Last Updated : 28 Nov, 2014 12:35 PM

 

Published : 28 Nov 2014 12:35 PM
Last Updated : 28 Nov 2014 12:35 PM

‘சாக்லேட்’ பூங்கொத்து கொடுத்து வாழ்த்தலாம்!

‘வாட்ஸ்அப்’ காலத்தில் பூக்களுக்கும், வாழ்த்தட்டைகளுக்கும் விடை கொடுத்துவிட்டார்கள் இளைஞர்கள். ரொம்ப ‘ஸ்பெஷலான’ தோழனுக்கும், தோழிக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மதுரையில், கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துவது குட்டிக்குட்டி சாக்லேட் பொக்கேக்களையே!

இளசுகளின் கொண்டாட்ட அடையாளம் ‘சாக்லேட்’. இதில் பொக்கே செய்து கொடுப்பவரும் இளமைத்துள்ளல் இல்லாதவராக எப்படி இருக்க முடியும்?

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த சப்னம் இந்த ஆண்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார். ஓராண்டுக்குள் ஆயிரக்கணக்கில் சாக்லேட் பொக்கேக்களை விற்றிருக்கிறார். கொஞ்சும் தமிழில் இனிக்க இனிக்கப் பேசுகிறார், சப்னம்.

“எங்களோட பூர்வீகம் குஜராத் மாநிலம் சூரத். அப்பாவோட தொழில் காரணமாக, மதுரையில் குடியேறிட்டோம். நான் இங்கேதான் காலேஜ் படிச்சேன். குஜராத்தில் இருக்கிற என்னோட அத்தை தஸ்லின் தௌபீக் 20 வகை சாக்லேட்களை அற்புதமா செய்வாங்க. அவங்ககிட்ட விளையாட்டாக சாக்லேட் செய்யக் கத்துக்கிட்டேன்” என்கிறார் அவர்.

குஜராத்தில் மெகந்தி வைப்பது பெண்களின் வாழ்க்கையில் அன்றாட நிகழ்வு, திருமண வீடுகளில் மெகந்தி வைக்கும் பங்ஷனே தனியாக நடக்கும் எனவே, அவரது அம்மாவுக்கு ஏகப்பட்ட மெகந்தி டிசைன்ஸ் தெரியும் என்று சொல்கிறார் சப்னம். மதுரை பெண்களுக்கு மெகந்தி வைப்பதில் ரொம்ப அடிப்படையான ஐடியாக்கள் மட்டுமே இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவருடைய அம்மா, மெகந்தி வைப்பதைத் தொழிலாகச் செய்ய ஆரம்பித்துள்ளார். அதனால் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சப்னத்துக்குக் கிடைத்துள்ளது.

விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பூக்களாலான பொக்கேக்கள் கொடுப்பதையும், சில நிமிடங்களுக்குப் பிறகு அவை வீணாகப் போவதையும் பார்த்த சப்னத்துக்கு சாக்லேட் பொக்கே செய்யும் ஐடியா உதித்துள்ளது. பூவைப் போல ‘யூஸ் அன்ட் த்ரோ’வாக அல்லாமல், 3 மாதம் வரையில் சாக்லேட் பூங்கொத்தைப் பத்திரப்படுத்திச் சாப்பிட முடியும் என்று குதூகலத்துடன் சொல்கிறார் சப்னம். இவ்வளவு அழகான பொக்கேயைப் பிரிப்பதா என்று கலங்குபவர்கள், ஷோகேஸில் அப்படியே வைத்துக் கொள்ளலாம். அறை வெப்பநிலையில் இந்த சாக்லேட் உருகாது என்பதால், அழகு நிலைத்திருக்கும் என்பதற்கு கியாரண்டி தருகிறார் அவர்.

சாக்லேட் பொக்கே ஐடியா கமர்ஷியலாக சக்ஸஸ் ஆனதும், திருமணம், பிறந்த நாள், திருமண நாள், பிரண்ட்ஸ் பார்ட்டி, ஆபீஸ் மீட்டிங் என்று தீமுக்கு ஏற்றபடி பொக்கே செய்ய ஆரம்பித்துள்ளார். அதேபோல நிச்சயதார்த்த மோதிரங்களை வைக்கும் தட்டு, தாம்பூலத் தட்டு, ஆரத்தித் தட்டு போன்றவற்றையும் சாக்லேட்டிலேயே செய்துள்ளார். கல்யாணத்தில் மணமகள் என்ன கலர் புடவை கட்டுவார், பர்த் டே பேபிக்கு என்ன பொம்மை பிடிக்கும் என்பது போன்ற தகவல்களை அறிந்துகொண்டு அதற்கேற்ற வடிவத்தில் பொக்கே செய்வதால், சம்பந்தப்பட்டவர்களை ஆச்சரியப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் முடிகிறது என்கிறார் சப்னம்.

“விழாவுக்கு வந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், தாம்பூலப் பைக்குப் பதில் சிறு மூங்கில் கூடை நிறைய சாக்லேட்கள் இருப்பது போன்ற குட்டி குட்டி பொக்கேக்களையும் செய்துவருகிறேன். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்தாலும், இளைஞர்களையும், குழந்தைகளையும் கவர்கிற சிறு சிறு பொக்கேக்கள் செய்வதில் என் கற்பனையையும், கலைத்திறனையும் ரொம்பவே பயன்படுத்துவேன். மது பாட்டில் வடிவில்கூட சிலர் பொக்கே வாங்கியிருக்கிறார்கள். குழந்தைகளையும், இளைஞர்களையும் திருப்திப்படுத்துவது கஷ்டம்தான் என்றாலும், கவர்ந்துவிட்டால் நிரந்தர வாடிக்கையாளர்களாகி விடுவார்கள்” என்று நம்பிக்கை தொனிக்கக் கூறுகிறார் சப்னம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x