப் சேனல் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் யூடியூபில் இயங்கிக்கொண்டிருக்கும் 10 சேனல்களைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர். இதுவரை யூடியூப் மூலமே பார்த்துப் பழக்கப்பட்ட பல கலைஞர்களும் ஒரே மேடையில் அணிவகுத்தனர். ரசிகர்கள் மத்தியில் தங்கள் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தினர். ரசிகர்கள் ஆரவாரம் செய்தபடி அவர்களுடைய நடிப்புத் திறனைப் பாராட்டினர்.

திடீரென ‘யூடியூப் ஃபெஸ்ட்’ நடத்தியதற்கு என்ன காரணம் என விசாரித்தோம். “பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் யூடியூப் ரசிகர்களுக்காக ‘ஃபேன் ஃபெஸ்ட்’ நடத்துவது வாடிக்கை. சென்னையில் நடத்தக் கோரி பலமுறை முறையிட்டும் யூடியூப் மறுத்துவிட்டது. பிறகுதான் நாமே ஏன் ‘யூடியூப் ஃபெஸ்ட்’க்கு ஏற்பாடு செய்யக் கூடாது என்று யோசனை வந்தது. மேலும், சேனலுக்கு அப்பால் நேரடியாக ரசிகர்கள் முன்னால் நடிப்பது ஒரு தனி அனுபவம். அது எல்லா சேனல்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று இந்த ‘யூடியூப் ஃபெஸ்ட்’டுக்கு ஏற்பாடுசெய்தோம்” என்று கூறுகிறார் ஆர் .ஜே. விக்னேஷ்.

you tube 2 மேடையில் நடித்த கலைஞர்கள்

‘யூடியூப் ஃபெஸ்ட்’ விழாவைக் கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இவர்கள் எல்லோருமே இளைஞர்கள்தான். இளைஞர்களின் ஆதரவைக் கண்டு யூடியூப் சேனல் கலைஞர்கள் பூரிப்பில் இருந்தனர். “விழாவுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை . இளைஞர்களே அதிகமாக வந்திருந்தார்கள். இந்த மேடையை 10 சேனல்களும் ரொம்ப நன்றாகவே பயன்படுத்திகொண்டார்கள்” என்று மகிழ்ச்சியோடு கூறினார் ஐபிசி சேனல் தொகுப்பாளர் விக்கி.

விழாவில் பங்கேற்ற யூடியூப் கலைஞர்கள் பலரும், தங்களுடைய வைரலான நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர். அதிலிருந்து சில பகுதிகளை நடித்தும் காட்டினர்.

“இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் சாதிக்கிறார்கள். கற்பனைத் திறனைக்கொண்டு யூடியூபில் சாதித்தால் அடுத்த கட்டம் சினிமா என்று எண்ணுவது தவறு என்று எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். யூடியூபில் நான்கு வீடியோ போட்டு வைரல் ஆகிவிட்டால் ஹீரோ ஆகிவிடுவோம் என நம்புவது முட்டாள்தனம். டிஜிட்டல் மேடைக்கும் சினிமாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன ” என்று பல யூடியூப் கலைஞர்களும் கோரஸாகக் கருத்துகளை உதிர்க்க, விழா இனிதே முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x