Last Updated : 25 Jan, 2014 12:00 AM

 

Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

வழிதவறிய ஆடுகளும் மொழியறியா மேய்ப்பர்களும்

தெரியாத இடம் பற்றி அறிமுகமில்லாத நபர்களிடம் வழி கேட்கும் அனுபவம் நம்மில் அனைவருக்கும் வாய்த்திருக்கும். நம்மிடமும் பலர் முகவரி எழுதிய துண்டுக் காகிதத்துடன் வந்து வழி கேட்டிருப்பார்கள். அவற்றில் பல அனுபவங்கள் நகைச்சுவையானதாகவே அமைந்துவிடும். டிசம்பர் மாதத்துக் குளிர்காலத்தில் ஒரு முறை டெல்லியில் நேரு ப்ளேஸ் பகுதியில் ஒரு அலுவலகத்தைத் தேடிச் சென்றோம். தெரியாத இடம், புரியாத மொழி. அவஸ்தைக்குக் கேட்க வேண்டுமா? பெரிய பெரிய வீடுகள். குடியிருப்புப் பகுதியில் இயங்கிவந்த அலுவலகம் அது. விசாலமான அந்தத் தெருவில் விலாசம் விசாரித்துத் தெரிந்துகொள்ள ஆட்களே இல்லை. குளிருக்கு இதமாக தடித்த கம்பளியான ரஜாய்க்குள் ஒளிந்துகொண்டார்களா அல்லது குளிருக்குப் பயந்து அனைவரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு தார் பாலைவனத்துக்கு ஓடிவிட்டார்களா என்று சந்தேகம் வந்தது. எதிர்பட்ட ஒன்றிரண்டு பேரும் கைகளை விரித்து ஆட்டியபடி “நஹி..நஹி..பதா நஹி” என்று நடையைக் கட்டினர். நண்பருக்கு இந்தி தெரியாது. இந்திக்கு என்னைத் தெரியாது. அரைமணி நேர அலைச்சலுக்குப் பின்னர் இந்த ஏரியாவாக இருக்கக் கூடும் என்ற உத்தேச கணிப்பில் ஒரு பெரிய கட்டிடத்தின் காவலாளியைக் கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.

ஒரு பெரிய கட்டிடத்துக்கு வெளியே கூண்டு போன்ற செவ்வக மர அறைக்குள் கண்கள் மட்டும் தெரியும்படி மப்ளரைச் சுற்றிக்கொண்டு அவ்வீட்டின் செக்யூரிட்டி அமர்ந்திருந்தார்.நண்பரும் நானும் அரைகுறையாக முகவரி எழுதப்பட்ட துண்டு சீட்டைக் காட்டி அவரிடம் வழிகேட்டோம். எங்கள் இந்தி மொழிப்புலமையின் அதிகபட்ச சாத்தியங்கள் அனைத்தையும் உபயோகப்படுத்தி விளக்கியும் மனிதருக்குப் புரியவில்லை. கடைசியில் கைகால்களை ஆட்டி, ‘எப்படியும் 50 பேருக்குக் குறையாத அளவுக்கு ஆட்கள் வேலைபார்க்கும் மார்க்கெட் ரிஸர்ச் அலுவலகம்’ என்பதை விளக்க பரத முத்திரை அளவுக்கு சைகை எல்லாம் காட்ட வேண்டியிருந்தது. பத்மா சுப்ரமணியம் பார்த்திருந்தால் பட்டமெல்லாம் கொடுத்து எங்களைக் கவுரவித்திருப்பார்.

இறுதியாகத் தமிழில் “இந்த ஏரியாவில் இருக்கும் இடமே இவனுக்குத் தெரியலையே..என்ன செக்யூரிட்டியோ!” என்றார் நண்பர். உடனே அந்த முகமூடி செக்யூரிட்டி “ஸார்..தமிலா? இத மொதல்லே சொல்லக் கூடாதா? என்னா ஆபீஸ் சார் அது?” என்றார். “அடப்பாவி... நீங்களும் தமிழ்தானா?” என்று நாங்கள் ஆச்சரியம் கலந்த உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர்விடாத குறையாகக் கேட்டோம். முகத்தில் சுற்றியிருந்த மப்ளரைக் கழற்றி விட்டு தமிழ் முகத்துடன் தரிசனம் தந்த அந்த மனிதரை விழுந்து வணங்காத குறை. பிறகு பார்த்தால் நாங்கள் தேடி வந்த இடம் அந்தக் கட்டிடம் தான். கட்டிடத்தின் வரிசை எண் தெரியாத அளவுக்கு காம்பவுண்ட் சுவரை குரோட்டன்ஸ் செடிகள் என்ற பெயரில் ஒரு சிறிய கானகம் மறைத்திருந்தது.

நாங்கள் மறத்தமிழர்கள் என்பதையாவது எங்கள் முகங்களைப் பார்த்து அந்த செக்யூரிட்டி தெரிந்துகொண்டிருந்தால் அங்கு ஒரு மொழிப்போர் நிகழ்ந்திருக்காது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நாங்கள் இருவரும் ஹெல்மெட்டுகளைக் கழற்றவே இல்லை.

ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘ரோட்ஸ் டு முஸோரி’ என்ற புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். டெல்லி செல்லும் சாலையில் ஒரு ரெஸ்டாரண்டில் அவர் அமர்ந்திருக்கும்போது ஒரு பிரெஞ்சுப் பெண் வந்து ‘a' la carte' பற்றி விசாரித்திருக்கிறார். அந்த வார்த்தைக்கு மெனு கார்டு என்று அர்த்தம். அப்போது ஒரு ஹோட்டல் ஊழியர் பிரசன்னமாகி அப்பெண்மணிக்கு உதவ முன்வந்தார். மனிதர் அப்பெண்ணை வெளியே அழைத்துச் சென்று ரெஸ்டாரண்டுக்கு அருகில் உள்ள பொதுக்கழிப்பறையைக் காட்டி அனுப்பி வைத்தாராம். தலையாட்டிவிட்டு சென்ற பெண் பின்னர் வரவே இல்லையாம். வழிகாட்டிகள் அந்தச் சமயத்தில் கடவுளர்களாகிவிடுவதில் ஆச்சரியமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x