Last Updated : 01 Jul, 2016 12:17 PM

 

Published : 01 Jul 2016 12:17 PM
Last Updated : 01 Jul 2016 12:17 PM

புறப்படும் புதிய இசை - 13 : என்றென்றும் இசை மாணவர்

டிரெய்லரிலேயே மிரட்டிய ‘மெட்ரோ’ திரைப்படத்துக்கு இசையமைத் திருப்பவர் ஜோகன் சிவனேஷ். “படிப்பு போ போ எனச் சொன்னபோது இசை வா வா என்றதனால் இன்று நானும் ஒரு இசையமைப்பாளர்” எனச் சிரிக்கிறார் ஜோகன். பக்கா சென்னைவாசியான ஜோகனுக்கு இசையில் முதல் கதாநாயகன் தேவராஜன் தாத்தா. கித்தார், மேண்டலின் எனப் பல இசைக் கருவிகளைத் தாத்தா வாசிப்பதைப் பார்த்துப் பார்த்துச் சிறுவயதிலேயே ஜோகனுக்கு இசை மீது ஈர்ப்பு உண்டானது.

காலத்துக்கு ஏற்ற இசை

ஆறாம் வகுப்பு படிக்கும்போது கீபோர்டு இசைக்கப் பழகினார். ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரியாகச் செயல்பட்டுவந்தது. அதில் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் லக்ஷ்மண் ஸ்ருதி ஆர்கெஸ்டிராவில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இசையின் மீது நாட்டம் அதிகரித்ததால் படிப்பின் பக்கம் மனம் செல்லவே இல்லை.

“சொல்லப்போனால் பிளஸ் டூ பரீட்சை எழுதி முடிச்ச அடுத்த நாளே நேரடியாகக் கச்சேரிக்குத்தான் போனேன்” என்கிறார் ஜோகன். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியன் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகி அவர்கள் இசையை அருகிலிருந்தே அனுபவிக்கும் வாய்ப்பை லஷ்மண் ஏற்படுத்திக் கொடுத்தார். “நாங்க அந்தக் காலத்துல உருவாக்குன இசையை இந்தக் காலத்துல நீங்க மறுபடியும் வாசிக்கும்போது புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற மாதிரி அதை மாற்றி பயன்படுத்தக் கத்துக்கணும்” என இளையராஜா சொன்ன அறிவுரை பொக்கிஷம்போன்றது என மகிழ்கிறார்.

அதிலும் 2008-ல் இளையராஜாவைக் கவுரவிக்க லஷ்மண் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ரா நடத்திய ‘ஒன் மேன் ஷோ’ நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு அருகில் நின்று அவருடைய ‘திருவாசகம்’ ஆல்பத்தை கீபோர்டில் வாசித்தது ஜோகனுக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தக் காலகட்டத்தில் டிரம்ஸ் சிவமணியிடம் சவுண்ட் புரோகிராமிங் செய்ய ஆரம்பித்தார்.

அடையாளம் தந்த ‘ஆள்’

இன்றும் ஒரு இசை மாணவராக பியானோ வகுப்புகள் சென்றுகொண்டிருக்கிறார் ஜோகன். மேடைக் கச்சேரிகளில் மக்கள் முன்னிலையில் வாசித்த கலைஞர் என்பதால் நிஜக் கலைஞர்களை வைத்து இசைக்கும்போதுதான் தரமான இசையை உருவாக்க முடியும் என நம்புகிறார். அதே நேரத்தில் சில இசை பாணிகளுக்கு எலக்டிரானிக் உகந்தது என்கிறார்.

“ஜாஸ், ராக் அண்டு ரோல் பாணிகளை ஒரு கித்தாரில் லைவ் ரெக்கார்டிங் செய்யும்போது கிடைக்கும் ஒலித் தரத்துக்கு எதுவும் ஈடு இணையாக முடியாது. ஆனால் ‘டப் ஸ்டெப்’ பாணியை எடுத்துக்கொண்டால் எலக்ட்ரானிக்தான் சிறந்த ஸ்டைல்” என்கிறார்.

இயக்குநர் சுசி கணேசனிடம் ‘கந்தசாமி’ படத்தில் துணை இயக்குநராக ஆனந்த கிருஷ்ணன் வேலை பார்த்தபோது ஜோகனுக்கு அறிமுகமானார். சிறந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என இருவரும் அடிக்கடி கலந்துரையாட 2013-ல் ‘ஆள்’ படத்தை எடுக்க முடிவெடுத்தனர்.

“‘ஆமிர்’ படத்தை ரீமேக் பண்ணலாம் என ஆனந்த் முடிவெடுத்ததும் அதை மிஞ்சும் வகையில் இசையமைக்க வேண்டும் என நினைத்தோம். அந்தப் படத்தின் திரைக்கதைக்கு இசைதான் உயிர்நாடி. அதிலும் கடைசி 20 நிமிடங்களுக்கு வசனமே கிடையாது. அப்படியிருக்க நடிப்பும் பின்னணி இசையும் மட்டுமே அத்தனைக்கும் பொறுப்பு என்பதால் படபடப்பாக இருந்தது” என அதே படபடப்போடு பேசுகிறார்.

ஏற்கெனவே ‘கொள்ளைக்காரன்’ படத்துக்காக இசையமைத்திருந்தாலும் ‘ஆள்’ படம்தான் ஜோகனுக்கு அடையாளம் தேடித் தந்தது. தன் இசைக்குச் சிறப்பான சவுண்ட் டிராக்கும் சவுண்டு எஃபக்ட்ஸும் தந்து சவுண்டு மிக்ஸ் செய்த துக்காராம் மகேஷுக்கு நன்றி சொல்கிறார். ‘ஆள்’ படக் கூட்டணி இவர்களுடைய நட்பைப் பலப்படுத்தியது.

இசைக்கான படம்

அழுத்தமான கதைக் களத்தைக் கொண்ட திரைப்படங்களில் வேலைபார்க்கும்போது அங்குப் பின்னணி இசைக்குப் பெரிய பங்கு உண்டு. “எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசை ஜாம்பவான்கள் கையாளும் அளவுக்குக் கனமான திரைக்கதை கொண்ட படம் ‘மெட்ரோ’.

ஆரம்பத்தில் ‘டெவலப்மெண்ட் ஆஃப் கிரைம்’ (development of crime) என்கிற தீம் சாங் மட்டுமே திட்டமிட்டோம். ‘பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா… அந்தச் சாமிகூட நம் பந்தம் இல்லடா…’ எனக் கானா பாலா எடுத்த எடுப்பில் ஒரு வரி சொன்னதும் நான் அசந்துபோனேன். உங்களுக்கு ஒரு பொருள் சொந்தமில்லை என நான் நினைக்கும்போதுதானே அதைத் திருடுவேன்! அந்தப் பார்வைக்கு இந்தப் பாடல் வரி கச்சிதமாகப் பொருந்தியது” என்கிறார் ஜோகன். தன் குரலால் மட்டுமல்லாமல் பாடல் வரிகளாலும் கானா பாலா இதில் மிரட்டியிருக்கிறார்.

“படம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் நடந்துகொண்டிருந்தபோது படத்தின் கருவைச் சொல்ல ஒரு பாடல் வேண்டும் எனத் தோன்றியது. ‘நான் யார் முகமா உடலா’ என்கிற பாடலை ரூனா சிவமணியின் வித்தியாசமான குரலில் ஜாஸ் இசை பாணியில் தந்தேன்.

அதைக் கேட்டவுடன் ஆனந்த் உற்சாகமானார். எடிட்டர் ரமேஷ் பாரதியுடனும் கேமராமேன் உதயக் குமாருடனும் கலந்து பேசி மீண்டும் அந்தப் பாடலுக்கு ஏற்ப சில எடிட்டிங், ‘கலர் கரெக்ஷன்’ செய்தார்” என்கிறார். இசைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் படக் குழுவினரோடு வேலைபார்த்த மகிழ்ச்சியில் பேசுகிறார். எந்தக் காரணத்தைக் கொண்டும் படத்தின் கதையைவிட்டுத் தடம் பிறழாமல் இருப்பதே சிறந்த இசை என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x