Published : 11 Nov 2016 11:53 AM
Last Updated : 11 Nov 2016 11:53 AM
காதல் ஒரு நோயைப் போன்ற அறிகுறிகளைக் கொண்டது என்று சொன்னால் ரசிக்க முடியுமா? காதல் என்பது உள்ளத்தை மட்டுமல்ல உடலையும் கெடுத்து உங்களை நோயாளியாக்கிவிடும் என்று அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற அறிஞர்களே சொல்லியிருக்கிறார்கள்! ஆனால், அதே காதலை மாபெரும் உந்து சக்தியாகப் பார்ப்பவர்களும் உண்டு. மனித குலத் தோன்றுதலுடன் காதலைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் ஒன்று புரியும். அதுதான் இனப் பெருக்கம். நம் சந்ததிகளை உருவாக்குவதற்கான வசந்த அழைப்பாகத்தான் காதலைப் பார்க்கிறது அறிவியல்.
ஏன் மயங்குகிறாள் பெண்?
ஒரு பெண் ஒரு ஆணிடத்தில் எதைப் பார்த்து மயங்குகிறாள் என்று ஆய்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அவற்றில் ஒப்புக்கொள்ளும்படியான முடிவுகளும் சில இருக்கின்றன. ஒரு ஆண் தன்னைப் பார்த்துக்கொள்வான் என்பதைத் தாண்டி தன் குழந்தையை அவன் நன்றாக வளர்த்தெடுப்பான், வளர்த்தெடுக்கத் தனக்கும் உதவுவான் என்ற நம்பிக்கையே அவன் மீது வீசப்படும் காதல் பார்வையின் அடிநாதம் என்கிறது உளவியல். அதே சமயம் ஆணின் காதல் பார்வையின் பின்னணி வேறு. அந்தப் பெண் தனக்கு ஒரு வாரிசைத் தரக்கூடிய தன்மைகளைக் கொண்டவளாக இருக்கிறாளா என்ற கோணத்தில் இருக்கும் என்கின்றன ஆய்வுகள்.
இந்தச் சிந்தனைகள் அனைத்தும் ஆழ்மன அளவில் நமக்கே தெரியாமல் நடந்தேறும். மனித மனதின் அடிப்படை உள்ளுணர்வுகள் இப்படித்தான் இலைமறை காயாகப் புரிந்தும் புரியாமலும் இருக்கும்.
இனப் பெருக்கமே காதலின் அடிப்படை. காமத்தின் மீது இனிப்பு தடவப்பட்ட வடிவம்தான் காதலா அல்லது காமத்துக்கான நுழைவுச் சீட்டுதான் காதலா என்று ஆராய்ந்தால் நிறைய விஷயங்கள் உங்களுக்கே புரியும்.
பருவத்தின் எழுச்சி
தன் சுய அடையாளத்தைத் தேடியலையும் பதின் பருவத்தில் எதிர்ப் பாலினத்தின் மீது அதீத ஆர்வம் ஏற்படும். என்னதான் ஏழெட்டு நண்பர்கள் இருந்தாலும் ஒரு தோழியின் நெருக்கம்/அண்மை தரும் அனுபவமே வேறு. அதேபோல் எத்தனை தோழிகள் இருக்கிறார்கள் என்ற கணக்கைவிட ‘எனக்கும் ஒரு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறான்’ என்பதும் ‘அவன் என்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறான்’ என்பதும் விடலைப் பருவத்துக்கே உரித்தான மனநிலை.
தத்தமது எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் வடிகாலாக ஒரு துணையைத் தேடியலையும் மனசு அதன் மூலம் தனக்கு ஒரு அடையாளத்தைத் தேட விழைகிறது. எதிர்ப் பாலினத்துடன் இணைவது என்பது அடையாளத் தேடலின் முக்கியத் தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது.
கவிதை எழுதுமா காதல்?
காதலில் பெண்களைவிட ஆண்கள் எளிதில் விழுந்து விடுவது ஏன்? அதே நேரம் எளிதில் விழாமல் இருந்தாலும் காதலிக்கத் தொடங்கிவிட்டால் மிகத் தீவிரமாகப் போய்விடுகிறார்களே பெண்கள், அது ஏன்? காதலித்தாலே கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறார்களே அது ஏன்? ஆரம்பத்தில் நம்மை எழுச்சி நிலைக்கு இழுத்து, நடக்கும்போதே பறக்கிற மாதிரி உணரச் செய்த அந்த அதி தீவிர உணர்வு ஏன் காலப்போக்கில் குறைந்து போய்விடுகிறது?
காதல் என்பது ஒரு உன்னத உணர்வுதான். ஆனால், மனநலப் பிரச்சினைகள் சிலவற்றில் தோன்றும் அறிகுறிகளைப் போன்ற சில அறிகுறிகளைக் காதலும் கொண்டிருக்கிறது என்ற விந்தையான உண்மையைப் புரிந்துகொண்டால் மேற்சொன்ன கேள்விகளுக்கான விடைகளும் எளிதாகப் புரியும்.
ஒரே மாதிரியான சிந்தனைகள் திரும்பத் திரும்பத் தோன்றும். அப்படிச் சிந்திப்பது முட்டாள்த்தனம் என்று நம் மனசுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அப்படிச் செய்யாமல் இருக்க முடியாது. முதலில் எண்ண அளவில் இருந்த சுழற்சிச் சிந்தனைகள் பிறகு செயல் அளவிலும் தொடர ஆரம்பித்துவிடும். இதே மாதிரியான இயல்புகள் உளவியலில் ‘எண்ணச் சுழற்சி நோ’யிலும் (Obsessive Compulsive Disorder) தென்படும்.
நாடகமன்றோ நடக்குது
காதலிப்பவரின் மனநிலையுடன் இதை ஒப்பிட்டு நோக்குங்கள். எந்நேரமும் அவரது நினைவு. திரும்பத் திரும்ப அவரைப் பற்றியே பேசுவது, நினைப்பது, மின்னஞ்சலையும் வாட்ஸ் அப்பையும் மீண்டும் மீண்டும் செக் பண்ணுவது, வருகிறேன் என்று சொல்லியிருந்தாலும் பூங்காவில் அமர்ந்துகொண்டு ஆயிரம் முறை கடிகாரத்தைப் பார்ப்பது என இப்படிப் பல விஷயங்கள், எண்ணச் சுழற்சியால் பாதிக்கப்பட்டவரைப் போன்றே இருக்கும்.
கை நடுக்கம், இதயம் வேகமாகத் துடிப்பது, உள்ளங்கைகள் சில்லிட்டுப் போவது, நெற்றியில் லேசாகத் துளிர்க்கும் வியர்வை, எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்ற பதற்றம், ஒருவித அமைதியின்மை, உடலே கனமில்லாதது போல் உணர்ந்து ஒரு விதமான தள்ளாட்டம் இவையெல்லாம் மனப் பதற்ற நோயின் (Anxiety Disorder) அறிகுறிகளைப் போன்றே இருக்கும். உண்மையைச் சொல்லுங்கள். காதலிக்கும் நபர் சாலையிலோ கல்லூரியிலோ உங்களை நோக்கி நெருங்கி வர வர இப்படி ஆகவில்லையா உங்களுக்கு? குறைந்தபட்சம் நம் காதலைத் தெரிவிக்கும் த்ரில்லான காலகட்டத்தில் நிச்சயம் இப்படி உணர்ந்திருப்பீர்கள். இதே போலத்தான் பசியில்லாமல் போவது, தூக்கம் தொலைந்து போவது, எடை குறைந்து போவது, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது, நம்மை நமக்கே பிடிக்காமல் போவது, அவரைத் தவிர வேறு எந்த விஷயமும் மகிழ்ச்சி தராமல் போவது, முடிவில் அவன்/அவள் இல்லாத உலகமே வேண்டாம் என்று தம் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்படுவது என இவையெல்லாமே பார்ப்பதற்கு மிகத் தீவிரமான மனச்சோர்வு நோயின் (Major Depressive Disorder) அறிகுறிகளைப் போலவே இருக்கும்.
காதல் நமக்குள் எந்த வழியாக வேண்டுமானாலும் நுழைந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதன் ஆட்டம்பாட்டங்களுக்கு இயக்குநராக இருந்து வேதிப்பொருட்களின் உதவியுடன் நவரசங்களுடனான ஒரு விந்தை நாடகத்தை நடத்திக்காட்டுவது சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள நமது மூளைதான். அந்த நாடகம் எதுவென்று அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர், மனநல மருத்துவர். தொடர்புக்கு: drmohanv18@gmail.com
எல்லாமே பேசலாம்!
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்ககிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment