Published : 31 Mar 2017 10:46 AM
Last Updated : 31 Mar 2017 10:46 AM

காதல் வழிச் சாலை 28: காதலை மறுப்பது எப்படி?

பெண்கள் காதலை எப்படி மறுக்கிறார்கள்?

“உங்களை அப்படி நான் நினைக்கவேயில்லையே... அப்படி ஒரு எண்ணம் என்னால் உங்களிடத்தில் உண்டாகியிருந்தால் ஸாரி. என்னை மன்னிக்கவும்”.

“உங்களை என் அண்ணனாகத்தான் நினைத்தேன். உங்களுக்கு அந்த எண்ணம் எப்படி வந்தது?”.

“இப்போது அதைப் பற்றியெல்லாம் யோசிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. படிப்பு, பிறகு வேலை என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது”.

“மன்னிக்கவும். நாங்கள் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் பெற்றோர் இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்”.

இப்படிப் பல விதங்களிலும் காதலை நிராகரிக்கலாம். சரியான சந்தர்ப்பம் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லியிருப்பீர்கள். ”ஸாரி. என் போன்ல சார்ஜ் சுத்தமா இல்லே. அப்புறம் கூப்பிடறேன்” என்று பதில் வரும். அப்புறம் என்பது இல்லாமலே போய்விடும்.

“இன்னொரு முக்கியமான கால் வந்துட்டிருக்கு.. அநேகமா வெளியூர் போன அப்பாவா இருக்கும்… அப்புறம் லைனுக்கு வரேன்” என்ற ரீதியிலான மறுதலிப்புகள் இன்னும் உஷாரானவை.

கொஞ்ச நாள் பழகித் தொலைத்து விட்டோம். அவனோட தயவும் கொஞ்சம் நமக்குத் தேவை. ஒரேயடியாகத் துண்டித்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் இருந்தால் இப்படி வலிக்காமல் துண்டிக்கலாம். அந்தப் புத்திசாலித்தனமான அணுகுமுறைகளை நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

காதலை மறுப்பதிலும் இங்கிதம்

ஏன் நிராகரிக்கிறார்கள் பெண்கள்? சில பத்திகளில் இதற்கு விளக்கம் சொல்லிவிட முடியாது. ஆணின் உடல் மொழி, காதலைத் தெரிவித்த விதம், காதலைக் கட்டாயப்படுத்தும் விதமாக அணுகுவது, கெட்ட பழக்கங்களுடன் ஊர் சுற்றுவது, குறிக்கோள் இல்லாமல் திரிவது என்றிருப்பவர்களைப் பிடிக்காது என்பது மாத்திரமில்ல; ரொம்ப நல்ல பையனாகவும் கடும் நியாயஸ்தனாகவும் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் இளமைக்கே உரிய துள்ளலும் துடிப்பும் குறைவாக இருந்தாலும் பல பெண்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆச்சரியமாக இருந்தாலும் இது உண்மைதான்.

கெட்ட பையன்கள் பெண்களிடம் வாங்கும் மார்க்கை விட நல்ல பையன் என்றழைக்கப்படும் பையன்கள் வாங்கும் மதிப்பெண்கள் குறைவுதான் என்றுகூடச் சில ஆய்வுகளில் நிரூபித்திருக்கிறார்கள். காதலிப்பது என்று வரும்போது கொஞ்சம் ‘ரிஸ்க்’ எடுக்கக்கூடிய, அழகான முரட்டுத்தனத்துடன் கூடிய, சொல்பேச்சு கேளா இளைஞர்களுக்குப் பெண்கள் கொஞ்சம் முன்னுரிமை கொடுக்கிறார்களாம். உளவியல் ரீதியாக நாம் காணும் எத்தனையோ முரண்களில் இதுவும் ஒன்று.

எப்படியிருந்தாலும் காதலை மறுப்பதிலும் ஒரு இங்கிதம் இருக்கிறது. மிகவும் கொச்சையான வார்த்தைகளில் திட்டி, சுய மரியாதையைக் குலைக்கும் வசனங்களை வீசி அவமானப்படுத்தித்தான் காதலை மறுக்க வேண்டும் என்பதில்லை. ‘நோ’ என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தாமல் மறுப்பது என்பது ஒரு கலை. இல்லை என்பதையே சொல்லாமல் இல்லை என்பதைப் புரிய வைப்பது நாகரிகமிக்க ஒரு செயல்.

சில மளிகைக் கடைகளுக்குச் செல்லும்போது கவனித்துப் பாருங்கள். “அண்ணாச்சி... சீரக சம்பா அரிசி இருக்கா?” என்று கேட்பீர்கள். அது இல்லாதபட்சத்தில் “இப்பதான் புது ஸ்டாக் பொன்னி அரிசி வந்திருக்கு வாங்கிக்கங்களேன்...” என்று எதையாவது சொல்லி அண்ணாச்சி சமாளிப்பாரே தவிர நாம் கேட்ட பொருள் இல்லை என்று மட்டும் சொல்லவே மாட்டார். எதிர்மறையான அந்த வார்த்தையை அடிக்கடி வியாபாரத்தில் உபயோகிப்பது எதிர்மறையான பலன்களைத் தந்துவிடும் என்ற எச்சரிக்கையே இதன் காரணம்.

வாழ்க்கையும் லாப நஷ்டங்கள் நிறைந்த ஒரு வியாபாரம்தானே? மறுப்பதிலும் ஒரு மென்மை இருத்தல் நலம். அதிலும் சில காலம் பழகி ஒருவரின் குணாதிசயங்கள் புரிந்திருக்கும்பட்சத்தில் மிக நாகரிகமாக மறுக்கலாம். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் உண்மையான காரணங்களை உண்மையாகவே சொன்னாலே போதுமானது. காயமும் குறைவு. உணர்வு ரீதியாக பலத்த சேதாரம் தவிர்க்கப்படும். எதிராளியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில் அவருக்கு உண்மையையும் புரிய வைத்தது போலிருக்கும்.

கேள்விகளிலேயே கொக்கி போடுங்கள்

“நீங்கள் சரியானவர்தான். எனக்கு உங்களின் இந்தக் குணாதிசயங்கள் சரிவராது. பல விஷயங்கள் நமக்குப் பொருந்தியிருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு இவை மட்டுமே போறாது. என் கருத்து என்னவென்றால்…” என்று இப்படி மென் மையாகவும் மறுப்பைத் தெரிவிக்கலாமே. உங்கள் மனதில் அப்படி எவ்வாறு நினைத்தீர்கள் என்று கேட்டு அவர் சொல்லும் பதிலிலேயே அவரை மடக்க வேண்டும்.

நம்மால் அவருக்குள் ஏற்பட்ட சலனங்களுக்கு உங்களுக்குத் தோன்றும் விளக்கத்தை அவருக்கு அளிக்க வேண்டும். “சரி... காதலிப்பதாகச் சொல்கிறீர்கள். அடுத்து என்ன பார்க், பீச் என்று சுற்றலாம். அதற்குப் பிறகு கல்யாணம் செய்யும் எண்னம் இருக்கிறதா? ஓகே… அப்படியானால் இன்னின்ன விஷயங்களுக்கு உங்கள் பதில் என்ன?” என்று கொக்கி போட வேண்டும்.

குறிக்கோளில்லாத, பிடிமானமற்ற பல விடலைக் காதல்களுக்கு இது போன்ற சில கேள்விகளே அவர்களுக்கு உண்மையைப் புரியவைத்துவிடும். தாமாகவே விலகி விடுவார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் காதலை ஏற்றுக்கொள்வதில் மட்டும் குழப்பக் கூடாது. அது பாவ காரியம் மாத்திரமல்ல அபாயகரமானதும்கூட.

பலவீனத்தைக் காதலுக்குப் பயன்படுத்தாதீர்

“காதலைச் சொன்னேன். மறுத்து விட்டாள். நானும் விலக முயற்சிக்கிறேன். ஆனால் இன்னமும் அவள் என்னைப் பார்க்கும் பார்வையில் இருந்து செய்யும் காரியங்கள் வரை என்னைத் தேடுவது போலவே இருக்கிறது. என் நண்பர்களும் அவள் என்னை ‘லவ்’ பண்ணுவதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால் அவள் உறுதியாக மறுத்துவிட்டாள். பயங்கரக் குழப்பமாக இருக்கிறது..” என்று எழுதுகிறார் ஒரு கல்லூரி மாணவர்.

அப்பெண் பெயரளவிற்கு மறுத்தாலும் தன் மீது இன்னமும் அவருக்குக் காதல் இருப்பதாக இம்மாணவர் நம்புகிறார். இதற்குச் சம்பந்தப்பட்ட பெண்தான் விளக்கமளிக்க முடியும். ஆனால் இது தவறு. அதேபோல ‘இரண்டாண்டுகள் நல்ல நேசத்தில் இருந்துவிட்டு இப்போது அம்மா ஒப்புக்க மாட்டார். எனவே பிரிந்து விடுவோம் என்கிறார் என் ஆண் நண்பர்’ என்று எழுதியிருக்கிறார் ஒரு பெண். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. நல்ல வேலையில் இருக்கிறார். உடன் பணி புரியும் நபருடன் காதலில் இருந்திருக்கிறார்.

‘பல நேசம் சில வேஷம்’ என்று காலம் கழிந்த பிறகு இப்போது அவரது காதலர் தன் அம்மா மீது காரணம் சொல்லித் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுக்கிறார். இப்பெண்ணோ கடும் மனச்சோர்வுக்குப் போய்விட்டார். காதலிக்கும்போது அம்மாவைக் கேட்க வேண்டியதில்லை; கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் கேட்க வேண்டும் என்பதெல்லாம் என்ன நியாயம் என்று தெரியவில்லை.

இன்னொரு பெண்ணின் புலம்பல் வேறு மாதிரியாக இருக்கிறது. பிடிக்காமலேயே தனக்குக் கல்யாணம் நடந்தது என்றும் எதுவும் சரிவராததால் மூன்றே மாதங்களில் கணவரைப் பிரிந்துவிட்டதாகவும் சொன்ன அவர் மேலும் எழுதுகிறார்.

“என் மனதில் இருந்த பிம்பத்துக்குப் பொருந்தி வந்த ஒருவரை என் விவாகரத்துக்குப் பின் சந்தித்தேன். என் மீது அவரும் அப்படி ஒரு அன்பைப் பொழிந்தார். காலையில் காதலும் இரவில் காமரசம் சொட்டும் பேச்சுமாக சில காலம் கழிந்தது. என்னை, என் மேனியைப் பார்க்க வேண்டும். இப்போது உடனே உன் போட்டோ வேண்டும் என்று கேட்பார். அதுவும் ஆடை குறைவான என்னைப் பார்ப்பதில் அவருக்கு அலாதி விருப்பம் என்பதால் நானே அப்படியான ஒளிப்படங்களை அனுப்புவேன். ஆனால் இப்போது உன்னைத் திருமணம் செய்துகொள்ள வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. நாம் சேர முடியாது, என்னை மறந்துவிடு என்று அவரும் அழுகிறார். என்னையும் அழ வைக்கிறார். மிக எச்சரிக்கையாக, இந்த முறை வாழ்க்கையில் வழுக்கக் கூடாது என்று இருந்தும் இப்படி ஒரு உணர்வுப் பிரளயத்தில் மாட்டிக்கொண்டுவிட்டேன் நான்… என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை”. இப்படி எழுத்தில் விம்முகிறார் அந்தப் பெண்.

திருமணமாகாத ஒரு இளைஞனை நம்பிக் காதலித்தது அவர் தவறா? மணமுறிவு ஏற்பட்ட ஒரு பெண்ணின் மனச் சூழலைத் தவறாகக் கையாண்டு காமத் தூண்டுதல்களில் ஈடுபட்டுக் கடைசியில் கைகழுவி விடும் இளைஞனின் செயல் நியாயமானதா? ஒப்புக்கொள்ளக் கூடியதா? ஒருவரின் பலவீனத்தைப் பயன்படுத்திக் காதல் என்ற போலி வளையத்துக்குள் அவர்களைக் கொண்டுவந்து நேரத்தைக் கடத்துவதற்காகப் பழகும் இளைஞர்கள் ஒரு பாவத்தைச் செய்வதாக உணர்ந்து தம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

ஆக, காதல் என்பதைத் தாண்டி நாமிரு வரும் மனிதர்களே என்ற சிந்தனையை இழக்காத நாகரிகம், காதலை மறுப்பதில் இருக்க வேண்டும். அந்த மனித நேயம் காக்கப் படும்போது வன்முறைக்கு அங்கே ஏது இடம்?



எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x