Published : 05 Aug 2016 12:27 PM
Last Updated : 05 Aug 2016 12:27 PM
இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரம், உலகின் மிக மகத்தான விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்ஸ் 2016, ரியோவில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கும். இனி வரும் வாரங்களில் அங்கு நடக்கும் முக்கியமான சாதனைகள், சர்ச்சைகள் ஆகியவற்றைத் தனது டைரியில் குறித்து வைத்துக்கொண்டு ரியோவிலிருந்து நமக்குத் தரவுள்ளார் ஒலிம்பியன். ஓவர் டூ ரியோ...!
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் ஒரு ரீவைண்ட்!
சென்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா செய்த சாதனைகளில் முக்கியமானது - 2008ம் ஆண்டு பீகிங் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையை (3) 'டபுள்' ஆக்கியது. ஆம், சென்ற ஒலிம்பிக்ஸில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6!
துப்பாக்கிச் சுடுதல் (விஜய் குமார், காகன் நரங்) மல்யுத்தம் (சுஷில் குமார், யோகேஷ்வர் தத்), பேட்மின்டன் (சாய்னா நேவால்) மற்றும் குத்துச் சண்டை (மேரி கோம்) ஆகிய போட்டிகள் மூலம்தான் இந்தச் சாதனை சாத்தியமாயிற்று.
இவர்கள் 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் பெற்று `போடியம் ஃபினிஷிங்' செய்தது, இந்தியர்களைத் தலைநிமிர வைத்தது. கூடவே, இவை அனைத்தும் தனிநபர் போட்டிகளில் பெற்ற வெற்றி என்பது கூடுதல் பெருமையாகவும் அமைந்தது!
2016 ’ஸ்ஒர்போர்டு’ எப்படி?
தீபிகா குமாரி (வில் அம்பு), சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஜுவாலா கட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பா (பேட்மின்டன்), ஷிவ் தபா, மனோஜ் கிருஷ்ணன் மற்றும் விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை), தீபா கர்மகார் (ஜிம்னாஸ்டிக்ஸ்), அபினவ் பிந்த்ரா, காகன் நரங் மற்றும் மானவ்ஜீத் எஸ்.சந்து (துப்பாக்கிச் சுடுதல்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), ரோஹன் போபன்னா, லியாண்டர் பயஸ் மற்றும் சானியா மிர்சா (டென்னிஸ்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்), சதீஷ் கே.சிவலிங்கம் (பளுதூக்குதல்) உள்ளிட்ட 8 விளையாட்டுகளில் சில விளையாட்டுகள் தவிர்த்து இதர விளையாட்டுகளில் புதியவர்களும், அனுபவம் மிக்கவர்களும் உள்ளனர். இவர்களில் பலர் நல்ல `ஃபார்மில்' இருப்பதால் இந்தக் கூட்டத்திலிருந்து நிச்சயமாக நான்கு பதக்கங்களாவது உறுதி! அதில் இரண்டு தங்கமாவது நாம் எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு நான்கு வருடமும் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளே விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பெஷல் என்றால், ஒலிம்பிக் கிராமங்கள் கூடுதல் ஸ்பெஷல்!
`நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை' என்று அழைக்கப்படும் பியர் தெகுபர்த்ததான் இந்த 'ஒலிம்பிக் கிராமம்' எனும் கான்செப்ட்டை உருவாக்கியவர். தங்கள் நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்காகக் கலந்து கொள்ள வருகிறவர்கள், தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் இடம் தேடி அலையக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில்தான் குபர்த்த இந்த கிராமங்களை உருவாக்கினார்.
ஆனால், காலம் செல்லச் செல்ல, இந்தக் கிராமங்கள், விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரி ஆயின என்று சொன்னால் அது மிகையில்லை. வகை வகையான உணவுகள், சினிமா, காமக் களியாட்ட விடுதிகள், ஊர் சுற்றக் கட்டணமில்லாப் போக்குவரத்து வசதிகள், ஒலிம்பிக் நினைவாக ஊருக்கு வாங்கிச் செல்ல விதவிதமான நினைவுப் பரிசுகள்... என அந்தக் கிராமமே களைகட்டும்.
அடடா..மெடல் போச்சே!
இந்த ஆண்டு சுஷில் குமார், மேரி கோம், மகேஷ் பூபதி (டென்னிஸ்), விஜேந்தர் சிங் (குத்துச் சண்டை தொழில்முறை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதால் ஒலிம்பிக் வாய்ப்புப் பெற முடியாமல் போனது) போன்ற முக்கியமான வீரர்கள் கலந்துகொள்ள முடியாமல் போனது, நமக்கான மெடல் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
சிறக்க வைக்கும் ஒலிம்பிக் கிராமம்
ஒலிம்பிக் போட்டிகளில் புதிதாகப் பங்கேற்கும் வீரர்கள், தங்கள் ரோல்மாடல்களைச் சந்திக்கும் இடமே 'டைனிங் ஹால்' தான். பதக்கம் வாங்கிய கையோடு எந்த ஒரு அலட்டலும் இல்லாமல், தன் கைகளில் தட்டேந்திக் கொண்டு, உணவு வகைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு, ஒரு ஓரத்தில் அமர்ந்து சாப்பிடும் தங்கள் 'ஹீரோ'க்களுடன், ஒரு ஹலோ, ஒரு கைகுலுக்கல், ஒரு செல்ஃபி ஆகியவற்றுக்காகப் பல புதியவர்கள் போட்டி போடுவார்கள். அந்த ரோல்மாடல்களும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் கைகுலுக்குவது, வாழ்த்து சொல்வது, ஒளிப்படங்களுக்கு ஒத்துழைப்பது என `டவுன் டு எர்த்' ஆக நடந்துகொள்வார்கள். விளையாட்டு வீரர்களின் இந்தக் கேளிக்கை அம்சங்களைப் பற்றி தனியே ஒரு புத்தகமாக எழுதலாம்.
நான்கு வருடங்கள் தங்கள் உடலை வருத்தி இந்தப் போட்டிகளுக்குத் தயாராவார்கள். ஒன்றிரண்டு தின தயாரிப்புகள், நான்கைந்து மணி நேரப் போட்டிகள், ஏழெட்டு நிமிடங்களில் பரிசளிப்பு விழாக்கள் ஆகியவை முடிந்தவுடன், ஒலிம்பிக் கிராமத்தை அணு அணுவாக அனுபவிக்கத் துடிப்பார்கள் வீரர்கள். அந்த நினைவு அவர்களின் ஆயுளுக்கும் போதுமானதாக இருக்கும். விளையாட்டு என்பதே அந்த சந்தோஷத்துக் காகத்தானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT