Published : 05 Apr 2014 12:00 PM
Last Updated : 05 Apr 2014 12:00 PM
டிவி பார்க்கும்போது கூட்டுப் பொரியல் போல டிவி ரிமோட்டை வைத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இல்லையென்றால் கணினியைப் பார்த்துக்கொண்டே, போனில் பேசிக்கொண்டே, படித்துக்கொண்டே சாப்பிடுவோம். சாப்பிடும் நேரத்தில் வேறு சில வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று பரபரப்புடன் சாப்பிடுவோம்.
உணவின் சுவையை உணராது அவசர அவசரமாக மென்று விழுங்கிவிடுவோம். என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். சாப்பிடுவதற்கும் சில இலக்கணங்கள் இருக்கின்றன. உணவை முதலில் மனத்தால் நுகர்ந்து ஒவ்வொரு கவளத்தையும் அனுபவித்துச் சாப்பிட வேண்டும்.
நிதானமாக மென்று சாப்பிடும்போது உணவு உமிழ்நீரில் கலந்து எளிதாகச் செரிமானம் ஆகும். இல்லாவிட்டால் சாப்பிடும்போதே தாகம் ஏற்படும். செரிமானம் ஆக நீணட நேரம் பிடிக்கும். அதனால் பசியின்மை ஏற்படும்.சாப்பிடுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தின்பண்டம், பானங்கள் எதுவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. தண்ணீர்கூடத் தவிர்க்கப்பட வேண்டும்.
உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்குப் பழங்கள், நொறுக்குத் தின்பண்டம், பானங்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. தண்ணீரும் குடிக்கக் கூடாது. உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும் இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட இட்லி போன்ற மென்மையான உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது.
காலையில் சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்கள் அதற்குச் சேர்த்து மதியம் சாப்பிடுவார்கள். அது உடலுக்கு நல்லதல்ல. காலை உணவைத் தவிர்ப்பதால் பலவிதமான வயிற்றுப் பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது. சாப்பிடும் இடைவேளையில் தண்ணீர் குடிக்கக் கூடாது எனச் சொல்வார்கள். ஆனால் சாப்பிடும்போது அளவாகத் தண்ணீர் குடிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT