Published : 07 Apr 2017 09:41 AM
Last Updated : 07 Apr 2017 09:41 AM

புறக்கணிக்கப்படும் கீதம்!

சமூகம் பேச மறுத்துப் புறக்கணிக்கிற விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார் மாலினி ஜீவரத்தினம். தன்பால் ஈர்ப்பு கொண்ட பெண்களுக்காக இவர் உருவாக்கியிருக்கும் கீதம், பிடிபடாத மர்மங்களைத் திறக்கும் விழிப்புணர்வுச் சாவி. தான் இயக்கிய ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ ஆவணப் படத்தின் சில காட்சிகளைத் தொகுத்து, ‘லெஸ்பியன் ஆந்தம்’ (Lesbian Anthem) என்ற இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறார் மாலினி.

சாதி, மதம், மொழி, இனம், வர்க்கம் என்று பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்திருக்கும் இந்தச் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலே கரைசேர்வது கடினம். இப்படியொரு நிலையில் ‘ஒழுங்கீனம்’ என்று சமூகத்தால் முத்திரை குத்தப்பட்ட, தன்பால் ஈர்ப்பில் விளையும் காதல்களுக்கு ஆயுள் இல்லை. பெண்ணான தனக்கு ஏன் இன்னொரு பெண் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது என்ற புரிந்துணர்வு இல்லாமலும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சியும் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டவர்கள் ஏராளம். சாதி ஆணவக் கொலைகளுக்கு நிகரானவை தன்பால் ஈர்ப்பாளர்களின் தற்கொலைகள்.

‘தகாத நட்பால் தோழிகள் தற்கொலை’ என்ற தலைப்பிட்டு வரும் செய்திகளைப் பத்தோடு பதினொன்றாக நாம் கடந்து சென்றுவிடுவோம். 377-வது சட்டப் பிரிவில் திருத்தம் வேண்டி தன்பால் உறவாளர்கள் போராட்டம் நடத்துவதற்கும் நமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் சிறுபான்மையினர் என்றாலும் தன்பால் உறவாளர்களும் மனிதர்கள்தானே. மற்றவர்களுக்கு இருக்கிற உரிமையும் அங்கீகாரமும் இவர்களுக்கு ஏன் மறுக்கப்படுகின்றன? இப்படியான கேள்விகளுக்கு விடை காணும் நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறார் மாலினி. உலகம் முழுவதும் உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்படும் மார்ச் மாதத்தில் தன்பால் உறவில் நாட்டம் கொண்ட பெண்களுக்கான கீதத்தை வெளியிட அவர் திட்டமிட்டிருந்தார்.

“அவர்களும் பெண்கள்தான், அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்று அங்கீகரிக்கும் வகையில் மார்ச் மாதம் ‘லெஸ்பியன் ஆந்தம்’ வெளியிட நினைத்திருந்தேன். ஆனால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது” என்று சொல்லும் மாலினி, “தன்பால் உறவு என்பது இந்தச் சமூகம் சித்தரித்து வைத்திருப்பதைப் போல அநாகரிகமானது அல்ல. எல்லாக் காதல்களையும் போல இதுவும் இயல்பானதே” என்கிறார்.

மாற்றத்துக்கு வித்திட்ட சந்திப்பு

கல்லூரி நாட்களில் தன்னுடன் படித்த ஒரு மாணவனின் வாழ்க்கைதான் தன்னைத் தன்பால் உறவாளர்கள் பற்றி விரிவான ஆய்வு செய்யத் தூண்டியதாகச் சொல்கிறார் மாலினி.

“நான் சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக் கலைகள் பிரிவில் படித்தேன். எங்கள் வகுப்பில் 45 ஆண்கள், நான் மட்டுமே பெண். எங்களோடு படித்த புனேவைச் சேர்ந்த மாணவன், தன்பால் ஈர்ப்பு கொண்டவன் என்பதால் பலரும் அவனை ஒதுக்கிவைத்திருந்தனர். நான் மட்டும்தான் அவனுடன் பேசுவேன். அவனிடம் பேசப் பேச தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் கோர முகம் எனக்குத் தெரியவந்தது. சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது” என்று சொல்லும் மாலினி, தான் இயக்கிய ஆவணப் படத்துக்காக, தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களில் பலரைச் சந்தித்திருக்கிறார். அவர்களை அடையாளம் காண்பதே பெரும் சிக்கல் என்கிற நிலையில் அவர்களுடைய அந்தரங்கம் குறித்துப் பேசி, விஷயங்களை வாங்கியது சவால் நிறைந்ததாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

“தன்பால் ஈர்ப்பு என்பது மேல்தட்டு மக்களிடையேயும் குறிப்பிட்ட சில துறைகளைச் சார்ந்தவர்களிடம் மட்டுமே காணப்படும் என்ற கற்பிதம் மக்கள் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. பழங்காலத்தில் இருந்தே தன் பால் உறவு புழக்கத்தில் இருந்ததைச் செவி வழிக் கதைகளும் கோயில் சிற்பங்களும் உணர்த்துகின்றன. குறிப்பாக எல்லோரா, கஜுராஹோ சிற்பங்களில் சில தன்பால் உறவைச் சொல்கின்றன” என்று குறிப்பிடும் மாலினி, தன்பால் ஈர்ப்பு என்பது நோயல்ல என்று சொல்கிறார்.

“தங்கள் மகளிடம் ஏற்படுகிற மாற்றத்தைப் பெரும்பாலான பெற்றோர் அங்கீகரிப்பதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை. சில பெற்றோர், மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால் இது சரியாகிவிடும் என்று நம்புகிறார்கள். காதல் எப்படி நோய் இல்லையோ அதுபோலத்தான் தன்பால் ஈர்ப்பும் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்” என்கிறார்.

தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களைத் தவறானவர்களாகவும் சமூக விரோதிகள் போலவும் ஊடகங்கள் சித்தரித்து வருவதையும் இவர் கண்டிக்கிறார்.

“ஊடகத் துறையினர் உட்பட அனைவருக்கும் பொறுப்பு வேண்டும். தாங்கள் செய்வது சட்டத்துக்குப் புறம்பானதோ என்ற குற்ற உணர்விலேயே பலர் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். அதனால் சட்டத் திருத்தமும் வேண்டும். தன்பால் ஈர்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்போதுதான் அவர்களுக்கான உரிமைகள் மீட்கப்படும்” என்று சொல்கிறார் மாலினி.

கவிஞர் குட்டி ரேவதியின் வரிகளில் தன்பால் ஈர்ப்பின் மற்றொரு பரிமாணம் ஒளிர்கிறது.

“நிலைக் கண்ணாடி போல என்னை முழுதாகக் காட்டி

அதை அழகாக்கிடும் உயிர் நீதான்”

என்ற வரிகள் தன்னைப் பிரதிபலிக்கும் மற்றொரு உயிர் மீதான பெண்ணின் நேசத்தைச் சொல்கின்றன. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் அமைப்பு, இந்தப் பாடலைத் தயாரித்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். தனி நபர்களின் ஆரோக்கியமான முயற்சிகளுக்கு மேடை அமைத்துத் தரும் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் doopaadoo வலைத்தளத்தில் இந்தப் பாடலைக் கேட்கலாம்.

“இது தொடராத உறவுன்னு ஊரு சொல்லிப் போகும்

உன்னைத் தொடர்ந்தேதான் வருவேனே

கடல் தாண்டி வாடி

என் உடல் தீண்டிப் போடி”

-பாடல் முடிந்த பிறகும் நம் மன அரங்கில் அதிர்கின்றன இந்த வரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x