Last Updated : 22 Mar, 2014 12:00 AM

 

Published : 22 Mar 2014 12:00 AM
Last Updated : 22 Mar 2014 12:00 AM

கிராமமாக மாறிய நகரம்

தேர்த் திருவிழாவாக இருந்தாலும் சரி, கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி, அது நிறைவடையும் வரையில் ஊரே கொண்டாட்டத்தில் திளைக்கும். பொதுவான ஓர் இடத்தில் வரிசையாகக் கடைகள், வாங்கி மகிழ விதவிதமான பொருட்கள், ருசி பார்க்கப் பல ஊர் பலகாரங்கள், குழந்தைகளைக் குதூகலமாக்க விளையாட்டுப் பொருட்கள், விளையாடி மகிழ ராட்டினங்கள் என ஊரே அமர்க்களப்படும். சாதாரணக் கிராமத்தில் இருந்து பெரிய ஊர்கள் வரை பங்குனி, சித்திரை மாதங்களில் இந்தக் காட்சிகளைக் காணலாம். ஆனால், கான்கிரீட் கோபுரங்களும், உயர்மட்டப் பாலங்களும், வண்ணமயமான ஷாப்பிங் மால்களும் நிறைந்த சென்னையில் இதெல்லாம் சாத்தியமா? சாத்தியம்தான் என்பதைப் பல ஆண்டுகளாக நிரூபித்துவருகிறது மயிலாப்பூரில் பங்குனித் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் அறுபத்துமூவர் விழா.

பங்குனித் திருவிழாவின் சிறப்பம்சமாக நடைபெறும் அறுபத்துமூவர் உலா அரங்கேறும் நாளன்று மயிலாப்பூரின் நான்கு மாட வீதிகளிலும் உற்சாகம் கொப்பளிக்க மக்கள் கூடுகிறார்கள். எங்குப் பார்த்தாலும் அன்னதானம். திரும்பும் இடமெல்லாம் நீர்மோர், குளிர்பானங்கள் வினியோகம். ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அன்னதானத்தில் பங்கேற்பு எனச் சமதர்ம விழாவாக நடந்து வருகிறது இந்த விழா.

அறுபத்து மூவர் உலா நடைபெறும் அன்றும் அதற்கு அடுத்த நாளும் மாடவீதிகளில் அமைக்கப்படும் கடைகள் கிராமங்களில் நடைபெறும் விழாக்களை ஞாபகப்படுத்துகின்றன. அமைக்கப்படும் கடைகளில் பிரதானமாக விற்கப்படுவது மண்பாண்டங்கள்தான். சென்னையைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் இருந்து வந்து, இங்கு 3 நாட்களுக்குக் கடை அமைக்கிறார்கள் குயவர்கள். திருவிழாவுக்கு வரும் மக்களும் மண்பாண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.

மண்பாண்டக் கடை அமைத்திருந்த திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த பாளையத்தான் இப்படிக் கூறினார்: “நான் 13 ஆண்டுகளாக இங்கு வந்து கடை போடுகிறேன். நகரங்களில் மண்பாண்டங்களையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையில்லை. பங்குனி, சித்திரை மாதங்களில் எங்க ஊர் அருகே நடைபெறும் திருவிழாக்களுக்குச் சென்று கடை போடுவேன். ஆனால், இங்கு விற்பனையாகும் அளவுக்கு மற்ற இடங்களில் மண் பாண்டங்கள் விற்பனையாவதில்லை” என்று மயிலாப்பூர் விழாவின் பெருமையைப் பேசினார்.

பிளாஸ்டிக் விசிறிகள் இன்று வீடுகளை ஆக்கிரமித்துவிட்ட நிலையில் தென்ன மட்டையில் செய்யப்படும் விசிறிகளின் விற்பனையும் அமோகமாகவே நடைபெற்றது. “தென்னை விசிறியைத் தண்ணீரில் நனைத்து விசிறிப் பாருங்க, ஏ.சி.கூடத் தோற்றுவிடும்” என்று விசிறி வாங்கியபடியே தன் அனுபவங்களைக் கூறினார் மந்தைவெளியைச் சேர்ந்த ராகவன். முறம், மூங்கில் கூடை என இயற்கையோடு இயைந்த பொருட்கள் மயிலாப்பூர் மாட வீதிகளை அலங்கரித்திருந்தன.

சிறுவர்கள் விளையாடி மகிழக் குதிரை ராட்டினங்கள் ஆங்காங்கே ரிங்... ரிங்… எனச் சத்தம் எழுப்பியபடி சுற்றிக்கொண்டிருந்தன. சென்னை மெரினா பகுதியில் குதிரை ராட்டினம் வைத்துப் பிழைப்பு நடத்திவரும் ராபர்ட், தெற்கு மாட வீதியில் ராட்டினம் வைத்திருந்தார். சிறுவர்கள் உற்சாகத்தோடு குதிரைச் சவாரி செய்துகொண்டிருந்தனர்.

மூங்கில் கழியில் ஜவ்வு மிட்டாயைச் சுற்றிக்கொண்டு உச்சியில் பொம்மையுடன் விசில் ஊதியபடி தெருக்களில் வந்து சிறுவர்களை ஈர்க்கும் வியாபாரிகளைக் காணுவதே இன்று அரிதாகிவிட்டது. அறுபத்து மூவர் உலாவுக்குச் சென்றால் பால்யப் பருவத்தில் பார்த்து மகிழ்ந்தவர்களைப் பார்க்கும் அனுபவமும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. சென்னை சிறுவர்களுக்கு இந்த அனுபவம் புதுமையாகத் தெரிந்தது. மிட்டாய் வாட்சுகளைக் கையில் சுற்றியதும் பல சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இதேபோல பொம்மைகள், பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் சிறார்களைக் குறி வைத்து விற்பனைக்குக் குவிக்கப்பட்டிருந்தது.

ஆண்களைவிடப் பெண்கள், குழந்தைகள் இந்த விழாவுக்கு அதிகம் வந்திருந்ததைக் கவனிக்க முடிந்தது. அதற்கு ஏற்பப் பெண்களைக் குறி வைத்து வளையல்கள், தோடுகள், செயின்கள், பொட்டுகள், புடவைகள், வீட்டு அலமாரிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் கடைகளில் களைகட்டியிருந்தன மாட வீதிகள். எதை எடுப்பது, எதை விட்டுச் செல்வது என யோசிக்கும் அளவுக்கு எண்ணற்ற பொருட்கள் இந்த மூன்று நாட்களுக்குக் கொண்டுவரப்படுகின்றன.

திருவிழா என்றால் இனிப்புக் கடைகளுக்குப் பஞ்சம் இருக்காது அல்லவா? அதை அறுபத்து மூவர் விழாவிலும் பார்க்க முடிந்தது. நகர்ப்புறங்களில் பீட்சா, பர்க்கர், டின் உணவுகள் சாப்பிட்டுப் பழக்கப்பட்டுவிட்ட குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் பாரம்பரிய இனிப்பு உணவுகளைச் சாப்பிட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். குறிப்பாக இலந்தை வடை, பால்பன், தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேங்காய் பர்பி, கடலை மிட்டாய், ரவா உருண்டை என எண்ணற்ற மிட்டாய் வியாபாரிகள் வீதிகளில் கூவிக் கூவி விற்பனை செய்துகொண்டிருந்தனர். ஐந்து ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரையில் பொருட்கள் கிடைப்பது கவனிக்கத்தக்க விஷயம்.

சென்னையில் உள்ள வெளியூர்க்காரர்கள் தம் பால்ய காலத்தை உணரவும், அந்த அனுபவங்களைத் தம் வாரிசுகளிடம் எடுத்துக் கூறவும் இந்த விழா ஒரு வாய்ப்பாக அமையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x