Published : 29 Jul 2016 12:25 PM
Last Updated : 29 Jul 2016 12:25 PM
இந்தியாவின் நாடி ஜோதிடத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கிராபிஃக் நாவலை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படமெடுக்கப்போவதாகச் சமீபத்தில் ஓர் அறிவிப்பு வெளியானது. பிரபல இயக்குநரும், நடிகருமான ஜாஷ் ராட்னர் இப்படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. அந்த கிராபிஃக் நாவல் ‘த லீவ்ஸ்' (ஓலைகள்). ஒவ்வொரு மனிதனின் எதிர்காலமும் ஒவ்வொரு ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையை முன்வைத்து எழுதப்பட்ட சித்திரக்கதை இது.
இந்தக் கதையை எழுதியவர் கெவின் வால்ஷ். அவருடைய முன்கதைச் சுருக்கம் சுவாரசியமானது. ஸ்காட் ரூடின் என்ற புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரின் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார் காமிக்ஸ் எழுத்தாளர் கெவின் வால்ஷ். லண்டன் சாலையில் ஒருமுறை சென்று கொண்டிருந்தபோது முன்கோபக்காரரான ரூடின், காரிலிருந்து வால்ஷை வெளியே தள்ளிவிட்டார். தன்னை நிரூபிப்பதற்கு அதையே ஒரு வாய்ப்பாக கெவின் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு எழுத்தாளராக, கதாசிரியராக, திரைப்படத் தயாரிப்பாளராகப் படிப்படியாக உயர்ந்தார்.
அதிர்ச்சி ஜோதிடம்
கதை இதுதான்: இதய அறுவை சிகிச்சையில் ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்த மாக்ஸ் ஒரு சிக்கலான, வரம்பற்ற வாழ்க்கை முறையைக் கொண்டவர். ஒரு குறிப்பிட்ட நாளில் அவரது துணைவி, ‘மாக்ஸ் தந்தையாகப் போகிறார்', ‘இந்தியாவில் இருக்கும் அவரது நண்பர் ஆஷிஷ் ஒரு விபத்தில் இறந்து போகிறார்', ‘மாக்ஸை விட்டுப் பிரிய தான் முடிவெடுத்தது' ஆகிய மூன்று விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார்.
நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இந்தியா வரும் மாக்ஸை ஒரு அந்நியன் சந்தித்து, 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தச் சந்திப்பு நடக்குமென்று நாடி ஜோதிடர்கள் தனக்குச் சொன்னதாகக் கூறி மாக்ஸை ஆச்சரியப்படுத்துகிறார். இதனால் ஆர்வம் மேலிட, பயணிக்க வேண்டாமென்ற அறிவுரைகளையும் மீறி, ஆஷிஷின் சகோதரன் மற்றும் ஓர் அந்நியனுடன் வாராணசிக்குப் போகிறார் மாக்ஸ்.
அவரது நண்பரின் ஓலையைப் பார்த்து, அவரது வாழ்க்கையில் நடந்த, நடக்கப்போகும் விஷயங்களைத் துல்லியமாகச் சொல்கிறார் நாடி ஜோதிடர். அந்த அந்நியனுக்கு விமோசனம் அளிப்பவர் மாக்ஸ் என்று சொன்ன அந்த ஜோதிடர், மாக்ஸின் ஓலையைப் பார்த்துவிட்டு, அவர்களை அங்கிருந்து வெளியேறும்படியாகச் சொல்கிறார். மாக்ஸின் ஓலையில் எதுவுமே எழுதப்படாமல், காலியாக இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானதென்றும், அவரை விதியற்றவர், எதிர்காலம் இல்லாதவர் என்றும், எமனின் ஒரு அவதாரமாகக் கருதப்படுபவர் என்றும் சொல்லும் அந்நியன், மாக்ஸின் தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டதையும் சொல்கிறார்.
நான் யார்?
எமனின் அவதாரமான மாக்ஸைக் கொன்றால், அதற்கான மரியாதையைப் பெறலாமென்று அவரை வேட்டையாடத் துடிக்கிறார்கள் பலர். அவர்களிடமிருந்து தப்பித்து, அந்நியனின் வார்த்தையை மீறி அமெரிக்காவுக்குச் செல்லும் மாக்ஸுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
அவரது கைபேசி, மின்னஞ்சல்கள் வெறுமையாக மாற, அவரது அபார்ட்மெண்ட்டில் வேறொருவர் குடியிருக்க, அலுவலகத்தில் இவரை யாருக்குமே அடையாளம் தெரியாமல் போகும்போதுதான், தன்னுடைய அடையாளம் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதை உணர்கிறார் மாக்ஸ். கடைசியாக அவருடைய துணைவியாலும் அடையாளம் காண முடியாதபோதுதான், மாக்ஸுக்கு முதன்முறையாக அச்சம் எட்டிப் பார்க்கிறது.
எழுதினாரா புதிய விதி?
இதற்குப் பிறகு மாக்ஸ் மறுபடியும் இந்தியாவுக்கு வருகிறார். யாரை நண்பனாக நினைத்தாரோ, அவரே மாக்ஸைக் கொல்லத் துடிக்க, எதிர்பாராதவரிடமிருந்து உதவி கிடைக்கிறது. அந்நியனின் வாழ்க்கையில் மாக்ஸின் பங்கென்ன? மாக்ஸ் எப்படித் தன்னுடைய எழுதப்படாத விதியை மாற்றி எழுதினார்? இழந்த தனது அடையாளத்தை அவரால் மீட்டெடுக்க முடிந்ததா என்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் கெவின்.
கெவின் வால்ஷ், ஜாஷ்ராட்னர்
இந்தியா என்றதுமே தலைப்பாகை கட்டியவர்கள் என்ற ஸ்டீரியோடைப்பை இந்தக் கதையிலும் தொடர்ந்துள்ளது வெறுப்படைய வைத்தாலும் நாடி ஜோதிடம், எதிர்காலக் கணிப்பு, ஓலைச்சுவடிகள் என்று ஓரளவுக்கு நடைமுறையில் உள்ள கதையை எழுதியிருக்கிறார் கெவின். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், கதையின் வேகமான ஓட்டத்தில் அஷ்வினின் ஓவியங்கள் பழகி, உறுத்தாமல் இருக்கின்றன. கதையின் முடிவு சற்றே ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், விறுவிறுப்பான நடை அதை மறக்கச் செய்துவிடுகிறது.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர் | TamilComicsUlagam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT