Published : 16 Sep 2016 01:03 PM
Last Updated : 16 Sep 2016 01:03 PM
இந்த உலகமே உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது. அறிவியலும் விஞ்ஞானமும் ஆயிரம் புரட்சிகளையும் மாற்றங்களையும் சாதித்துக் காட்டினாலும், உயிர்ச் சங்கிலியின் ஆதாரம் ஆண்-பெண் உறவுதான். ஆணைத் தவிர்த்துவிட்டுப் பெண்ணும் பெண்ணைத் தவிர்த்துவிட்டு ஆணும் வாழ முடியாது. ஆண், பெண்ணுக்கிடையே மலரும் காதல் என்னும் உணர்வு அதிஅற்புதமானது, தவிர்க்க முடியாதது. ஆனால் காதலைவிட காதல் சார்ந்து எழும் குழப்பங்களும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றன. எது காதல், எதுவரை காதல் என்பது இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி. அந்தக் கேள்விகளின் வழியே பயணப்பட்டு விடைகளைத் தேடுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை என்னிடம் ஆலோசனைக்காக அழைத்து வந்திருந்தார்கள். என் முன்னால் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிடம், “உன் பெயர் என்னம்மா?” என்று கேட்டேன். “நதியா” என்று ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. “உனக்கு என்னம்மா கஷ்டம்?” என்று கேட்டதுதான் தாமதம், கண்களில் பொலபொலவென்று கண்ணீர். பொங்கிப் பொங்கி அழுதார்.
“என்ன பண்றதுன்னே புரியலை டாக்டர். ஸ்கூல்ல யாரோ ஒரு பையனை விரும்புகிறாளாம். அவனை லவ் பண்றீயாடின்னு கேட்டா, இல்லைன்னு சொல்றா. ஆனா அவனை மறக்க முடியலை, ஒரு நாள் அவன் ஸ்கூலுக்கு வரலைன்னாலும் மனசு அடிச்சுக்குதுன்னு சொல்றா. என்ன வேணும்னுகூட இவளுக்குச் சொல்லத் தெரியலை” என்று தவிப்புடன் சொன்னார் அந்தப் பெண்ணின் அம்மா. அவருடைய அம்மா கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் நதியாவிடம் கேட்டேன்.
“அந்தப் பையனை காதலிக்கிறியாம்மா?”
“ம்... இல்லை, தெரியலை”
“அந்தப் பையன்கிட்டே இருந்து உனக்கு என்ன வேணும்?”
“தெரியலை டாக்டர். ஆனா அவன்கூட பேசணும். அவன்கூட இருக்கணும். என்கிட்டே எப்பவும் அவன் அன்பா பேசிக்கிட்டே இருக்கணும்னு தோணுது. இது காதாலான்னு தெரியலை. கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்கக்கூட தோணலை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே என்னை எதுவும் சொல்லலை. எல்லாம் போகப் போக சரியாகிடும்னுதான் சொன்னாங்க. எனக்குத்தான் மனசே சரியில்லை. அழுகை அழுகையா வருது. ஆனா அவனை ரொம்பப் பிடிக்குது” - அழுகையும் இடையிடையே கொஞ்சம் சிரிப்புமாகச் சொல்லி முடித்தார் நதியா.
அந்த மாணவனை விசாரித்தபோது, “நாங்கள் சாதாரணமாகத்தான் பழகுகிறோம்” என்று சொல்லியிருக்கிறார். அந்த மாணவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நாளும் அவரையே நினைத்துப் புலம்பும் நதியாவுக்கு என்னவாயிற்று?
அடுத்து சுரேஷின் கதை. டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். என்னைப் பார்க்க வந்த அன்றும் குடித்திருந்தார். “அவளால மட்டும்தான் என்னைச் சரிசெய்ய முடியும்” என்று எடுத்த எடுப்பிலேயே உணர்ச்சிவசப்பட்டார்.
“மூணு வருஷமா நானும் அவளும் காதலிக்கிறோம் சார். ரொம்ப நல்ல பொண்ணு சார். நல்லா படிப்பா. ஆனா நான்தான் ஏதாவது பண்ணிடறேன். சின்னதா சண்டை வந்தாலும் குடிக்கத் தோணுது. குடிச்சிட்டு கலாட்டா பண்ணிடறேன். நேத்துகூட அப்பாவையே அடிச்சிட்டேன். ஆனா போதை தெளிஞ்ச பிறகுதான் நான் பண்ண தப்போட வீரியம் புரியுது. அதுக்காக என்னை நானே தண்டிச்சிக்கிறேன். இதோ பாருங்க” என்றபடி தன் இடது கையைக் காட்டினார்.
அங்கே வரிசையாக நான்கு கோடுகள் பிளேடால் இழுத்து, தன்னைத் தானே வருத்திக்கொண்டிருக்கிறார். பாதிக் காயம் ஆறியும், மீதி ரணமாகவும் இருந்தது அவரது மனதைப் போலவே. “நீங்க தயவுசெய்து அவகிட்டே பேசுங்க சார்” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்டவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. இன்னும் முழுதாக போதைக்கு ஆட்படவில்லை போல. தெளிவாகவே பேசினார்.
அவர் சொன்ன பெண்ணைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். விவசாயப் படிப்பு படிக்கிறாராம்.
“எந்தப் பிரச்சினையும் இல்லை டாக்டர். மூணு வருஷமா காதலிக்கிறோம். ரெண்டு பேர் வீட்லயும் எந்த எதிர்ப்பும் இல்லை. எல்லாத்துக்கும் காரணம் அவரும் அவரோட குடிப் பழக்கமும்தான். அவருக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கு. அடிக்கடி என் செல்போனை வாங்கிப் பார்ப்பார். நானும் யதேச்சையாகப் பார்ப்பதாகத்தான் நினைத்தேன். ஆனால் நான் யார் யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்ப்பார். யாருடனாவது ‘சாட்’ செய்திருந்தால் கோபப்படுவார். நள்ளிரவில் போன் செய்து ‘வாட்ஸ் அப்’பில் இவ்ளோ நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கறேன்னு கேட்பார்.
இதெல்லாம் ஒரு பக்கம்னா, இவர் குடிக்கறதுக்கே நான்தான் காரணம்னு சொல்றார். ஆனா இதுவரை என்னைச் சந்தேகப்பட்டு நேரடியா எதுவும் கேட்கலையே தவிர, மறைமுகமா நிறைய கேட்டிருக்கார். என் மேல ரொம்ப பொசஸ்ஸிவ்வா இருக்கார்னு மட்டும் புரிஞ்சுக்க முடியுது. ஆனா அது என்னைக் கஷ்டப்படுத்துற அன்பா இருக்கக் கூடாது இல்லையா?” என்று கேட்டார் அந்த மாணவி.
இருவரிடமும் அன்பு நிறைந்திருக்கிறது. பிறகு என்ன சிக்கல்? சுரேஷிடம் என்ன பிரச்சினை? காதலில் ஏற்படும் உணர்வுக் குழப்பமா? இல்லை குடிப்பதால் ஏற்படுகிற சந்தேக நோயா? அவரது மன நிலையா? மதுவா? காதலிக்க வேண்டியதுதான். அது ஒரு மகோன்னதமான அனுபவம்தான். ஆனால் எத்தனை காதல்கள் அழகாக எடுத்துச் செல்லப்பட்டு கல்யாணத்தில் கைகூடி, அதற்குப் பிறகும் தொடர்கின்றன? எல்லாக் காதலர்களும் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்கிறார்களா? ஹார்மோன்களின் ருத்ர தாண்டவம் மட்டும்தான் காதலா?
நான் இங்கே சொன்ன இரண்டு சம்பவங்களிலும் தாங்கள் காதல் வயப்பட்டிருக்கிறோமா என்ற குழப்பம் இருக்கிறதே ஏன்? பிடிக்காத பெண்ணைப் பின் தொடர்வதும், தன்னைக் காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், மறுத்தால் எத்தகைய வன்முறையையும் கையில் எடுப்பதும் காதலில் சேருமா? காதலித்தாலே புத்தி பிசகிவிடுமா என்ன? விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலக்கிற காதலின் உணர்வுப் பிழைகளை உளவியல் கண்ணாடி அணிந்து அலசுவோம் வாருங்கள்.
-
மோகன வெங்கடாசலபதி சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர்.
முன்னாள் பத்திரிகையாளர்.
குடிநோய் குறித்த விழிப்புணர்வுக்காகத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT