Published : 24 Feb 2017 09:46 AM
Last Updated : 24 Feb 2017 09:46 AM
“நாங்கள் இருவரும் ஒரே ஏரியாவில்தான் வசித்தோம். எங்கள் குடும்பங்களுக்கு இடையே நல்ல நட்பு. என் காதலை மென்மையாக அதே சமயம் உறுதியாக எடுத்துச் சொல்லியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதுதான் அந்த அதிர்ச்சியைக் கேள்விப்பட்டேன். நேரிலும் பார்த்துவிட்டேன். என்னைவிட மிகவும் சுமாரான ஒரு ஆண். நிறமும் உயரமும் குறைவு. அவரைத் திருமணம் செய்துகொள்ள எப்படித்தான் சம்மதித்தாள் என்று தெரியவில்லை. அது காதல் மணம் என்பது எனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது” - ஒரு இளைஞர் இப்படி மெயிலில் புலம்பியிருந்தார்.
காதல் வரைபடம்
‘காதலுக்குக் கண்ணில்லை’ என்று ஒற்றை வரியில் சொன்னால் அது வழக்கமான விளக்கமாக இருக்கும். நம் மனதில் இருக்கும் காதல் வரைபடம் (Love map) பற்றிச் சொன்னால் இவர் புரிந்துகொள்வார். உருவமும் உயரமும் நிறமும் பார்த்துத்தான் காதல் வரும் என்று இவரைப் போல நம்மில் பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
யாருக்கு யாரைப் பிடிக்கும், எப்போது அது நடக்கும் என்பதெல்லாம் நம் மனதின் சில ரகசியக் கோட்பாடுகளைப் பொறுத்தது. சிவப்பாக இருக்கிற பெண்ணை ஒருவருக்குப் பிடிக்கும் என்றால், இன்னொருவர் கறுப்பு நிறத்தழகியைத்தான் மணம் முடிப்பேன் என்று சபதம் எடுத்திருக்கலாம்.
இப்படி ஒருவர் இருந்தால் எனக்குப் பிடிக்கும் என்பது நம் மனதில் எப்போது புகுந்தது என்பதே தெரியாத அளவுக்கு அது ஆழ்மன ரீதியாக நடக்கும். நம் காதலரின் குணாதிசயங்களின் பட்டியல் நாம் உணர்வதற்கு வெகு முன்பாகவே நம் மனதில் பதிந்துவிட்டிருக்கும். இதைத்தான் காதல் வரைபடம் என்கிறோம். அந்த வரைபடத்துடன் பொருந்திப் போகும் நபரை நாம் சந்திக்கும்போதுதான் கண்டதும் காதல் என அந்த ரசாயனக் குதிரை வேகமாகக் கிளம்பிவிடுகிறது.
இந்தக் காதல் வரைபடம் பெரும்பாலும் 5 முதல் 8 வயதுக்குள் நடக்கும் என்கின்றன ஆய்வுகள். நாம் பிறந்து வளரும் குடும்பம், நம் வளர்ப்பு, அக்கம் பக்கத்து உறவு முறைகளின் அணுகுமுறை, பொருளாதாரச் சூழ்நிலை என்று பல விஷயங்களை நாம் சிறு வயதில் கடந்துவருகிறோம்.
மனதில் பதியும் நேச விதை
நம் அப்பா வெற்றிபெற்ற நபராக இருக்கிறார் என்றால் நம் முதல் கதாநாயகன் அவர்தான். அப்பாவைப் போல வர வேண்டும் என்று மகனும், அப்பாவைப் போல ஒருவன் நம் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று மகளும் நினைப்பார்கள். அது அவர்களின் ஆழ் மனதில் பதிந்துவிடும். இப்படி நாம் ஆழ்மனதில் பதிந்துவைத்திருக்கும் எண்ணங்களுக்குப் பொருத்தமான நபரைச் சந்திக்கும் போது நாம் காதல் வசப்படுகிறோம். ஆனால் அதே நேரம் நாம் எல்லோருமே நூறு சதவிகிதம் நம் காதல் வரைபடத்துக்குப் பொருந்திவரும் நபரைச் சந்திப்பது குதிரைக்கொம்பே. அப்படி அமைந்தால் நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.
காதல் வரைபடமும் காலப்போக்கில் சில மாறுதல்களுக்கு ஆட்படும். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த பெண் வேண்டாம் என்று ஒருவர் முடிவெடுத்திருப்பார். பெண்ணின் உயரம் முக்கியம் என்று இன்னொருவர் நினைத்திருக்கலாம். ஆனால் திடீரென்று ஒரு தேவதையைச் சந்தித்தவுடன் அவர்களது கொள்கைகள் எல்லாம் கலவர காலத்துச் சட்டமன்றம் போல களேபரமாகிக் குழம்பிவிடும். அடிப்படையாக, ஆண்டுக்கணக்காக நாம் வகுத்துவைத்திருக்கும் பெரும்பான்மையான மற்ற விஷயங்களுக்கு அவர் ஒத்துப்போவதால் உயரமும் அவர் சார்ந்த மதமும் பெரிதாகத் தோன்றாது. மனம் சற்று முதிர்ந்துவிடுவதையும் இது காட்டுகிறது.
பார்த்ததுமே வரும் பிரியம்
யாரிடம் நாம் காதல் வசப்படுகிறோம்? தெரிந்தவர்களிடமா, தெரியாதவர்களிடமா? அறிந்த, புரிந்த நபரிடம் மனதைப் பறிகொடுப்பது ஆச்சரியமல்ல. நமக்குப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் காதல்வசப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்! மிகவும் தெரிந்தவர்களிடத்தில் காதல் என்ற சுவாரஸ்யமான மந்திர உணர்வை வெளிப்படுத்துவதில் கண்டிப்பாக ஒரு தயக்கம் இருக்கத்தானே செய்யும்? அதே சமயம் ‘முன் பின் தெரியாதவங்களை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிறது?’ என்று கேட்கும் பெண்களும் அதிகம். கல்யாணம் என்பதை ஒதுக்கிவிட்டு காதல் என்ற எதிர்பாராத உணர்வு மின்னலைப் பற்றி யோசியுங்கள். எந்தத் திட்டமும் இல்லாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கும்போது முன் பின் தெரியாத மனிதரிடத்தில் நமது வரைபடத்துக்குப் பொருந்தும் குணாதி சயங்களைப் பார்க்கும் போது ஏற்படும் பரவசம் அனுபவித்தவர்களுக்குத் தெரியுமல்லவா?
ரோமியோ ஜூலியட் விளைவு
“ஏதோ மந்திரம் போட்டு என் பொண்ணை மயக்கிட்டான்” என்று பல பெற்றோர் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். அதுவும் பருவத்தின் வசந்த வாயிலில் நிற்கும் பெண்ணோ ஆணோ காதல் வசப்படுவது இன்று மிகச் சாதாரணம். விஷயம் தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வீட்டை ரணகளமாக்கிவிட வேண்டாம் பெற்றோரே. மன முதிர்ச்சி குறைவான அந்தப் பதின்ம வயது சில சமயம் நேரெதிர் விளைவுகளை நமக்குத் தரும். உங்கள் பெண்ணின் முதிர்வில்லாத காதலை மிகவும் மெனக்கெட்டு சினிமா வில்லன் போல் சகல விதங்களிலும் எதிர்க்கிறீர்கள் என்றால் என்ன ஆகும்?
பயத்தில் அந்தக் குழந்தைகள் பேசாமல் விட்டு விலகிவிடலாம். ஆனால் சில சமயம் வேறு மாதிரி ஆகிவிட்டால்? அதாவது நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்து அவர்களைப் பிரிக்க நினைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அவர்களின் உணர்வுப் பிணைப்பு வலுப்பட்டுவிடவும்கூடும். உளவியலில் இதை ‘ரோமியோ ஜூலியட் விளைவு’ (Romeo & Juliet effect) என்பார்கள். ஷேக்ஸ்பியர் எழுதிய வரலாற்றுப் புகழ்மிக்க காதல் காவியத்தின் கதாபாத்திரங்களுக்கு அப்படி நேர்ந்ததால் அவர்கள் பெயரிலேயே இந்த விளைவும் வழங்கப்படுகிறது.
நாம் சந்திக்கிற ஆயிரம் பேரில் ஒருவரை மட்டும் நமக்குப் பிடித்துப் போவதற்கான காரணம் நம் மனதில் பதிந்துள்ள காதல் வரைபடம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். உயரம், நிறம் போன்ற புற அழகுகளைத் தாண்டி அன்பு, கனிவு, பணிவு, துணிவு போன்ற அக அழகுகளும் பொருந்திவந்தால் நமக்கு ஒருவரை மிகவும் பிடிக்கிறது. இது வெறும் பிடித்திருப்பது மட்டுமே. அதன் பிறகு அவருடன் பழகப் பழக பல உணர்வு நிலைகளைக் கடந்து வர வரத்தான் அவர் மீதான உங்கள் காதலை நீங்களே அடையாளம் காண முடியும்.
நமக்குப் பிடித்திருப்பவர்களை எல்லாம் காதலிக்க முடியாது, அது காதலாகவும் இருக்காது. ஆனால் காதலிப்பவர்களை முதலில் நமக்கு எக்கச்சக்கமாகப் பிடித்திருக்கும். விரும்புவது என்பது வேறு, காதலிப்பது என்பது வேறு என்பதைப் புரிந்துகொண்டால் உங்கள் காதல் என்பது இன்னும் அர்த்தமுள்ளதாகிவிடும்.
எல்லாமே பேசலாம்! ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும். |
(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT