Published : 25 Nov 2016 11:59 AM
Last Updated : 25 Nov 2016 11:59 AM

காதல் வழிச் சாலை 10: பெண்ணின் மனதில் என்ன இருக்கு?

“நான் மேனிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர். உடன் பணிபுரியும் டீச்சரைக் காதலித்தேன். மறுத்துவிட்டார். மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். சிறு வயதில் நிறையக் கஷ்டப்பட்டுவிட்டேன். வறுமை மிகுந்த சூழலில் அப்பாவின் குடிப் பழக்கம் என்னை மிகவும் பாதித்தது. அன்புக்கு ஏங்கியதாலோ என்னவோ யார் என்னிடம் கொஞ்சம் நெருங்கினாலும் மனம் அவர் பக்கம் சாய்ந்துவிடுகிறது. இது எனக்கு முதல் காதலுமல்ல. ஏற்கெனவே ஒரு பெண்ணை நேசித்திருக்கிறேன்.

அதுவும் ஒருதலையாகவே போய்விட்டது. பெண்களுக்கு யாரைப் பிடிக்கும், எதற்காகப் பிடிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு தோல்வியிலிருந்து பாடம் கற்காமல் மீண்டும் அதே தப்பைச் செய்கிறேனே என்று வெட்கமாக இருக்கிறது. ஆனால் இந்தக் காதல் என்ற பிசாசு என்னைப் பிடித்து ஆட்டுகிறதே சார்..?” - இப்படி ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்தது. இதேபோன்ற அனுபவ அவஸ்தைகள் நிறைய இளைஞர்களின் வாழ்க்கையிலும் உண்டல்லவா!

அன்பின் ஏக்கம்

அன்புக்கும் காதலுக்கும் யார்தான் ஏங்கவில்லை? ஏற்கெனவே அன்பற்ற சூழ்நிலையில் வளரும்போது, அதற்கான ஏக்கமும் கூடவே வளர்கிறது. பதின்ம வயதில் காதலுக்கு ஏங்குவது இயல்பானதே. பகிர்ந்துகொள்ள ஆட்களற்ற குடும்பம், ஆட்கள் இருந்தும் வறுமையின் கொடுமையில் அன்புப் பரிமாற்றங்கள் குறைவது, பெற்றோரின் இழப்பு, வாழ்க்கைக் கோளாறுகள் போன்றவை அவர்களை ஏக்கத்தினூடேதான் வளர்த்தெடுக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களைச் சந்திக்கும்போது பொசுக்கென்று விழுந்துவிடுகிறார்கள். அது தவறல்ல. அந்தப் பாலின ஈர்ப்பு இயல்பானதே. ஆனால், அது பகுப்பாய்ந்து பார்க்கப்பட வேண்டும்.

ஏன் பிடிப்பதில்லை ஆண்களை?

ஒருசில பெண்களுக்குச் சில ஆண்களைப் பிடிக்காமல் போய்விட்டால் கடைசிவரை பிடிக்காது. அதற்கான காரணத்தை அவர்களால்கூட சரியாகச் சொல்ல முடியாது. “ப்ச்… பிடிக்கலைன்னா விட்டுடுப்பா” என்று ஒற்றை வரியில் சொல்லிவிடுவார்கள். பிடிக்கவில்லை என்பதற்குக் காரணம் தேடும் பெண் மனம், பிடித்திருக்கிறது என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லிச் சிலாகிக்கும். எவ்வளவு ஆராய்ந்து பார்த்தாலும் பெண்களின் மனநிலை மாற்றங்கள் இன்றளவும் ஒரு மர்மம்தான்.

திட்டமிட்டுக் காதலிக்கலாமா?

ஒரு மொட்டு மலர்வதைப் போல ரகசியமாகவும் ரம்மியமாகவும் முகிழ்வது காதல். ஆனால், அது இரு பக்கமும் இயல்பாக இயற்கையாக மலர்வது நல்லது. அப்படியில்லாமல், ‘இப்போதைக்குக் காதல் என்னில் ஆரம்பித்துவிட்டது. இனி அது அவரிடமும் வர என்ன செய்ய வேண்டும்’ என்கிறீர்களா? கொஞ்சம் திட்டமிட வேண்டும்.

காதலிப்பதைக்கூடத் திட்டமிட்டுச் செய்ய முடியுமா? உண்மைதான். நமது சிந்தனைகள் அனைத்தும் அதிர்வலைகளால் ஆனவை. அவை இந்த அண்ட வெளியில் (ethereal space) நீந்திச் சென்று எதிராளியைத் தாக்கவல்லவை. அந்தச் சிந்தனைகளுக்கு வலு ஏற்றி, சக்தி கூட்டி, ஒருமுகப்படுத்தி வெளியே அனுப்பிப் பாருங்கள். சிந்தனைகளின் சக்தி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலானது.

நமக்கு அவரைப் பிடிப்பதற்கான காரணங்களை முதலில் பட்டியலிட வேண்டும். உடல் மொழியில் இருந்து வண்ணம், எண்ணம், பேசும் பாங்கு, பேசும் பொருள், நடக்கும் நேர்த்தி, குணாதிசயங்கள், ஆளுமையின் அழகியல், உடை நளினங்கள், உள்ளத்தின் அழகு… இப்படிப் பல விஷயங்கள் தனியாகவோ கூட்டாகவோ அவரிடம் நமக்குப் பிடித்திருக்கலாம். அது காதலின் மெல்லிய பூங்காற்றுக் காலம். அதன் பின் நாம் மெல்ல நெருங்கும்போது எதிர்ப்பக்கமிருந்தும் வரவேற்பு மிக முக்கியம். நம்மைப் பிடித்திருப்பதை அவரது கண்களே காட்டிக்கொடுத்துவிடும். அவர் பேசும் பாங்கு, நம்மைக் கண்டதும் செய்யும் அனிச்சையான அங்க அசைவுகள், கை கால்களை வைத்து அவருக்கே தெரியாமல் ஆடும் நடனம்… இப்படிப் பல சேட்டைகளை வைத்து அவர் காதலில் இருக்கிறார் என அறியலாம்.

பரீட்சையல்ல காதல்

படித்துப் பார்த்து, ஆய்ந்து நோக்கி அணுகுவதற்குக் காதல் ஒன்றும் கல்லூரிப் பரீட்சை அல்ல. இன்னதென்று புரியாத உணர்வு இருவருக்குமே தோன்ற வேண்டும். எண்ண அளவில், செயல் அளவில் அவர்களின் சுவைக்கு ஓரளவேனும் நாம் ஒத்துப்போயிருந்தால் சிரமமே இல்லாத ஒரு பரிமாற்றம் ஆரம்பித்துவிடும். இருவருக்குமே பரஸ்பரம் ஒரு இணக்கமான உணர்வு (comfort feeling) வந்துவிடும். அந்த ஆரோக்கியமான காலகட்டத்தைக் கொஞ்ச காலம் அப்படியே கொண்டு செல்ல வேண்டும். முழுவதும் புரிந்துகொள்ள உதவும் இந்தக் காலகட்டத்தில் அவசரம் கூடாது. “இன்னிக்குப் பாக்கறோம்… நாளைக்கு ப்ரபோஸ் பண்றோம்… மறுநாள் டேட்டிங் போறோம்” என்பதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம்.

புகழ்ச்சியும் வேண்டும்

பார் போற்றும் பேரழகியாகவே இருந்தாலும் தன்னை ஒருவன் நெருங்கி வருகிறான் என்பது யாரையும் சலனப்படுத்தியே தீரும். “நான் பேரழகி. என்னைச் சாதாரணமாக யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என்பது பொதுப்புத்தியாக இருக்கலாம். “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது” என்ற புகழ்ச்சியை எந்தப் பெண்ணுமே ரசிக்கத்தான் செய்வார். அதை அவரிடம் நேரில் சென்று நாகரிகமாகத் தெரிவிப்பதில்தான் சூட்சுமமே இருக்கிறது.

மனித மனம் எப்போதுமே பாராட்டுதலுக்கும் ஆராதனைக்கும் ஏங்குவது. நம் பெயரை உச்சரித்து உரிமையுடன் நம்மை அணுகும்/ விமர்சிக்கும் யாரையும் நமக்குப் பிடிக்காமல் போகாது. இரு பாலினத்தவர் நெருங்கி வரும்போது பாராட்டுரைகள் காதல் சாயம் பூசிக்கொள்கின்றன. ஆனால், இப்படி முளைவிடும் காதலுக்கு இருவருமே கொடுக்கும் ஆழம்தான், அதை வாழ வைப்பதற்கான ஆக்ஸிஜன். ஒரு தரப்பில் அது குறைந்தாலும் அந்தக் காதல் மூச்சுத் திணறிவிடும்.

காதலுக்கு எது தகுதி?

அந்தப் பொருள் எனக்கு வேண்டும் என்று வேண்டுவதில்கூட ஒரு நேர்த்தி இருக்கிறது. குழந்தையைப் போல் அழுது அடம் பிடித்தால் பொம்மை கிடைக்கலாம், காதல் கிடைக்காது. அது ஏன் வேண்டும்? நான் அதற்குத் தகுதியானவன்தானா? அதை வைத்து என்ன செய்யப் போகிறேன்? எனக்கு அதைக் கேட்பதற்கான உரிமைகள் என்னென்ன?அது மற்றவர்களுக்கு எந்த வகையில் இடைஞ்சல் தரும் அல்லது தராது? - இது போன்ற கேள்விகளைக் கேட்டு உங்களை முதலில் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனிடமும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பிரபஞ்ச அறிவு என்று சொல்லப்படுகிற Universe intelligent என்ற சக்தியிடமும் வேண்டுதலை முன்வைக்கலாம்.

“உடல், மனம், ஆன்மா மூன்றாலும் நான் அவளை நேசிக்கிறேன். இம்மூன்றாலும் அவளை யாசிக்கிறேன். அவளை எனக்குப் புரிகிறது. அவள் என்னில் சுகமடைவாள். அவள் ஒரு பெண். அவளுக்கு ஒரு ஆண் வாழ்நாள் முழுக்க வேண்டும். அந்த ஆண் நான்தான். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே என்னை அவளுக்குத் தா” - இப்படி எத்தனை பேர் வேண்டியிருக்கிறீர்கள்? “அவளை எனக்குத் தா” என்று கேட்பது வெறுமனே ஆசைப்படுவது போலாகிவிடும்.

ஆனால் ‘என்னை அவளுக்குக் கொடு’ என்று சொல்லும்போது, உங்கள் காதலின் ஆழம் புரியவைக்கப்படுகிறது. சரியான தெளிவான முறையில் முன்வைக்கப்பட்ட ஒரு வேண்டுதல் பாதி தீர்க்கப்பட்டதற்குச் சமம் என்பார்கள். காதலும் அப்படித்தான். ஒவ்வொரு அடியிலும் தெளிவும் தீர்க்கமும் தேவை. முனைப்புடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், எல்லாவற்றையும்விட உண்மை யுடனும் முயற்சி செய்துபாருங்கள். உங்கள் காதலும் வெற்றிபெறும்!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x