Published : 22 Sep 2013 06:54 PM
Last Updated : 22 Sep 2013 06:54 PM
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் இலவசமாக கஞ்சியும், மதிய உணவும் தரும் சேவையைக் கடந்த 8 ஆண்டுகளாக செய்துவருகிறது, வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாதனை சங்கம்.
ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மக்களும் வருகின்றனர். நீண்டதூரம் பயணம்செய்து மருத்துவத்துக்காக வரும் நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் சிக்கனம் கருதி தங்கள் உணவுத் தேவையைத்தான் குறைத்துக்கொள்வார்கள்.
அவர்களுக்கு இலவசமாக உணவு அளித்துவரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாதனை சங்க நிறுவனரான கணேசன் நம்மிடம் கூறியதாவது:
“கடந்த 8 ஆண்டுகளாக இப்பணியைச் செய்கிறோம். காலையில் 400 பேர்களுக்கு அரிசி கஞ்சியும் மதியம் 60 கிலோ அரிசியில் கலவை சாதமும் போடுகிறோம். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பசியாறுகின்றனர். எங்களின் இந்தப் பணியைப் பார்த்து சில நல்ல உள்ளங்கள் தாங்களாக முன்வந்து எங்களுக்கு உதவுகிறார்கள். பசித்திருப்பவர்களுக்கு உதவுவதை எங்களின் அமைப்பு பெரும் மனிதநேயச் செயலாகக் கருதுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT