Published : 03 Jun 2016 12:37 PM
Last Updated : 03 Jun 2016 12:37 PM

கான் விழாவில் ‘நெறி பிறழ்’

இளைஞர்கள் இயக்கும் பெரும்பாலான குறும்படங்கள் எளிதில் நாம் கடந்து போகும் தரத்தில்தான் இருக்கின்றன. ஆனால், தான் இயக்கிய முதல் குறும்படமே 2016-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் 26 வயது கார்த்திக் சிவா.

தனது திறமையை வெளிக்காட்ட, ‘நெறி பிறழ்’ என்ற குறும்படம் ஒன்றை இயக்கினார் கார்த்திக் சிவா. ஃபேஸ்புக் நண்பரான நெதர்லாந்தின் சுனில் குமார் இப்படத்தைத் தயாரிக்க உதவியிருக்கிறார்.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 31 குறும்படங்களில் ‘நெறி பிறழ்’ மட்டுமே கான் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.

படித்து முடித்தவுடன் இயக்குநராக ஆக ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சிவா. இந்த நெறி பிறழ் கதைக்கு முன்பு இவரது 3 குறும்பட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. இது இவரது 4-வது முயற்சி.

முழுக்க உண்மைச் சம்பவங்களை முன்வைத்து எழுதியிருக்கிறார். “மனதுக்கும் பிரக்ஞைக்கும் இடையிலான போராட்டம் தான் இப்படம்” என்கிறார் கார்த்திக் சிவா. நாடகம் ஒன்றில் மானஸ் சவாலி நடிப்பைப் பார்த்து, அவரையே ‘நெறி பிறழ்’ கதையின் நாயகன் வேடத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். சென்னையில் 5 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்.

கான் திரைப்பட விழாவுக்குத் தேர்வானவுடன் தாங்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே கிடையாது என்று பூரிக்கும் அவரால் அங்கே போக இயலவில்லை. அங்கு படம் பார்த்த அனைவருமே, இக்குறும்படத்தை அப்படியே படமாகப் பண்ணலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

“என்னுடைய குடும்பச் சூழல் அப்படி அமைந்துவிட்டது. குடும்பத்தினர் எப்படியாவது போய் வா என்றுதான் சொன்னார்கள். ஆனால், அதற்கு எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தயாரிப்பாளரும், நாயகனும் படக்குழு சார்பாக கான் திரைப்பட விழாவில் பங்கெடுத்துக்கொண்டார்கள்” என்கிறார் கார்த்திக்.

தற்போது மீண்டும் ஒரு குறும்படம் இயக்குவதற்கான பணியில் இருக்கும் அவர், உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டுத்தான் படம் இயக்க விரும்புகிறார்.

யாரிடம் உதவி இயக்குநராகச் சேர ஆசை என்று கேட்டதற்கு “எனக்கு ஷங்கர் சாரிடம் பணியாற்ற வேண்டும் என்பது கனவு. தற்போது இருக்கும் முன்னணி இளம் இயக்குநர்களிடமும் பணியாற்ற வேண்டும்” என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார் கார்த்திக் சிவா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x