Published : 06 Jan 2017 11:28 AM
Last Updated : 06 Jan 2017 11:28 AM

காதல் வழிச் சாலை 16: காதலும் கடந்து போகும்

குழப்பவாதிகளிடம் மாட்டிக்கொண்டு காதல் படும் பாடு இருக்கிறதே... கொடுமையிலும் கொடுமை. இந்த மின்னஞ்சலைப் பாருங்கள்.

“எனக்கு 23 வயது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. என் திருமணத்துக்குச் சொந்தக்காரப் பையன் ஒருவரை வீட்டில் ஆலோசித்தார்கள். என்னிடம் கேட்டபோது உங்கள் இஷ்டம் என்று சொல்லி விட்டேன். பின்னர் அவர் ஆள் எப்படி என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சோஷியல் மீடியா வழியாகப் பழகினேன். தான் காதல் தோல்வி அடைந்தவன் என்று ஆரம்பித்துத் தன் கதையை எல்லாம் சொன்னதும் எனக்கும் அவரைப் பிடித்துப்போய்விட்டது.

அவரோ, “உன்னை என்னால் காதலியாகவோ மனைவியாகவோ நினைக்க முடியாது. நாம் நண்பர்களாக மட்டும் பழகலாம்” என்றார். ஆனால், “என்னை உனக்குப் பிடிச்சிருக்குனு சொல்றீயே எதனால என்று சொல்ல முடியுமா” என்று கேட்பார். இவற்றால் பிடிக்கும் என்று சில காரணங்களைச் சொல்வேன். ஆனால், என்னைப் பிடிக்குதா இல்லையா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இருக்காது. அப்படி இப்படி என்று சண்டை வந்துவிடும் கொஞ்ச நாள் பேசாமல் இருப்பார். திடீரென்று வந்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்பார். ஏன் என்று கேட்டாலும் பதில் இருக்காது.

பிறகு அவரே, “இல்லப்பா… நமக்கு செட் ஆகாது. உனக்கு மெச்சூரிடி கம்மியா இருக்கு. நானும் உனக்கு நல்ல கணவனா இருப்பேன்னு சொல்ல முடியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். மீண்டும் சண்டை, சமாதானம், திருமணப் பேச்சு என்று தொடரும். வெறுத்துப்போய், “ஏன் இப்படி குழப்பறீங்க?” என்று கேட்டால், “இப்பவும் நீ என்னை காதலிச்சுட்டு இருக்கியான்னு செக் பண்ணிக்கத்தான் கேட்டேன்” என்பார். ஆரம்பத்தில் இவர் இப்படி கேட்க கேட்கத்தான் எனக்குத் திருமண சிந்தனையே வந்தது.

என்னைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டுப் போயிட்டா நிம்மதியா இருப்பேன். வந்து வந்து டிஸ்டர்ப் பண்றாரு. இப்ப என்னால மறக்க முடியலை. அன்புக்கு மதிப்பு இல்லையோன்னு தோணுது. இதையெல்லாம் தாண்டிப் பெற்றோருக்காக அவரை மணந்தால் என் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு. சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மனசை மாத்திக்கும் அவரை எப்படிச் சமாளிப்பது?” இப்படிப் புலம்பியிருந்தார் அந்தப் பெண்.

எப்படி இருக்கிறது பாருங்கள் அந்த இளைஞரின் காதல் விளையாட்டு! அவரது முதல் காதல் தோல்வியில் முடிந்ததற்கும் அவரது குழப்பமான அணுகுமுறையே காரணமாக இருக்கலாம் அல்லவா? எனில் தோல்வியிலிருந்து அவர் என்ன பாடம் கற்றுக்கொண்டார்? மீண்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்.

தோல்வியில் புலம்புவது ஃபேஷனா?

காதல் தோல்வி என்ற உணர்வை ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார். அறிந்தோ அறியாமலோ ஆபத்தான ஒரு ஃபேஷனாக இளைஞர்கள் மத்தியில் காதல் தோல்வி பரவிவருகிறது. கருணையைப் பெறவேண்டி ஓர் ஆயுதமாகவும், குடித்துவிட்டுப் புலம்புவதற்கான கருப்பொருளாகவும், வேலைக்குப் போகாமல் பிதற்றுவதற்கும், நண்பர்கள் மத்தியில் ஞானத்தந்தை போன்று அறிவுரை சொல்லவும் சிலர் காதல் தோல்வி வேடம் தரித்து பொன்னான இளமையைப் புலம்பலில் கழிக்கிறார்கள். “வண்டி ஓட்டத் தெரியாது, எடுத்தேன் விபத்து நேர்ந்துவிட்டது” என்பது போலத்தான் இதைப் பார்க்க வேண்டும். நமக்குப் புரிந்ததுகூட அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை என்று தோன்றலாம். எப்படிப் புரியும்? அவர்தான் காதலில் இருக்கிறாரே!

சரி, விஷயத்துக்கு வருவோம். அந்த இளைஞர் எங்கோ ஏமாந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பெண் ஏமாற்றினால் எல்லாப் பெண்களும் அப்படித்தான் செய்வார்களா?

மாதத்துக்கு ஒரு முறை காதல் வரும், பிறகு போய்விடுமா? கல்யாணம்வரை பேசப்படும் ஒரு காதல் உறவில் இந்த நிச்சயமற்ற தன்மை இருவர் மன நலனையும் பாதிக்கும்தானே?

என்னை விட்டால் போதும் என்று இந்தப் பெண் புலம்பும் அளவு வந்துவிட்ட பிறகு இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? அந்த இளைஞருடனான திருமண வாழ்வை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்கிறார். பிறகு ஏன் தயக்கம்?

அறிவின் வழிதான் சிறந்தது

சரி, அந்த இளைஞர் ஏதோ தீவிர குழப்பத்தில் இருக்கிறார் என்றால் அதற்குத் தகுந்த ஆலோசனையைப் பெறவேண்டியதுதானே? உளவியல் ஆலோசனை எடுத்துக்கொள்ள இருவருமே முன்வர வேண்டும். இப்படியான பல உறவுச் சிக்கல்களுக்கு நுண்மையான, வெளியில் தெரியாத உளவியல் கோளாறுகளும் காரணமாக இருக்கலாம். ஒருவேளை அது சரிசெய்யப்பட்டால் அந்த இளைஞர் தெளிவாகிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் அல்லவா? அதனால் யோசித்து முடிவெடுக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுவதைவிட அறிவின் வழியில் செல்வதே சிறந்தது.

விளையாட்டல்ல காதல்!

ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்லி அவரும் சம்மதம் சொன்னபிறகு சில இளைஞர்களுக்குச் சப்பென்று ஆகிவிடுகிறது. “இவள்தான் சரியென்று சொல்லிவிட்டாளே… நாம் வேறு ஏதாவது விளையாடுவோம்” என்று தெனாவெட்டாகிவிடுகிறார்கள். இதுவே அந்தப் பெண் மறுத்துவிட்டால் சூழும் சோகமென்ன? வளரும் தாடி என்ன? ஊதித்தள்ளும் சிகரெட்டுகள் என்ன? இதுதான் காதலா?

கல்யாணத்தைப் பற்றியே பேசாத ‘பாதுகாப்பான’ காதல்களும் நிறைய உண்டு. “டேய்… கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு அடிக்கடி போன் பண்ற வேலையெல்லாம் வேணாம். நான் அவருக்கு ‘சின்சியரா’ இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன்” என்கிறார் ஒரு காதலி. அருகிலிருக்கும் அந்தப் பையனோ “சேச்சே... நீ ஏதும் உணர்ச்சிவசப்பட்டு என் பேரை உளறாம இருந்தா சரி. என்ன இருந்தாலும் அவரு எனக்குப் பங்காளிதானே” என்கிறார். இது நான் காதால் கேட்ட உரையாடல். “காதலிக்கறவனையேதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லயே. காதல் வேறு, கல்யாணம் வேறு. ரெண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது” என்று ஆண் நண்பருக்கு உபதேசிக்கும் முதிர்ச்சியான இளம் பெண்களும் உண்டு.

ஆனால், இந்தப் பெண் அப்படியில்லையே… இவர் ரிவர்ஸில் அல்லவா ஆரம்பித்திருக்கிறார். இன்னாரை உனக்குப் பார்க்கலாம் என்று தன் வீட்டார் சொல்லிய பிறகுதான் அந்தப் பையனுடன் பழகவே ஆரம்பித்திருக்கிறார். தன்னையறியாமல் காதலில் விழுந்திருக்கிறார். தற்போது அந்தக் காதலின் பலனாக மனச்சோர்வும் அடைந்திருக்கிறார்.

இளைஞர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, போதைக்கு அடிமையாதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஒரு ‘ட்ரிக்கர்’(trigger) ஆகத்தான் காதல் தோல்வி என்றழைக்கப்படும் ஒரு விஷயம் இருக்கிறது. காதல் தோல்விக்காக வளர்த்த தாடியை ஷேவ் செய்ய நீங்கள் முடிவெடுப்பதற்குள் சந்திர மண்டலத்தில் ஏதேனும் மருத்துவக் கல்லூரி ஆரம்பித்துவிடப் போகிறார்கள். காதலும் கடந்து போகும் என்பதை உணருங்கள்.



எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x