Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM
உணவையும் ஊரையும் பிரித்துப் பார்க்க முடியாத மரபு நம்முடையது. வழிவழியாகச் செய்யப்படும் உணவு வகைகளே அதற்குக் காரணம். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காடு, சுவைமிகு உணவுகள் பலவற்றுக்குச் சொந்தமானது. அதுவும் மக்கன் பேடா என்ற தனிச்சுவை இனிப்பைத் தமிழ்நாட்டுக்குத் தந்த பெருமையும் ஆற்காட்டுக்கு உண்டு. பரபரப்பான காய்கறி வர்த்தகத்துக்கு நடுவிலும் இனிப்புக் கடைகளும் களை கட்டுகின்றன. ஆற்காட்டைச் சுற்றிப் பல கடைகளில் மக்கன் பேடா விற்பனை செய்யப்பட்டாலும் அதன் பிரத்யேகச் சுவை தங்களிடம் இருந்துதான் உருவானது என்கிறார் செட்டியார் மிட்டாய் கடை உரிமையாளர் சுந்தரம்.
நவாபுகளின் மக்கன் பேடா
இந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கும் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர் இவர். சுந்தரத்தின் மூதாதையர்களுக்கும் இனிப்புகள் செய்வதுதான் தொழில். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன் நவாபுகளின் ஆட்சிக் காலத்தில்தான் மக்கன் பேடா ஆற்காட்டுக்குள் நுழைந்து இருக்கிறது. நவாபுகள் அளித்த விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சுந்தரத்தின் மூதாதையருக்குக் கிடைத்திருக்கிறது. அந்த விருந்தில் மக்கன் பேடாவும் பரிமாறப்பட்டுள்ளது. அதுவரை அதிரசம் போன்ற உள்ளூர் இனிப்பு வகைகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு வித்தியாசமான சுவையில் இருந்த அந்த இனிப்பு பிடித்துப் போனது. உடனே அதன் செய்முறையைத் தெரிந்துகொண்டு அவர்களே செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கன் பேடாவின் அலாதியான சுவை அனைவருக்கும் பிடித்துப் போக, ஆற்காட்டின் அடையாளங்களுள் ஒன்றாகவே மக்கன் பேடா மாறிவிட்டது.
“இருநூறு வருஷத்துக்கு முன்னால் மைதாவில் செய்த இனிப்புகள் நமக்குப் புதிது. மக்கன் பேடா, மைதா மாவில் செய்யப்படும் இனிப்புதான். மைதா, பால்கோவா, தயிர் சேர்த்துப் பிசைந்து, எண்ணெயில் பொரித்தெடுத்து, அவற்றைச் சர்க்கரைப் பாகில் ஊறவிடுவார்கள். இதுதான் நவாபுகள் நமக்குச் சொல்லித் தந்த மக்கன் பேடா செய்முறை. ஆனால் அடுத்து வந்த தலைமுறையினர், சுவைக்காகக் கூடுதலாகச் சிலவற்றைச் சேர்த்துவிட்டனர். முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், அக்ரூட், சாரப்பருப்பு, வெள்ளரி விதை,பேரீச்சம்பழம் உள்ளிட்ட பதினோரு வகை உலர்பழங்களை பேடாவுக்குள் வைத்துப் பொரித்தெடுத் தார்கள். வாசனைக்காக ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்தார்கள். எல்லாம் ஒன்று சேர்ந்து மக்கன் பேடாவுக்கு மகத்தானச் சுவையைத் தந்துவிட்டன” என்று மக்கன் பேடாவின் வரலாறு சொல்கிறார் சுந்தரம்.
பெரியாரைக் கவர்ந்த பண்டம்
தந்தை பெரியார், 1973ஆம் ஆண்டு கட்சிக் கூட்டத்துக்காக ஆற்காடு வந்திருக்கிறார். அப்போது மார்க்கெட் பகுதியில் கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது. செட்டியார் மிட்டாய்க் கடையைப் பெரியார் கடந்து சென்றார். அப்போது அவருடன் வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் வீராசாமி, பெரியாரிடம், “நீங்கள் விரும்பிச் சுவைக்கிற மக்கன் பேடா இங்குதான் தயாராகிறது” என்று சொன்னார். உடனே பெரியாரும் ஆர்வமாக மக்கன் பேடாவின் செய்முறை குறித்துப் பேசியிருக்கிறார்.
திரைத்துறை பிரபலங்களில் பலருக்கும் மக்கன் பேடா மீது பிரியம் உண்டு. பாலையா, தங்கவேலு, என்.எஸ். கிருஷ்ணன், மனோகர் போன்றவர்கள் மக்கன் பேடா ரசிகர்களில் சிலர்.
“வாயில் போட்டதுமே வழுக்கிச் செல்லும் மிருதுத்தன்மைதான் மக்கன் பேடாவின் தனித்தன்மை. இனிப்பே பிடிக்காதவர்களைக்கூட தன் ரசிகர்களாக்கிவிடும் அளவுக்குச் சுவையில் சிறந்தது மக்கன் பேடா” என்று இனிப்பின் புகழ்பாடுகிறார் சுந்தரம். வேலூர் பக்கம் சென்றால் மக்கன் பேடாவையும் சுவைத்து விட்டுத் திரும்புங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT